(வ. வேணுகோபாலன் அவர்களின் ‘மருதியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

17. விபரீதச் செய்தி

     அன்று இரவிலேயே நல்லடிக்கோனின் ஒற்றர் இருவரும், காவிரிப்பூம்பட்டினத்தை அடைந்தார்கள். அந்நகரின் எல்லைப்புறத்திலே, இரவு தங்கியிருந்துவிட்டு விடியற்போதிலே நகருக்குள் புகுந்தனர்.

     நாடறிந் த ஒற்றர்களாகையால், அவ்விருவரும் எளிதில் தடையில்லாமல் நகருக்குள் புகுந்து சென்றார்கள். அரச காரியமாக, உறையூரிலிருந்து காவிரிப்பட்டினத்திற்கு அவ்விருவரும் அடிக்கடி வந்து சென்றவர்களே. காவிரிப்பட்டினத்தில் அவர்கள் அறியாத இடமே இல்லை. இடம் அறிந்து காலம் அறிந்து, மனிதரின் தகுதியறிந்து பழகி உண்மை அறியும் ஒற்றர்கள் என்று புகழ் பெற்றவர்களின் கூட்டத்தைச் சார்ந்தவர்களே அவ்விருவரும். பல நூறு காதங்களுக்கு அப்பாலிருக்கும் நாடு நகரங்களில் நிகழும் சம்பவங்களையெல்லாம், மிக எளிதில் அவ்வப்போது அறிந்து கொள்ளும் திறமை வாய்ந்தவர்கள். ஆகவே, ஒற்றர் இருவரின் திறமையைப்பற்றி அளவிடவேண்டுமா, என்ன?

     தமிழகத்தின் பல்வேறு நாடு நகரங்களில் ஆட்சி புரியும் வேந்தர்கள், முடிவேந்தர்கள், சிற்றரசர்கள், வள்ளல்கள் - யாவரிலும் மேம்பட்டவகை - யாவருக்கும் தலைவகை தனக்கே உரிய வெற்றிப் புகழோடு, தெய்வத்தை ஏவல் கொள்ளும் திறமையுடன் சோழநாட்டை ஆட்சிபுரியும் வேந்தன் கரிகாலனின் அரண்மனையை நோக்கி இருவரும் சென்றார்கள். பகை நாட்டம் ஒட்டாதபடி பாதுகாவல் செய்யும் கடுந்திறல் வீரர்களுக்கெல்லாம், தகுந்த முறையில் வார்த்தைகள் அளித்து விட்டு, வீறுடன் கரிகாலனின் அரண்மனைக்குள் புகுந்தார்கள். இருவரும் அரண்மனைக்குள் புகுந்ததும் வெளி முற்றத்திலே குதிரைகளை நிறுத்திவிட்டுச் சித்திர மண்டபத்து வாயிலை அடைந்து நின்றார்கள்.

     அவர்கள் சென்ற தருணம், காலைப்போது ஆதலின் மங்கள வாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருந்தன. வீணையின் இன்னரம் பொலியும், மகளிரின் கண்டத்தொனியும் மாகதர் துதிப்பாடலும், தண்ணுமையின் பெரு முழக்கமும், குழலின் மெல்லோசையும். ஆடரங்கில், தாளம் கேட்ப, நடமாடும் பெண்ணனங்குகளின் கால் சிலம்புகளின் இனிய நாதமும் மண்டபமெங்கும் எதிரொலித்தன. சாமகீத வேதகோஷணை ஒருபுறம் கம்பீரமாகக் கேட்ட வண்ணம் இருந்தது. ஆம்! பலவித இன்பத்தொனிகளைக் கேட்ட பிரமிப்பிலே இரு ஒற்றர்களும் அசையாமல் அம்மண்டபத்து வாயிலில் நின்று விட்டார்கள்.

     கண் கண்ட இடமெல்லாம் வைத்த கண் பெயர்க்க முடியாமல், சிற்பமும், சித்திரமும், அலங்காரமும் வசீகரித்தன. இடங்கள் மட்டுமல்ல! - இடங்களிலே நடமாடும் யாவரும், அலங்கார புருஷர்களாகவும் - அலங்கார நங்கையராகவும் காணப்பட்டனர். தமிழகத்தின் நாகரிகச் செவ்வியை, கரிகாலனின் ஆட்சியிலே - அந்நாளிலேதான் காண முடிந்தது. அதற்கு முன்னரும் இல்லை - பின்னரும் இல்லை. உலகம் தோன்றிய காலத்திலே, வீரன் முதன் முதல் தோன்றிய இடம் தமிழ்நாடு தான் - அதேபோல நாகரிகம் உலகில் முளைத்து உயர்நிலை அடையத் தொடங்கிய இடமும் காவிரிப்பட்டினமே தான் என்று தயக்கமின்றிச் சொல்லலாம். கரிகாற் பெருவளத்தானின் ஆட்சியிலேதான், காவிரிப்பட்டினம் அழகு பெற்றது; ஒளி பெற்றது; ‘உலகிலே ஒரு நகர்’ என்று சொல்லும்படியாக அந்நகரை நிருமாணித்தான். ஆம்! அந்நகரைப் புகழ வேண்டுமானால் அவனையே புகழ்ந்துவிட்டால் போதுமன்றோ!

     சித்திர மண்டபத்தில் நாள்தோறும் காலையில் தங்கியிருப்பது கரிகாலனுக்கு வழக்கமாக இருந்தது; அம் மண்டபத்திலேதான், அரச காரியங்களையும், அந்தரங்கக் காரியங்களையும் அவன் கவனிப்பான். அவ்வுண்மையை அறிந்தவர்களாகிய ஒற்றர் இருவரும், அம்மண்டபத்தின் வாயிலை அடைந்து நின்றார்கள். அவர்கள் நின்ற சிறிது. நாழிகையில், வாயில் காவலன், அவ்விடம் வந்தான். வந்தவுடன், இருவரையும் அமைதியாகப் பார்த்து விட்டுப் பேசத் தொடங்கினான்.

     “எங்கிருந்து வருகிறீர்கள்?...”

     “உறையூர் அரண்மனையிலிருந்து வருகிறோம்... மன்னரைப் பார்க்க வேண்டும்.”

     “இங்கேயே இருங்கள்!... கட்டளை பெற்று வருகிறேன்” என்று கூறிவிட்டு வாயில் காவலன் மண்டபத்துக்குள் புகுந்தான்.

     சித்திர மண்டபத்தில், தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள், மந்திரியர், சேனாதிபதிகள், மண்டலாதிபதிகள், யவன தேசத்து அதிகாரிகள், ஆரிய மகுட. வர்த்தனர்கள் - ஆகிய பலரும் வரிசையாக ஆசனங்களில் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு நடுவே கரிகாலன், செஞ்சூரியன்போல், ஒரு சித்திரக் கட்டிலில், வெண்கொற்றக் குடையின் கீழ் அமர்ந்திருந்தான். அவனுக்கு அருகில் புலிமுகக் கட்டிலில் அவன் அம்மான் இரும்பிடர்த்தலையார் இருந்தார். அவர் முகத்தைப் பார்த்தபடியே நகை செய்துகொண்டு பேசியிருந்தான் கரிகாலன். அங்கே கூடியிருந்த யாவரும் கரிகாலனின் பேச்சை உற்றுக் கேட்டுக் கொண்டபடியே வியப்புடன் இருந்தார்கள். அதே தருணம் கரிகாலனின் ஒற்றறி வீரன் ஒருவன் அவ்விடம் முன்வந்து தலைவணங்கி வாய் புதைத்து நின்றான்.

     அவனை ஏறிட்டுப் பார்த்து, “செய்தி ஏதேனும் பிரதானமானது உண்டா?” என்று இரும்பிடர்த் தலையார் வினவினார்.

     “உண்டு! சேர நாட்டில், சேரவேந்தரின் புலவர் பொய்கையார், தாமாகவே உயிரைப் போக்கிக் கொண்டாராம்...” என்று அவ்வீரன் மொழிந்தான். திடுக்கிட்டார் இரும்பிடர்த் தலையார்.

     “என்ன? பொய்கையார் இறந்தாரா? ஆ! கணைக்காலிரும்பொறையின் பிரிவுக்கு ஆற்றாமல் இறந்துவிட்டார்! கரிகாலா! கேட்டாயா செய்தியை!...”

     “புலவரே, பொய்கையார் புண்ணிய வாழ்வு பெற்றார்! அவர் முயற்சி பயனளிக்கவில்லை. இருப்பதை விட இறப்பதே மேலென்று...” என்று கரிகாலன் கூறினான்.

     “கருவூரில், சேனாதிபதியர், கங்கன், கட்டி, புன்றுறை மூவரும் ஆளுகையால், கலகம் உண்டாகியிருக்கிறது. உறையூர் அரசன் நல்லடிக்கோன், அந்தச் சேனாபதிகளுடன் ஒற்றுமை அடைந்துவிட்டான்; உறையூர்ப் பங்குனி உத்தர விழாவை, கருவூரில் சேர சேனாதிபதிகள் நடத்தி விட்டார்கள். கருவூர் உள்ளி விழாவை உறையூரில் நாளையே நடத்தப் போகிறார்கள்” என்று கூறிவிட்டுப் பின்னே நடக்கத் தொடங்கினான் அவன்.

     “அடே_பாண்டிய நாட்டுச் செய்தி... ஒன்றும் புதியதாக இல்லையே!...” என்றான் கரிகாலன்.

     “இல்லை...” என்று சொல்லிவிட்டு ஒற்றறி வீரன் பின்னே நடந்து மறைந்தான்.

     “புலவரே! உறையூரும் கருவூரும் சீரழிந்துவிட்ட தென்று எண்ணுகிறேன்: மண்டலாதிபதிகளான சேனாதிபதிகளின் கீழ் மக்கள் அடங்கவில்லை போலிருக்கிறது: பாவம்! செங்கணான் பழிக்கு அஞ்சி உயிர் விட்டான்! தெய்வத் தொண்டனான அவனுக்கு இப்படி வாழ்வு இற்றுவிட்டதே! தெய்வவன்மை அவனுக்கு உண்டு; இல்லையேல். சேரனை வெற்றி கொள்ள முடியாது அவனால்...” என்று பேசினான் கரிகாலன்.

     “அப்படி என்ன தெய்வ உதவி அவனுக்கு?” என்றார் இரும்பிடர்த்தலையார்.

     “நான் கச்சிக் காமக்கோட்டத்தில் சாத்தனாரிடம் ‘செண்டு’ பெற்றதுபோல், செங்கணானும், திருநறையூர் நம்பிப் பெருமானிடம், ‘தெய்வ வாள்’ ஒன்று பெற்றிருந்தான்!... அதன் வலி கொண்டு தான் பகைவரைத் துரத்தியடித்தான்!...” என்று கூறுகையில் வாயில் காவலன் முன்வந்து நின்றான் தலைவணங்கி.

     “உறையூரிலிருந்து இரண்டு ஒற்றர்கள் வந்திருக்கிறார்கள். கட்டளை!” என்றான் அவன்.

     “உள்ளே வர விடுக!” என்றார் இரும்பிடர்த் தலையார். வாயில் காவலன் விரைவாகச் சென்று ஒற்றர் இருவரையும் உள்ளே புகவிட்டான்.

     சித்திர மண்டபத்துக்குள் ஒற்றர் இருவரும் புகுந்தார்கள். கரிகாலனுக்கு முன் சென்றவுடன் கைகுவித்துத் தலை வணங்கினார்கள். இரும்பிடர்த்தலையார் மிகுந்த யோசனையோடு அவ்விருவரையும் ஏறிட்டுப் பார்த்தார்.

     “அடியோம், உறையூரிலிருந்து வருகிறோம்!” என்று கரிகாலனை நோக்கிப் பணிந்தார்கள்.

     “என்ன காரியமாக வந்தீர்கள்?” என்றான் கரிகாலன்.

     “உறையூரிலிருக்கும் நாட்டிய மங்கை மருதியின் ஓலையை எடுத்து வந்திருக்கிறோம்; இங்கே மன்னரின் அரண்மனையில் இருக்கும் அத்தி என்ற சேர சேனாபதிக்குக் கொடுக்க வேண்டிய ஓலை அது” என்றார்கள்.

     கரிகாலன் திடுக்கிட்டான். இரும்பிடர்த்தலையார், இருந்த இடத்தைவிட்டு எழுந்தார். ஒற்றர்களின் முகத்தை உற்றுப் பார்த்தார்.

     “யாருடைய ஓலை?...” என்று கேட்டுக் கொண்டே இரும்பிடர்த்தலையார் ஒற்றரிடம் வந்தார்.

     “மருதி என்ற நாட்டிய மங்கை எழுதிய ஓலை... சேர சேனாபதி அத்திக்கு...”

     “ஓலையைக் கொடு” என்று கை நீட்டினார் புலவர். கரிகாலன் இரு புருவங்களும் ஏறிட்டு நிற்க தீவிர யோசனையிலே ஈடுபட்டிருந்தான். சபையிலிருந்த யாவரும் ஒருங்கே, கரிகாலனையும், ஒற்றர்களையும் பார்த்தவண்ணம் இருந்தார்கள். ஆம்! அத்தி, மருதி என்ற பெயர்களைக் கேட்டவுடன் சபையோர் யாவரும் திகைப்படைந்ததில் வியப்பு என்ன? நாடறிந்த நர்த்தன கலா நிதிகள் அல்லவா, மருதியும் அத்தியும்! அல்லாமல் கரிகாலனின் செல்வக் குமரிக்கு, அவன் நாட்டியம் பயில்விக்கும் விவரம், அவர்கள் அறிந்ததே; இந் நிலையில் ஒற்றர் கொணர்ந்த செய்தியில் உண்மையை அறிய அவர்கள் ஆவல் கொண்டதில் ஆச்சரியம் இல்லை அல்லவா?

     புலவர் இரும்பிடர்த்தலையார் ‘ஓலையைக் கொடு’ என்று கூறிய பின்னரும், அவ் ஒற்றர் கொடுக்கவில்லை. தயங்கினார்கள். நல்லடிக்கோனின் கட்டளைப்படியல்லவா செய்ய வேண்டும்!

     “ஐயா, பொறுக்கவேண்டும் அடியேங்களை; ஓலையை அத்தியிடமே கொடுக்கும்படியாக...” என்று கூறுகையில் கரிகாலன் கோபம் மிக்கவனாய் அரசு கட்டிலில் இருந்தபடியே, “அடே, ஓலையை விரைவில் கொடுங்கள்! இல்லையேல் உங்கள் இருவர் தலைகளும் நிலத்தில் உருளும்” என்றான் கரிகாலன்.

     “மன்னிக்க வேண்டும்! இதோ கொடுத்து விட்டோம்; ஆனால், எங்கள் இளவரசர் நல்லடிக்கோன் கட்டளையைக் கூறினோம்; நாங்களாகக் கூறியதல்ல வேந்தே!” என்று சொல்லிவிட்டு ஓலையைப் புலவர் கையில் அளித்தார்கள்.

     “நல்லடிக்கோன் கட்டளையா? அவனுக்கும் ஓலைக்கும் என்ன தொடர்பு?” என்றான் கரிகாலன்.

     “அவரிடமே தான் மருதி இருக்கிறாள்’’ என்று கூறிவிட்டு ஒற்றர் வாய் புதைத்து நின்றார்கள்.

     புலவர் ஓலையை வாங்கியவுடன் பிரித்துப் படித்தார். மனம் கலங்கியது அவருக்கு. ஓலையில் எழுதப்பட்ட வரிகளில், சில விபரீதமாக இருந்தன. அதைக் கண்டு புலவர் திடுக்கிட்டு என்ன நேருமோ என்று அஞ்சினார். கரிகாலனோ, மிகுந்த சீற்றத்தோடு புலவரைப் பார்த்தான்.

     “நீ அறிய வேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுகிறேன். இந்த ஓலை வீண் கலகத்திற்குக் காரணமானது. இப்போதே இதைக் கிழித்தெறிந்து விடலாம்” என்றார் புலவர்.

     “இது என்ன ஓலை? அப்படி ‘வீண் கலகம்’ உண்டாக்கக்கூடிய ஓலையை ஒரு பெண் எழுதுவாளா? அவ்விதம் எழுதக்கூடிய பெண்ணின் தொடர்பைப் பெற்றிருக்கும் அத்தியை நாம் எந்தக் காரணத்தைக் கருதியும் நம் அரண்மனைக்குள் புகவிட்டது பெருந்தவறல்லவா?” என்றான் கரிகாலன்.

     புலவர் மௌனமாக இருந்தார். கரிகாலன் ஆதுரத்தோடு, “ஓலையைக் கொடுங்கள் படிப்போம்” என்று கூறினான்.

     புலவர் தயக்கத்தோடு ஓலையை அவன் கையில் அளித்தார். கரிகாலன் இருதயப் பதற்றத்துடன் படித்தான். ஓலையைப் படிக்கையில் அவன் முகம் கறுத்தது; மார்பும் தோள்களும் எழுந்து பொருமின. உள்ளமும் உடலும் ஒருங்கே கொதித்தன அவனுக்கு. அப்படி என்ன விபரீதச் செய்தி அந்த ஓலையில் இருந்தது?

     ஒரு முறை படித்த ஓலையை மீட்டும் மீட்டும் படித்தான் கரிகாலன். அமைதியாக மீட்டும் படிக்கலானான்.

     “ஆதி காதல!

     “உன் நடனத் திறமையால் பேதை நங்கையரை யெல்லாம் மனம் கலங்கச் செய்து ஏமாற்றி, அவர்களை உன் வசமாக்கிக் கொள்ளும் காரியத்தை இன்னும் நீ விட்டாயில்லையா? எவ்வளவு காலம் உன் அழகும், நடனமும் மதிக்கப்படுமோ, யான் அறியேன். என்னைப் பெருந்துன்பத்துக்கு உள்ளாக்கி விட்டு ஓடிவிட்டாய் நீ! என்னைப் பிரிந்து போவதில்லை என்ற உன் மொழியை ஆமிராவதியில் எழுதி வைக்க வேண்டியதுதான். இனி நீ என்னை ஏமாற்றுவது முடியாது என்பதை அறிந்து கொள்; உறையூர் வேந்தன் - ஆண்டகை - நல்லடிக்கோனின் அருள் என்னை அழைத்துக் கொண்டது. நல்லடிக்கோனின் அருளின் கீழ் அகமகிழ்ந்து வாழ்கிறேன்; உன்னுடைய தொடர்பை விட்டொழித்தேன்; இனி நீ என்னை மறந்து விடு. உன்னை நான் மறந்து விட்டேன் என்பதற்காகவும், உன் சந்திப்பை, இனி நான் விரும்பவில்லை என்பதற்கும் இவ்வோலையை உனக்கு அனுப்பியுள்ளேன். நீ கரிகால் வேந்தரின் குமரி ஆதி என்பாளுடன் மகிழ்ந்து களியாட்டம் கொண்டிருப்பாய்! பாவம்! அரசிளங்குமரி, உன்னால் ஏமாற்றப் பட்டாளே! உன்னுடைய அழகும், நர்த்தனமும் உனக்குப் பெரும்பகையாகப் போகின்றன! இனி நீ உயிர் வாழப் போவதில்லை. ஒவ்வொரு கணமும் உன் உயிருக்கு ஆபத்து. நாளை கழிந்த மறுநாளில் இவ்வுறையூரில் உள்ளி விழா கொண்டாடப் பெறும். என் காதலன் நல்லடிக்கோனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, நான் ஆடரங்கில் நாட்டியம் ஆடப்போகிறேன்! உலகறிய உன்னைப் பிரிந்து நல்லடிக்கோனைச் சார்ந்தேன் என்பதை உள்ளி விழாவில் நாட்டியமாடுவதிலிருந்து யாவரும் அறிந்து கொள்வார்கள்! என்னுடைய வெறுப்பை உனக்குத் தெரிவிக்கவே இவ்வோலை எழுதினேன்! நானும் நீயும் காதல் வெள்ளத்தில் மூழ்கித் திளைத்த காலத்தை கனவென மறந்து விடுவோமாக! இவ்வோலை வரைந்தவள், உறையூர் அரசிளங்குமரனின் காதலி - அடியாள் மருதி.” - இவ்வளவே ஓலையில் வரையப்பட்டிருந்த விசேஷங்கள். கரிகாலனின் கோபத்தை உருக் கொள்ளச் செய்வதற்கு இவ்வோலை ஒன்றே போதாதா? அத்தி மீது சீற்றம் உண்டாவதற்கு வேறு காரணம் இனி என்ன வேண்டும்? ஆகவே கரிகாலனின் அடங்காத சீற்றத்தைக் கண்டு இரும்பிடர்த் தலையார் கலங்கினார்.

     “இந்த ஓலை வெறும் சூழ்ச்சி! வேறில்லை” என்றார் புலவர்.

     “சூழ்ச்சியைப் பற்றிக் கேள்வியில்லை; அத்தியின் ஒழுக்கம் நன்கு மதிக்கத்தக்கதல்ல. அரங்காடும் கூத்தன் - கணிகையர்களிடம் கலந்து வாழ்ந்தவன். அவன் தொடர்பை நான் முதலில் வெறுத்ததற்குக் காரணம் இதுதான்! அவனால் நம் புகழுக்குக் களங்கம் ஏற்படுவதை நான் பொறுக்க முடியாது. அத்தி பெரிய வஞ்சகன் என்றே எனக்குத் தோன்றுகிறது. இந்த ஓலையில் வரையப்பட்டிருக்கும் விஷயத்திற்கு என்ன சொல் கிறீர்?” என்றான்.

     “கரிகால, கோபம் வேண்டாம்; என்னிடம் உனக்கு நம்பிக்கையில்லையா? நாங்கள் கருவூரிலிருந்து சிவிகையில் வரும்போது அந்தப் பாதகன் நல்லடிக்கோன் எதிர்ப்பட்ட விவரத்தையும்; அதன் பின் அவனை மூர்ச்சிக்கச் செய்துவிட்டு நான் வந்ததையும் முன்பே உனக்குத் தெரிவித்தேனே! ஆகவே, நல்லடிக்கோனின் பிதற்றல், மொழியில் உண்மைக்கு இடம் இருக்குமா? நீயே ஆராய்ந்து பார். என்னுடைய வற்புறுத்தலால்தான் அத்தி, ஆதிக்கு நாட்டியம் கற்றுக் கொடுக்க உடம்பட்டான்! அவனிடம் நாட்டியம் பயில்வதில் ஆதிக்குள்ள ஆவலுக்கு அளவேயில்லை. அவனிடம் குறை கூறுவதற்கு என்ன இருக்கிறது!” என்றார் புலவர்.

     “அப்படி நான் சொல்லவில்லை! ஆதியின் திருமணம், அணிமையில் இருக்கிறது; அவளை மணக்க எண்ணி வட, நாட்டிலிருந்து கூட அரசிளங்குமரர் வந்திருக்கிறார்கள். அத்தியோ பிரபலமானவள். கணிகையின் தொடர்புடையவன். ஒழுக்க மேம்பாடுடையவன் என்று அவனைப் புகழ்வார் எவரும் இல்லை. இந்நிலையில் அவன், ஆதிக்கு நாட்டியம் பயில்வித்தல் பழிக்கு இடமாகும் என்பதே என் முடிவு! அவன் வந்த நாளே, இதைத்தான் கூறினேன்; இன்னும் இதைத்தான் சொல்கிறேன். இந்த ஓலை ஒன்றே போதாதா, பழி பரவுதற்கு!...?”

     “அரசகுலத்தில் பிறந்த ஆண் மகன் அத்தி! அவனுக்கு நாட்டியத் தொடர்பால் ஒரு கணிகையிடம், பற்றுதல் இருந்தது; அது அற்றுவிட்டது; இதை அவனிடம் ஒரு குற்றமாகக் கூறுவதை நான் ஒப்ப மாட்டேன். அரசகுலத்து ஆண்மகன் எவனும் இங்கே வந்திருப்பவர்களில், அத்தியைப் போல் உயர்வுடையவனே இல்லை என்பது என் முடிவு! இந்த ஓலையின் கருத்தே வஞ்சகம் நிரம்பியிருக்கிறது.”

     “அப்படியானல், இந்த விபரீதச் செய்திக்கு ஆதாரமே இல்லையென்றா சொல்கிறீர்கள்! அத்தி: யால்...”

     “இல்லை; நிச்சயம் இது-”

     “இவ்வோலையைக் கொண்டே, இப்போதே ஆராய்ந்து விடுகிறேன் உண்மையை! இவ்வோலையை இவ் ஒற்றர்களே நேரில் அத்தியிடம் கொண்டு போய்க் கொடுக்கட்டும். நாம் பின்னே சென்று மறைந்து நின்று உண்மையை அறிவோம்; இந்த ஓலையைப் படித்த அத்தி என்ன செய்கிறான் பார்ப்போம்! நான் சொல்வது நேர்மைதானே!” என்றான் கரிகாலன்.

     “அப்படியே பார்ப்போம்; ஆனால் இது விஷப் பரீக்ஷை அல்லவா?” என்றார் புலவர்.

     கரிகாலன் உடனே, ஓலையை அவ்வொற்றரிடம் கொடுத்து, ஒரு வீரனையும் உடன் அனுப்பி, “இவ்விருவரையும், நாடக அரங்க மாளிகையில் அத்தியிடம் அழைத்துச் சென்று தெரிவி” என்றான். ஒற்றர் இருவரும், அவ்வீரனுடன் நாடக அரங்க மாளிகைக்குச் சென்றார்கள். அவர்கள் போன சிறிது நாழிகையில் கரிகாலனுடன் இரும்பிடர்த்தலையார் சென்றார். சபையிலிருந்த யாவரும் வியப்போடு அக் காட்சியைக் கண்டு இருந்தார்கள். சித்திர மண்டபத்தை விட்டு நாடக அரங்க மாளிகைக்கு இருவரும் சென்றார்கள்.

     கரிகாலனால் அனுப்பப்பட்ட வீரனுடன், ஒற்றறி வீரர் இருவரும், நாட்டிய அரங்க மாளிகையின் முன் வாயில் அடைந்தார்கள். அவர்களைக் கண்டு, வாயில் காவல் செய்யும் சேடியர், “நீங்கள், இங்கே வந்த காரியம் என்ன?” என்று வினவினார்கள்.

     “சேர சேனபதியான அத்தியைப் பார்க்க வந்திருக்கிறார்கள், இவர்கள்!” என்றான் அவ்வீரன்.

     “இப்போது பார்க்க முடியாது அவரை! அரசிளங்குமரிக்கு நாட்டியம் கற்றுக் கொடுக்கிறார்' என்றாள் ஒரு சேடி.

     “அப்படியானால், இதோ இவ்வோலையை மட்டும் அவரிடம் கொடுக்க வேண்டும்; சோழவேந்தரின் கட்டளை இது!” என்றான். உடனே, அந்தச் சேடி, அவ்வோலையை, ஒற்றரிடமிருந்து பெற்றுக் கொண்டாள். மாளிகைக்குள் புகவேண்டுமே என்ற தயக்கத்தோடு சிறிது நின்றாள். ஏதோ உறுதி செய்து கொண்டவள் போல் புறப்பட்டு உள்ளே சென்றாள்.

     அவள் சென்ற தருணமே, அம்மாளிகையின் வாயிலை, கரிகாலனும் இரும்பிடர்த்தலையாரும் அடைந்தார்கள். மாளிகையின் வாயிலில் ஒற்றரும், வீரனும், ஒரு சேடியும் நிற்பதைக் கண்டான் கரிகாலன். உள்ளே ஓலையைக் கொண்டு போகும் சேடியையும் பார்த்தான். கரிகாலனும் புலவரும், அவர்களை மௌனமாகக் கையமர்த்தி விட்டு மெள்ளவே, அம்மாளிகைக்குள் புகுந்தார்கள்.

     முதலில் சென்ற சேடி, நெடுக வேகமாகப் போனவள், ஒரு தூண் மறைவில் சரேலென்று மறைந்து நின்றாள். அவள் மறைந்து நின்று, ஏதோ உற்றுப் பார்ப்பதை, கரிகாலனும் புலவரும் கண்டு கொண்டார்கள். புலவரின் இருதயம் பதறியது. ‘கரிகாலன் என்ன செய்வானோ! அத்தியின்...’ என்று தமக்குள் எண்ணிக் கலங்கினர். கரிகாலன் மிகுந்த ஆதுரத்தோடு முன் சென்று, சேடி அறியாமல், அவள் பின்னே, ஒரு தூண்புறம் நின்றான். அவனைப் புலவரும் பின் தொடர்ந்தார். சேடி, கூர்ந்து பார்த்த காட்சியைக் கரிகாலனும் புலவரும் பார்த்தார்கள். கரிகாலன் உள்ளம் கொதித்தது. கண்கள் சிவந்தன; அவன் கைகள் விதிர்ப்புற்றன; கால் நிலத்தில் பதியாமல் புடை பெயர்ந்தன. புலவர், கரிகாலனின் மாறுதலைக் கண்டு மனம் குன்றிவிட்டார். கரிகாலனின் கைகளைப் பிடித்து நிறுத்தினர்.

     அவ்விதம் என்ன நேர்ந்து விட்டது? அவர்கள் கண்ட காட்சிதான் என்ன? - கரிகாலனின் கோபத்துக்குக் காரணம் என்ன?

     மாளிகையின் உட்புறத்திலே நாலு புறமும் பெண் பிரதிமைகளாலும், சித்திரத் தூண்களாலும் அலங்கரிக்கப் பெற்று விளங்கிய நாட்டிய அரங்கில், நடன வித்தகன் அத்தி, அரசிளங்குமரி - ஆதிக்கு நாட்டியம் பயில்வித்துக் கொண்டிருந்தான். ஆதி - அத்தி - இருவருடைய ஆடலும் அழகும். நாட்டிய அரங்கைச் சுற்றிய பளிங்குச் சுவர் மீதே நன்கு பிரதிபலித்துக் காட்டின; அவ்விருவருடைய கண்டத் தொனிகளும், அவர்கள் அணிந்திருந்த ஆபரணத் தொகுதிகளின் இன்னொலியும், அரங்கின் மீதே, அழகுபெற, உயர்ந்த சிற்பிகளால் எழுப்பப் பெற்ற சித்திரத் தூண்களிலிருந்து எதிரொலித்தன; அரங்கின் மீதே அமைக்கப்பட்டுள்ள பெண் பிரதிமைகள் ஆதி - அத்தியின் ஆடல் - பாடல் - அழகு மூன்றையும் கண்டு கேட்டு அநுபவித்துச் சொக்கி நிற்கும் அழகுத் தெய்வங்கள் போல், காட்சியளித்தன; அவ்விருவரது அங்க லாவண்யங்களைக் காணவோ, அன்றி ஆடலழகை அநுபவிக்கவோ, காலைத் தென்றல் நாலு புறமும் புகுந்து அரங்கின் ‘மேற்கட்டி' யாகிய ஆடையையும், சுற்றிலும் தொங்கவிட்ட, பூத் தொழில் அமைந்த திரைகளையும் பறக்கவிட்டுப் படபடப்புறச் செய்து, நாட்டிய மாடும் இருவரையும் அணைந்து வீசியது. அமைதி நிலவிய அம்மாளிகையில் நாட்டிய அரங்கின் விசித்திர இன்னொலி மட்டும், எதிரொலித்த வண்ணமாக இருந்தது.

     ஆகவே, இவ்விதக் காட்சி விசித்திரத்தில் கண்ட மாறுதல் என்னவோ? - மறைந்து நின்று இக்காட்சியைக் காணும்படியாக பெரிய மாறுதல் என்ன நேர்ந்து விட்டது.

     அரங்கின் நடுவில், பளிங்குத் தாமரைப் பீடத்தில் நின்று அபிநயம் செய்து கொண்டிருந்தாள் ஆதி; அவளுக்கு அருகில், அத்தி அபிநயப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தான். வீணை, மத்தளம், வேய்ங்குழல், குடமுழவு முதலிய வாத்தியங்கள், வரிசையாக வைக்கப்பட்டிருந்தன ஒருபுறம், ஆபரணங்களில் ‘கலகல’ வென்ற ஆரவார ஓசை விதவிதமாகக் கேட்டது ஆதியின் ஆடலால். அசோகின் தளிர் போன்ற சிவந்த பாதங்கள், தாளத்திற்கு ஏற்ப அடியெடுத்து வைக்கையில் காலணிகளான, பாடகமும், சிலம்பும் ‘கலீர் கலீர்’ என்று ஒலியலைகளை எழுப்பின. அரையில் கட்டிய மேகலையின் முத்துக்கள் ஒன்றோடு ஒன்று மோதி எழும் ஓசையும், கை வளையல்களின் பெரும் சப்தமும் பிறழ்ந்து முழங்கின - இவ்விதம் ஆதியின் ஆடலில் பிரதிபலிக்கும் ஒலிகள் பலவித வாத்தியங்களின் நாதத்தை ஒத்து விளங்கின.

     முல்லை அரும்பைப் போன்ற பற்களைச் சிறிதே தெரியக் காட்டி குறு வியர்வுடைய பிறை நெற்றியிலே, இரு புருவங்களையும் வில்லென வளைத்து, அமுதமும் விஷமுமாகிய இரு கரு விழிகளை வேல் போல் பிறழச் செய்து, கண்ணாடியன்ன இரு கன்னங்களையும் உணர்ச்சி மிகுதியாலும், மென்மைத் தன்மையாலும் சிவந்து புடைபெயரச் செய்து, ஆழ்ந்த கருத்துக்களையும், இன்ப நினைவுகளையும் இரு இதழ்களின் நெளிவினாலே வசீகரமுடன் புலப்படுத்தி - இன்னும் மற்ற அங்க லாவண்யங்களால், அநேக விதமாக அபிநயங்கள் செய்து அத்தியின் உள்ளத்திலே தீவிரமாக இடங்கொண்டாள். கடைசியாக அவள் மீட்டும், ‘கமல வர்த்தனே’ என்ற அபிநயம் செய்தாள். அப்போதுதான் கரிகாலன் சினம் கொள்ளக் காரணமாயிற்று.

     நாட்டிய அரங்கில் முதன் முதல் ஏறியவர்கள் அபிநயம் செய்யும் முதல் அபிநயம், ‘கமல வர்த்தனே’. அந்த அபிநயத்தை, ஆதி மிக அழகாகச் செய்து காட்டினாள். ஆகவே, அத்தியின் மனம் நெகிழ்ந்தது, அவளிடம் ஈடுபட்டு. அறிந்துகொண்ட ஆதியும், நாட்டிய முடிவில், அத்தியின் மனத்தை மயக்குவதற்காகக் கமல வர்த்தனை அபிநயத்தை மீட்டும் காட்டினாள்.

     அரங்கின் நடுவில், தெய்வப் பாவை போல் கால்கள் அழகுபட அரங்கில் பாவி நிற்க, உதிர் பூக்கள் ஏந்திய இரு கைகளையும் இருதய நடுவில், தெய்வ வணக்கமாகக் குவித்து, ஒரு தாமரை அரும்பெனத் தோற்றச் செய்து, அதன் பின், கதிரவனைக் கண்ட தாமரைபோல், இரு. கைகளையும் இதழ் மலர்வதென விரித்து உதிர் பூக்களை அரங்கில் சொரிந்தாள்; இவ்வித அபிநய அழகிலே உள்ளம் சொக்கிய அத்தி, சரேலென்று அவளை அணுகினான்; ஆதியின், இரு கைகளையும் பிடித்தான்; அவள் மதிமுகத்தையும் சிவந்த கன்னங்களையும் கண்டான்; புன்னகை செய்தான். அவன் கைகள் தொட்ட அளவிலே , விதிர்ப்புற்ற ஆதி, கண்கள் சுழல நாணி விருப்பு வெறுப்பற்ற நிலையில் நின்றாள்.

     “ஆதி, இதோ உன் இரு கைகளும், உண்மையில் செந்தாமரையே! செந்தாமரையைக் காட்டிலும் செவ்வியுடையன இவை. இவ்வளவு மென்மையும், தண்மையும், தாமரையிடம் இல்லையே! உன் கைகளுக்குள்ள அழகு, மேம்பாடு வேறு எந்தப் பொருளிடமும் இருப்பதாக அறியேன்! நீயோ, இயற்கையின் வளம் செழிக்கச் செய்யுள் இயற்றும் திறமையுடையவள். உன் அழகு நலத்தையும், உன் உள்ளத்து உணர்ச்சிப் பெருக்கையும் அமைத்து ஒரு பாடல் இயற்று பார்ப்போம்” என்று கூறி அவள் இருகைகளையும் மேலே எடுத்து உயர்த்தினான்.

     அவள் கண்களும் அவன் கண்களும் அணிமையில் சந்தித்தன. அவள் தன் நிலை மறந்தாள். ஒரு கணம் மௌனம்; அவ்விருவர் விழிகளும் பேசின. அத்தருணமேதான், ஓலை கொண்டு வந்த சேடி அக் காட்சியைக் கண்டு திகைத்துத் தூண் மறைவில் பதுங்கினாள்; எனினும், அச்சேடி அக்காட்சியைப் பார்ப்பதிலே ஆதுரமும் தீவிரமும் கொண்டு நின்றாள். கரிகாலனும் புலவரும் பின்னே மற்றொரு தூணிடம் மறைந்து நின்று அக்காட்சியைக் கண்டார்கள். அவர்கள் வந்ததை அந்தச் சேடி எப்படி அறிவாள்?

     கரிகாலன் அந்தக் காட்சியைக் கொதித்த உள்ளத்தோடு கண்டான். துள்ளிக்குதித்த அவன் உள்ளத்தை இரும்பிடர்த்தலையார் வசீகரித்துக் கொண்டார். விதிர்ப்புற்றுக் கோபாவேசத்துடன் புறப்பட்ட கரிகாலனைப் பிடித்துக்கொண்ட புலவர், கரிகாலனை அமைதியாகப் பார்த்தார். அந்த அமைதியை மதிக்கவில்லை கரிகாலன். நாகம்போல் பெருமூச்சு விட்டான். உடனே சரேலென்று முன் நின்ற சேடி துணுக்குற்றுத் திரும்பிப் பார்த்தாள். கரிகாலனைக் கண்டாள். அவள் உடல் பதறியது, கண்கள் இருண்டன. உடனே தடுமாறிக் கொண்டே, “ஆதி?” என்று கூவிக்கொண்டே நாட்டிய அரங்கை நோக்கி ஓடினாள்.

     திடுக்கிட்டு விலகிக் கொண்டார்கள் காதலர்கள் இருவரும். ஆதி கடுஞ் சீற்றத்தோடு பார்த்தாள் சேடியை. வெறுப்புடன் நின்றான் அத்தி.

     “ஐயோ! - அரசர் வருகிறார்! இதோ தங்களுக்கு யாரோ ஓலை கொண்டு வந்திருக்கிறார்கள்... ஆதி!... வருகிறார்!” என்று கூறிவிட்டு கண்களால் குறிப்பிட்டுவிட்டு, வேறுவழியே மறைந்து ஓடினாள், வாயில் புறத்தை.

     திடுக்கிட்டார்கள் இருவரும்; தன் நினைவு உண்டாக இருவருக்கும் சிறிது நாழிகை ஆயிற்று. வாயில் மாடத்தின் வழியை நோக்கி விட்டு இருவரும் விலகி நின்று கொண்டார்கள். தடுமாற்றத்தோடு ஆதி தன் ஆடைகளை நேர் செய்துகொண்டு வீணையின் அருகில் அமர்ந்து அதை எடுத்து நரம்பைத் தெறித்தாள். பகை நரம்பில் அவள் விரல்கள் பாவின. மெய்மறந்து வீணையின் நாதத்தில் ஒன்றியதுபோல் நடந்த நிகழ்ச்சியை நினைந்து மருண்டாள். அதே நினைவுடன் அத்தியும், ஓலையைப் பிரித்துப் படிக்கலானான். ஓலையின் தொடக்கத்தில், “ஆதி காதல!” என்ற வார்த்தையைப் படித்ததும் அவன் ஒரு கணம் உள்ளம் குளிர்ந்தான். அடுத்த .கணமே, “அடே, பேடி...” என்ற வார்த்தைகள் இடிக்குரல் போல் கேட்டன. வார்த்தை வரும் திக்கை நடுக்குற்ற பார்வையோடு பார்த்தான் அத்தி. கரிகாலன், நிலம் அதிர நடந்து வந்தான்; புலவர் பின்னே தலைகுனிந்து வந்துகொண்டிருந்தார். கரிகாலனின் பேரிரைச்சலைக் கேட்டு வீரர் பலர் மாளிகைக்குள் புகுந்து வந்து பின்னே நின்றார்கள். நாட்டிய அரங்கின்மீதே கரிகாலன் ஏறினன்; அத்தியின் முன் சென்றான். “பேடி... கூத்தா!” என்ற வார்த்தைகள் கரிகாலன் வாயிலிருந்து வெளிவந்தன. கடுஞ் சினத்துடன் கைகளை ஒன்றோடு ஒன்று மோத அடித்துக் கொண்டான். அந்தக் காட்சியைக் கண்டு, ஆதி பதறி எழுந்தாள். ஆனால் கரிகாலனை அணுக அஞ்சினாள். ஒரு பெண் பிரதிமையைப் பற்றிக் கொண்டு கண்ணீர் துளும்பப் பெரு மூச்சுவிட்டு விம்மினாள்.

     அத்தி தூக்கியெறியப்பட்டவன் போல் ஆனான். பிரித்துப் படித்த ஓலையைச் சட்டென்று கைகளால் பிசைந்தான். நிலத்தில் போட்டுக் கால்களால் மிதித்துத் தேய்த்தான். ஓலையின் உருவமே தெரியாத விதம் ஆக்கி விட்டான், தீச்சிந்தும் பார்வையோடு அத்தியின் முன் மிகவும் அணுகி வந்து நின்றான் கரிகாலன். அத்தியின் செய்கையைக் கண்டு, இடியொலியென நகைத்தான்:

     “அ ட... பேடி... இப்போதே இவ்விடத்தை விட்டுப் புறப்படு; மறுமொழி கூறினால் உன் உயிருக்கே கேடு உண்டாகும். இன்னும் இரண்டு நாழிகைப்போதில் இந்நகர் எல்லையைக் கடந்து வெளியேறிவிட வேண்டும்; இன்று தொடங்கி இந்நகர் எல்லைக்குள் நீ புகுந்தால் உன் உயிரையே இழப்பாய்...” என்று கம்பீரமாகக் கூறினான்.

     அத்தி நடுங்கினான்; ஆதி அலமந்தாள். புலவர் அரங்கில் ஏறிக் கரிகாலனின் பின்னே நின்றார்.

     “நான்... கட்டளைக்குத் தலைவணங்குகிறேன்... ஆனால், குற்றம் என்ன?” என்றான் துணிவுடன் அத்தி.

     “கூத்தனாகிய நீ, குலத்தைக் கெடுப்பவன்! சிறிது நாழிகைக்குமுன், நீ நாட்டியப் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததைச் சொல்ல வேண்டுமா! நீ ஆண்மகன் - சேர குலத்து வீரன் - மான மிக்க ஆடவர் சிங்கம், ஏறு என்று எண்ணினேன். இன்று அவ்வெண்ண மெல்லாம்...” என்று சீறினான்.

     “வேந்தே!... குற்றம் என்னிடம் இல்லை... புலவரே!”

     “கணிகையரிடம் அடிமைப்பட்டு வாழ்ந்த நீ, உன் நிலையை நன்கு அறிந்து கொள்ளவில்லை; உன்னை என் வாள் கொண்டு விண்ணவர் உலகம் புகச் செய்திருப்பேன்! ஆனால், உன்னைக் கொண்டு வந்த புலவரின் விருப்பத்தை மறுக்காமல் உயிருடன் விட்டேன்! நீ உருவமில்லாமல் நிலத்தில் தேய்த்து அழித்த ஓலையை நான் படித்திருப்பேன் என்பதை நீ அறியவில்லை! அடே, கூத்தா! உன்னிடம் சொல்ல வேண்டியது என்ன இருக்கிறது? நூற்றுக் கணக்காக அரசிளங்குமரர், ஆதியின் பொருட்டுத் தவம் கிடக்கிறார்கள் இவ்வரண்மனையில்! அவர்களின் செல்வமும், சிறப்பும் ஒப்பற்றவை! - நீயோ நாடகமாடுங் கூத்தன். அரச குலத்தில் பிறந்தும், கணிகையரோடு நடம் ஆடும் களி மகன்! போர்க் களத்தில் புறங்காட்டி ஓடிய பேடி! வெறும் அழகாலும், வசீகரப் பேச்சாலும், நடனச் சிறப்பாலும் என் பேதைப் பெண்ணை மயக்க முற்பட்டு விட்டாய்! முதலில் உன்மீது சந்தேகம் கொண்டது, இப்போது உண்மையாகி விட்டது!... புலவரே! - இப்போது என்ன சொல்கிறீர் இவனை நாடு கடத்துகிறேன்; இல்லையேல் கொலைத் தண்டனை - வாழ்வு முழுவதும் சிறைத் தண்டனை!”

     புலவர் மறுமொழி கூறாமல் தயங்கி நின்றார், “வேண்டாம்!...” என்ற குரல் கேட்டது. கரிகாலனும் புலவரும் அத்தியும் குரல் வந்த திக்கை நோக்கினார்கள். தன் உடல் முழுவதையும், ஒரு பெண் பிரதிமையிடம் நின்று மறைத்துக் கொண்டு, அப்பிரதிமையைத் தழுவிச் சோர்வுடன் நின்ற அரசிளங்குமரி ஆதியைப் பார்த்தார்கள்.

     “ஆதி!... உயர்வு தாழ்வு கருதாமல் உள்ளம் கலங்குவது அறிவுடைமையன்று! கற்றுவல்ல - பேரறிவு சான்ற அரசிளங்குமரி நீ! புல வ ரிடம் இளமை தொடங்கிக் கற்றதற்குப் பயனோ இது? என் செல்வக் குமரியாகிய நீ, பெரிதும் விரும்பியதற்காக, இந்தக் கூத்தன் உனக்கு நாட்டியம் பயில்விக்க முற்பட்டதை நான் மறுக்கவில்லை. உன்னுடைய பெருமைக்கு இவன் தொடர்பு பெரும் பழியை உண்டாக்கிவிடும் என்பதை இன்று வந்த ஓர் ஓலையால் அறிந்தேன்; மருதி என்ற கணிகையின் ஓலைதான்! கணிகைத் தொடர்புடைய பேடியைக் கண்ணெடுத்தும் நீ பார்க்க முடியுமா?... உன் நினைவு இவனால் மாற்றப்பட்டிருக்கிறது. நீ உன் பேரறிவை மலரச் செய்துகொள்! நாட்டியத்தில் நீ பெற்ற பயிற்சி போதும்! மானமுடைய வாழ்வே, உயிரை விடப் பெரியது என்பதை நீ அறிவாயல்லவா!... நான் ஆட்சிபெற்ற காலம் தொடங்கி, என் மனம் மானமுடைய செயலையே போற்றி வருகிறது! இழிந்த செயலை அழித்து விடச் செய்கிறது! என் நீதியும், முறையும், மானமும். புகழும் என் குடிப்பெருமை! - உன்னல் அவற்றிற்குக் களங்கம் வேண்டாம்! வீரமுடைய - மானம் மிக்க புகழ்சான்ற அரசிளங்குமரர் - உன்னை மணம்புரிய எண்ணி ஒரு மாதத்திற்கு மேலாக - இந்நகரில் வந்து தவம் கிடக்கிறார்கள்: - நீயோ இவன் அழகிலும் ஆடலிலும் மயங்கி விட்டாய்! உன் அளவுமீறிய செய்கையை நான் வெறுக்கிறேன்...”

     “என் உள்ளத்தை மலரச் செய்த வசீகர உருவத்தை நான் மறக்க முடியாது!” என்று கூறிவிட்டு, பிரதிமையின் முகத்தோடு தன் முகத்தை மறைத்துக் கொண்டாள்.

     “ஆதி! ‘முறைகேடான காரியத்தில் ஈடுபடுவோரைக் கரிகாலன் ஒறுக்காமல் விடான்’ என்பதை நீ உணர்வாயல்லவா! அரசன் என்றும் அடிமையென்றும் வேறுபாடு கருதாமல் ஒறுப்பது என் கடமை!... ஆதி! ஓர் உதாரணம் சொல்லுகிறேன் கேள்! சென்ற ஆண்டில் என் சபையில் நாட்டிய அரங்கம் ஏறிய, இந்நகர்க் கணிகை மாதவியை நீ அறிவாய்! புலவரே நீரும் கேளும்; கண்ணகி என்ற வணிக மங்கையை மணந்த கோவலன் என்னும் வணிக இளைஞன் அந்த மாதவி மீது காதல் கொண்டான்; இன்று வரை அவன், எவ்வளவோ முயன்றும் அவளை விட்டுப் பிரியாமல் வாழ்கிறான்; தான் மணந்த கண்ணகியை இன்னும் ஏறெடுத்தும் பார்க்க வில்லை; அவன் செல்வமெல்லாம் இப்போது மாதவி வசமாகி விட்டன! மாதவியிடம் மயங்கிக் கிடக்கிறான் தன் மனைவியை மறந்து! கணிகையர் தொடர்பு கொண்ட எவனும் ஆண்மகனல்ல!... இந்த ஆடலாசிரியனும் அத்தகையவனே தான்! இவன் கணிகையால் இகழ்ந்து கூறப்பட்டிருக்கிறான்! ஆகவே... இவனை ஒறுப்பதில் தவறில்லை!... அடே புறப்படு...” என்றான்.

     கரிகாலனின் கோபம் சிறிதும் தணிவுறவில்லை. புலவரும் பேசாமல் நின்றார். அத்தியின் கண்கள் நீர் கரந்தன. அவன் கால்கள் நிலைபெயர்ந்தன - தயங்கினான் அடியெடுத்து வைப்பதற்கு.

     “வீரர்களே, இதோ இவனைத் தகுந்த காவலுடன் அழைத்துச் சென்று நகர் எல்லைக்கு வெளியே விட்டு வருக! மீட்டும் இவன் நம் நகர் எல்லைக்குள் புகுந்தால் சிறைசெய்து என் முன் கொண்டு வருக! என் ஆணையை எல்லைக் காவலர்க்கு உணர்த்துங்கள்? இவனுடன், வாயிலில் நிற்கும், ஓலைகொண்டு வந்த உறையூர் ஒற்றர்கள் இருவரையும் பிடித்துச் செல்லுங்கள்; அவ்விரு வரையும் இவனுடன் எல்லைக்கு வெளியே விட்டு வருக.”

     கரிகாலனின் கட்டளைப்படி வீரர் முன்வந்து நின்றனர்.

     “அத்தி!... இனி நீ அந்தக் கணிகையிடமே அடிமையாக வாழலாம்!... விரைவில் புறப்பட்டுச் செல்! இந் நகருக்குள் நீ மீண்டும் புகுந்தால் உன் உயிருக்கே கேடு விளையும்” என்றும் கர்ச்சித்தான்.

     காவல் வீரர்களின் நடுவே போய் நின்று, ஆதியை, நோக்கினான் அத்தி.

     “ஆதி... போய் வருகிறேன்” என்ற வார்த்தைகள் அவனையும் அறியாமல் வெளிவந்தன. உடனே, புலவர் முகத்தையும் பார்த்தான்; அவர் தலை குனிந்தார்.

     “புலவரே, நான் பெற்ற இன்பம் ஈடில்லாதது! ஆதியை நான் மறக்கவில்லை...” என்று கூறி வீரர்களுடன் நடந்தான். புலவர் மௌனமாக இருந்தார். ஆதியின் அருகில் அவர் சென்றார். அவள் செவிகளில் ஏதோ ரகஸ்யமாகச் சொன்னார்; உடனே, ஒழுகுகின்ற கண்ணீரோடு, தீப்பட்ட தளிரெனத் துடித்தவளாய், இருள் கிழித்துச் செல்லும் மின்னலென, கறுப்புத் திரையைத் தள்ளி விலக்கிக் கொண்டு எங்கோ, பாய்ந்து சென்றாள் ஆதி. கரிகாலன் திடுக்கிட்டான். புலவரைப் பார்த்தான். அவன் முகம் சிவந்தது. கடுகிய நடையுடன், அத்தியைப் பின் தொடர்ந்தான். வாயிலில் நின்ற இரு ஒற்றர்களையும் அத்தியுடன் அழைத்துக் கொண்டு, ஆயுதம் தாங்கிய வீரர் சூழ்ந்து சென்றார்கள்; அரண்மனை வாயில் மாடத்தின் முன்புறம் வரையில் கரிகாலன் பின் தொடர்ந்து சென்றான்; புலவரும் பின் தொடர்ந்து போனார்; அத்தியின் போக்கைக் கண்டு, கரிகாலன் பிரமித்து விட்டான்; உடனே ஆதியின் நினைவில் ஆழ்ந்தது அவன் மனம்; அரண்மனைக்குள் திரும்பினான்; “ஆதி, எங்கே ஓடினாள்?” என்று புலவரைக் கேட்டவாறே, அவருடன் விரைந்து நடந்தான். ஆதி ஓடிய திசை வழியே இருவரும் கடுகினார்கள்.

     புயற்காற்றால் தள்ளப்பட்டுப் போகும் ஒரு பூங்கொடிபோல் மிகுந்த வேகத்துடன், நிலை மாடங்கள் பலவற்றையும் கடந்து ஓடினாள். ஆதி அவ்விதம் ஓடிக் கொண்டிருப்பதைக் கண்டு அரண்மனையில் உள்ளவர்கள் திடுக்கிட்டார்கள். ‘அவள் எங்கே ஓடுகிறாள்’ என்பதை யாரும் அறிய முடியவில்லை. மனம் பதை பதைக்க, பாதங்கள் சிவந்து கொப்பளிக்க, அறிவுகலங்க ஓடிய ஆதியைக் கண்டு, மனம் தடுமாறாதவரும் உண்டோ?-

     அவள் ஓடிக் கொண்டிருக்கும்போது - அவள் அரையில் கட்டியிருந்த மணிநிறை மேகலை அறுந்து வீழ்ந்து நிலத்திலே சிதறியது; மார்பில் அழகு செய்த முத்து மாலைகளின் பல தொகுதிகள் ஒன்றொடொன்று மோதி நெருக்குண்ட முத்துக்கள் உடைந்து சிதறின. தலையணி மாலைகள் சிதைந்து வீழ்ந்தன. கை வளையல்களும், காலணிகளான சிலம்பும் பாடகமும் அவள் ஓட்டத்தின் மிகுதியைப் புலப்படுத்தின. அவள் ஏன் ஓடுகிறாள், எங்கே ஓடுகிறாள் என்பது யாருக்கும் விளங்கவில்லை.

     அரண்மனையின் கீழ்த்திசையிலே உள்ளதாகிய பெரிய மாளிகைக்குள்ளேதான் அவள் புகுந்தாள்; வாயிலில் வாள் ஏந்தி நிற்கும் வீரரை அவள் மதிக்காமல் கூட மின்னலென மறைந்து விட்டாள். அவள் அம்மாளிகைக்குள் புகுவதைக் கண்டு யாவரும் உண்மை உணர்ந்தனர்; ஏதோ காரியமாக இம்மாளிகைக்குள் ஓடியிருக்கிறாள், என்று மட்டும் புலப்பட்டது.

     ஓடியவள் உள்ளே பல மாடங்களையும் ஆராய்ந்து பார்த்துவிட்டு, “அண்ணா!... கிள்ளி...” என்று கூவினாள். நடு மாடத்தில் நின்று, மறுமொழி கிடைக்காததால் ஏங்கிய மனம் உடையவளாய், ‘ஆயுதக் கொட்டில்’ உள்ள இடத்தை அணுகி “அண்ணா!...” என்றாள். அவள் குரலைக் கேட்டவுடன், இரண்டு வீரர்கள் - இளைஞர்கள் ஏறெடுத்து நோக்கினார்கள்.

     “யார்? - ஆதியா!-” என்று கேட்டவாறே இரு, வீரர்களும் திகைப்புற்றுப் பார்த்தார்கள்.

     ஆதி ஒன்றும் பேசவில்லை. நின்ற இடத்தை விட்டு மெள்ள நடந்து வந்தாள். அவ்வீரர் இருவரையும் அணுகி வரவே அவள் தோற்றத்தை அவ்வீரர் நன்கு உணர்ந்து கொண்டு பிரமிப்புற்றார்கள்; அவளை உற்றுப் பார்த்தார்கள். நீர் கான்ற கண்களுடன், சோர்ந்த முகத்துடன் - நடுங்குகின்ற மேனியுடையவளாய்த் தோன்றினாள். துயரத்தின் முழுச் சாயலும் அவள் முகத்தில் கவிந்திருந்தது. சரேலென்று ஆதி இருகைகளையும் முகத்தில் புதைத்துக் கொண்டு, அருகில் இருந்த தூணில் சாய்ந்து கொண்டாள். அவள் உள்ளத்தில் அலை துள்ளுகின்ற எல்லையற்ற துயரத்தின் மிகுதியைப் புலப்படுத்துவதுபோல், அவள் இருதயம் விம்மி எழுந்தது.

     ஆதியிடம் அவ்விருவரும் அணுகினார்கள். அவ்விருவரும் வேறு யாரும் அல்ல... கரிகாலனின் செல்வக் குமாரர்கள் - ஒருவன் பெயர் மணக்கிள்ளி; மற்றவன் பெயர் பெருவிறற் கிள்ளி; ஆதியைத் தங்கையாகப் பெற்ற பெருமையால் இறுமாப்புற்றவர்கள்; ஆதியிடம் எல்லையற்ற அன்புடையவர்கள்; கரிகாலனுக்குப் பட்டத்துத் தேவியர் இருவர்; அவர்களில் நாங்கூர் வேண்மா என்பவளிடமாகப் பிறந்தவள் ஆதி; அரசிளங்குமரர் இருவரும் மற்றவர்களிடமாகப் பிறந்தவர்கள்; ஆதியும் அரசிளங்குமாரர் இருவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர் இல்லையென்றாலும், அன்புடைய உள்ளத்தவராய் வளர்ந்தவர்கள்; வயசால் பெரியவன் மணக் கிள்ளி; இளையவன் பெருவிறற்கிள்ளி; அவ்விருவருக்கும் இளையவள் ஆதி; அவள் தமிழில் கவி பாடும் திறமையுடையவள் என்பதையும், மூதறிவினளாகியிருப்பதையும் கண்ட குமரர் இருவரும், அவளுக்கு ஒத்த காதலனை மனத்தால் தேடிக் கொண்டிருந்தனர்; அந்நிலையிலே தான், புலவர் இரும்பிடர்த்தலையாரின் கூட்டுறவால் சேரர் குலத் தோன்றல் - ஆடல் வல்லான் அத்தி அந்நகரில் வந்து புகுந்தான். ஆதி - அத்தியின் நட்பு காதலாக மாறும் என்பதை அரசிளங்குமரர் இருவரும் உணர்ந்தவர்கள்; ‘அழகாலும் அறிவாலும் மேம்பட்டவன் அத்தி; அரச குலத்திலே தோன்றிய பெருமையும் உடையவன்; நடனத் திறமையால் நாடறிந்த புகழுடையவன்; வீர முடையவன்; வசீகரப் பேச்சுடையவன்; இவன் ஆதிக்கு ஏற்ற காதலன்' என்று மனம் களித்திருந்தார்கள் அவ்விருவரும். அத்தியிடம் அவர்களுக்கு அளவற்ற மதிப்பு இருந்தது. ஆகவே அத்தியும் அச்சமின்றி ஆதியிடம் பழகி வந்தான். ‘ஆதி - அத்தி’யின் காதல் தழைக்க வேண்டுமென்று, புலவரும், அரசிளங்குமரர் இருவரும் பலவகையிலும் ஊக்கம் கொண்டிருந்தார்கள்; ஆனால் கரிகாலன் மட்டிலும் அம் முயற்சிக்கு இடையூறாக இருந்தான். கரிகாலனின் மனப்போக்கை, நன்கு உணர்ந்த அரசிளங்குமரர், அவனைத் தம் வழிக்கு மாற்றி விடலாம் என்று கனவு கண்டார்கள். தன் மாமன் இரும்பிடர்த்தலையாரின் வாய் மொழிக்காகவும், தன் செல்வக் குமரர் இருவரின் விருப்பத்துக்காகவும் ஆதியின் கருத்துக்கு ஆதரவு அளிப்பவன் போல் கரிகாலன் வேண்டா விருப்புடன் அத்தியிடம் பழகி வந்தான். நாளுக்கு நாள் அத்தியிடம் வெறுப்பு வளர்ந்து கொண்டிருந்தது கரிகாலனுக்கு. வெறுப்பு வெளியாவதற்குக் காரணமாயிற்று, அந் நிலையிலே வந்த மருதியின் ஓலை; ஆகவே அத்தி நாடு கடத்தப்பட்டான்.

     மருதியிடமிருந்து ஓலை வந்ததும் அத்தி நாடு கடத்தப் பட்டதும், அவ் அரசிளங் குமரர் அறியாத நிலையில் நடந்தவை. அவை பற்றிச் சிறிதும் அவர்கள் அறியார். அந்நிலையிலே ஆதி அங்கே புகுந்து கண்ணீர் துளும்பும் முகத்தோடு நிற்பதைக் கண்டு அவ்விருவரும், ஒன்றும் விளங்காமல் பிரமிப்புற்றதில் வியப்பு என்ன? ஆதி அங்கே வந்த காரணம் என்ன என்பதை அவர்களால் நினைக்கவும் முடியவில்லை; அவளும் வாய் திறந்து ஒன்றும் சொல்லவில்லை. இந்த நிலையில் மணக்கிள்ளி பரபரப்போடு ஆதியின் முகத்தை உற்றுப் பார்த்தான். அவன் மனம் ஆச்சரியத்தால் குமுறியது.



மருதியின் காதல் : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17