உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(வ. வேணுகோபாலன் அவர்களின் ‘மருதியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) 2 தோல்விக்குக் காரணம் முதல் முதலில் மின்னலின் வேகத்தோடு ஆறு குதிரை வீரர்கள் கோட்டை மதிலுக்குள் பாய்ந்து ஓடினர்கள். அவர்களா ஓடினர்கள்? பிடரி மயிர் நானா புறமும் தீச்சுடர் போல் தோன்றக் கடுவிசையுடன், அவர்கள் குதிரைகள் நிலத்தில் கால் பாவாமல் தாவிச் சென்றன. அக்கு திரைகளில் அமர்ந்திருந்த வீரர்கள் அஞ்சா நெஞ்சம் படைத்தவர்கள் என்று கூறவும் வேண்டுமோ! அடுத்தாற்போல் அணி அணியாக கையில் வேல் தாங்கிய வீரர்கள் குதிரை மீது இவர்ந்து தொடர்ந்து சென்றர்கள்; குதிரைகளின் கால் குளம்புகள் நிலத்தில் படுவதால் உண்டாகும் ‘டக்டக்’ என்ற ஓசை இடை யறாமல் கேட்டது. குதிரைப் படைகள் கடுகி மறைந்தபின் ‘கட கட’ என்ற பெரு முழக்கத்தோடு தேர்ப்படை கோட்டைக்குள் புகுந்தது. தேர் உருளைகளின் கடகட வென்ற ஓசை, கோட்டை மதிலின் நானாபுறத்திலிருந்தும் எதிரொலியை உண்டாக்கியது. ஒன்றன்பின் ஒன்றாக மின்னல் வேகத்தோடு சென்றன. அவற்றை அடுத்து, அங்குசமும், வேலும் தாங்கிய வீரர்கள் யானைமீது அமர்ந்து கரு மேகங்கள் நிலத்தில் ஊர்வதுபோல் தோன்றும்படி செல்லும் காட்சி கண்டவர் உள்ளத்தைக் கலங்கச் செய்தது. பொன்னாலான பூண்களைக் கொண்ட தந்தங்களின் ஒளி மின்னலிட, நிலம் அதிரும்படி நடந்து போர் வெறி தணியாமல் பிளிறிக்கொண்டு, துதிக்கைகளை இரு புறமும் வீசிக்கொண்டு போகும் யானைக் கூட்டங்களைக் கண்டு மனம் கலங்காதவரும் உண்டோ? வில்லும் வாளும் தாங்கிய வீரர் படை அடுத்தாற் போல் புகுந்தது. மார்பிலும், முகத்திலும், தோள்களிலும் புண்படாத வீரர்கள் இல்லை. ஆனால் அந்நிலையிலும் அவர்கள் வீரம் குறையவில்லை. வில் கொண்டு போர் செய்வதிலே சேர நாட்டு வீரர் களுக்கு முன் யாரும் நிற்க முடியாது என்பதை அவர்களது வில்லெழுதிய கொடிகளே எடுத்துக் காட்டுகின்றன! உண்மைதான்! சேரநாட்டு வீரர்கள் வில் யுத்தத்திலே புகழ் பெற்றவர்கள்தாம். இமயமலையிலே வில்லெழுதிய வீரவேந்தன், சேர குலாதிபன் அல்லவா? எப்படியிருந்தால் என்ன? அன்றைப் போரிலே, அவ்வீரர்கள் வெற்றி பெற்றார்களா?-இல்லை! படுதோல்வி அடைந்து விட்டார்கள் இல்லையேல் அவ்விதம் தலை தெறிக்க ஓடி வருவார்களா? ‘என்ன அதிசயம்! வெற்றியில்லாமல் புறங்காட்டி வரும் ஆரவாரமா இது! இம்முறையும் தோல்வியா? சேரநாட்டு மறவர்களின் வீரம் அழிந்து விட்டதா? சேர குலத்தின் வெற்றிச் சின்னமான வில்லுக்கு இனி வன்மையில்லையா? வல்வில் வீரர் என் படையில் எவருமே இல்லையா? இல்லை!-சீ! வெற்றியில்லை என்று நானே என் முடிவு செய்யவேண்டும்? ஆனால்... இன்னும் சிறிது நாழிகையில் உண்மை தெரியாமலா போய்விடும்?...’ - இவ்விதச் சந்தேகத்தோடு, படைகளின் அணிவகுப்பையும் அதன் போக்கையும் கவனித்துக்கொண்டிருந்தான் சேரவேந்தன். கோட்டைக்குள் புகுந்த படைகள் ஒவ்வொரு வீதியாக மாறி மாறிப் போய்க் கொண்டிருந்தன. நகருக்கு நடுவில் விளங்குவதாகிய அரண்மனைக்குள் புகுந்தன அவை. ‘வேளாவிக்கோ மாட’த்திலிருந்து அரசன், தன் மந்திரிகளுடனும் இரு துறவியருடனும் அக்காட்சியைக் கண்டு நின்றான். நீண்ட நாழிகையாக யோசனை செய்து நிற்கும் அரசனைப் பார்த்து, துறவிகள் கேட்கலானார்கள்: “வேந்தே! என்ன யோசனை? இந்தப் படைகள்...” என்று அவர்கள் சொல்லிய அளவிலே, அரசன் இடை மறித்து, “அடிகளே, செங்கணானோடு யுத்தம் நடக்கிறது என்றேனே, அந்த யுத்தத்திற்குச் சென்ற படைகள் இவைதாம்; வெற்றியுடன் திரும்பினவா என்பது என் சந்தேகம்! இவ்வளவு நாழிகை அதனால் தான் தாங்கள் வந்ததையும் மறந்து படைகளைப் பார்த்து நினைவிழந்திருந்தேன்! குற்றம் பொறுக்கவேண்டும்...” ' என்று வேண்டிக்கொண்டான். “அதனால் என்ன? இவ்வளவு நாழிகை நாங்களும் உன் படைகளின் பெருந் தொகுதியைக் கண்டு மெய் மறந்திருந்தோம்; சேர! வெற்றியும் தோல்வியும் அரசருக்கு இயல்பு. இன்று தோல்வியானால் நாளைக்கு வெற்றி. உன்னைக் காணும் பாக்கியம் எங்களுக்குக் கிட்டியது! போய் வருகிறோம்; நகர்க் காட்சிகளைப் பார்க்கவேண்டும்” என்று புறப்பட்டார்கள் இரு துறவிகளும். ' “அடிகளே! இதோ இவ்வீரன் உங்களுக்குத் துணையாக வருவான். நகர் முழுவதும் கண்ட பின் ஜைனப் பள்ளிக்கு அழைத்துச் செல்வான். அங்கே தங்கியிருந்து ஜைனப் பெரியார்களுடன் அளவளாவி விட்டு விருப்பம் போல் போகலாம்” என்றான் கணக்காலிரும் பொறை. அரசன் அனுப்பிய வீரன், துறவியர் இருவரையும் அழைத்துக் கொண்டு மாளிகையைவிட்டு இறங்கினான். மூவரும் கோட்டைக்குள் புகுந்து சென்றார்கள். அவர்கள் சென்ற சிறிது நாழிகைக்கெல்லாம் வேளாவிக்கோ மாடத்தின் வாயிலில் ஐந்து குதிரைகள் நின்றன. இரும்புக் கவசம் அணிந்து, தோளிலே வில்லும் அம்பும் புட்டிலும் தாங்கிய வீரர் ஐவர் அந்தக் குதிரைகளிலிருந்து கீழே குதித்தனர். என்ன மிடுக்கு அவர்கள் தேகத்தில்! இரும்பை உருக்கி வார்த்தாற்போன்ற மேனி! உருண்டு திரண்ட தோள்கள்! கற்பாறை போல் தோன்றும் உறுதிமிக்க, அகன்ற மார்பு அவர்கள் கண்களிலே எவ்வளவு தீக்ஷீண்யம்! முன் வைத்த காலைப் பின் வைக்காதவர்கள் என்பதை அவர்கள் நடையே புலப்படுத்துகிறது. ஆம்! அவர்கள் உத்தம வீரர்கள் என்பதில் சந்தேகம் என்ன? அவர்கள் ஒவ்வொரு வரையும் பற்றிச் சொல்வதென்றால், நாள் முழுவதும் சொல்லிக் கொண்டிருக்கலாமே!- ஆனால் இந்த இடத்தில் ஒன்று நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். முன்பு படைகள் கோட்டை மதிலுக்குள் புகும்போது ஆறு குதிரை வீரர்கள் முதல் முதலில் உட்புகுந்தார்கள் என்று கூறினோமல்லவா? அவர்களில் ஒருவன் எங்கு மறைந்தானோ? அவனைத் தவிர்த்து மற்ற ஐவருமே, இப்போது வேளாவிக்கோ மாடத்திற்கு வந்திருப்பவர்கள். இந்த வீரர் ஐவரும் சாமானியமானவர் அல்லர்! சேர வேந்தனின் பெரும் படைகளுக்குச் சேனாபதிகள்! ஒவ்வொருவரும், எத்தனையோ யுத்தங்களில் சேரவேந்தனுக்கு வெற்றி மாலை சூட்டியவர்கள். ஆனால் இன்றோ-கவிழ்ந்த தலையோடு நிலைசோர்ந்து வேளாவிக்கோ மாடத்தின் மேல்மாடத்திற்குப் போகிறார்கள். சேனாபதிகள் ஐவரும் வருவதை உப்பரிகையில் இருந்தபடியே சேரன் கண்டுகொண்டான். அவர்கள் வருகையை அவன் எதிர்பார்த்தே நின்று கொண்டிருந்தான். எதிர்பார்த்தபடி அவர்கள் வரவே அரசன் சிறிது யோசனையோடு கையொடு கை புடைத்து உப்பரிகையின் உள்ளிடத்தே உலாவலானன். சேனாபதிகள் மேல் மாடத்தை அடைந்து, அரசன் உலாவிக்கொண்டிருக்கும் உப்பரிகையை அணுகினார்கள். அரசனைப் பார்ப்பதற்கே அவர்களுக்கு நடுக்கமாயிருந்தது. உடல் பதற நடந்து வரும் ஐவரையும் ஏறெடுத்துப் பார்த்தான் சேரவேந்தன். அவன் கண்களில் மாறிமாறி ஒளி வீசியது. ஐவரையும் உற்றுப் பார்த்தான். தலை கவிழ்ந்து நிற்கும் வீர சேபைதிகளைக் கண்டு பெருமூச்சு விட்டான். “கணையன் எங்கே? அத்தி எங்கே?” - இவ் வார்த்தைகள் கூரிய அம்பு பாய்வதென மன்னனிடமிருந்து புறப்பட்டன. கவிழ்ந்த தலை நிமிர, மறுமொழி கூறத் தொடங்கினார்கள். வீர சேனபதிகள் ஐவரில் முதல்வனான ‘நன்னன்’ பேசலானான்: “மன்னவ! கழுமல நகரைச் செங்கணான் கைப்பற்றிக் கொண்டான். கணையனும் அவனிடம் சிறைப்பட்டான்; அத்தி எங்களுடன் கோட்டைக்குள் புகுந்தவன் எங்கோ மறைந்துவிட்டான்.” “செங்கணானின் சேனாபதி பழையனை முன்பு நாம் கொன்றதற்காக இப்போரில் கணையனைப் பிடித்துக் கொண்டானாம்; ஆனால்-” என்று பேச்சை நிறுத்தினான் ‘ஏற்றை’ என்னும் சேனாபதி. “அப்படியா?- உங்கள் வீரத்தைப் போர்க்களத்திலே பறிகொடுத்து விட்டீர்களா? உங்கள் வன்மையையும் செங்கணான் கைப்பற்றிக் கொண்டானா?” என்று சேரன் கண் சிவந்தான். “நன்னனும் அகப்பட வேண்டியவன்! ஆனால் நாங்கள் விடவில்லை; செங்கணான் இவனைப் பிடித்துக் கொன்றுவிட வேண்டுமென்றே எண்ணியிருக்கிறான்! கொங்கணத்தில் பழையனைக் கொன்ற பழியைத் தீர்த்துக் கொள்ளப் பார்க்கிறான்!” என்று துணிவோடு பேசினான் ‘கங்கன்’ என்ற சேனாபதி. “அவனைப் பழி தீர்க்க உங்களால் முடியவில்லை. மானத்தையும் வீரத்தையும் போர்க்களத்தில் போட்டுப் புறங்காட்டு ஓடி வந்தீர்களே! - நீங்கள்-” “எங்களுடைய முயற்சிக்குக் குறைவில்லை, வேந்தே! காரணம்-” என்று நன்னனையும் சேரனையும் மாறி மாறிப் பார்த்தான் ‘புன்றுறை’ என்னும் சேனாபதி. “காரணம் என்ன? அதையல்லவா முதலில் சொல்ல வேண்டும்?” என்று பரபரப்போடு சேரன் கேட்டான். அதற்கு மறுமொழி கூறத் தயங்கினர்கள். அது காறும் பேசாமல் இருந்த ‘கட்டி’ என்னும் சேனாபதி துணிந்து பேசலானான்: - “கணையன் அகப்படுவதற்குக் காரணம், அத்தியே தான்! கணையனோடு நாங்கள் ஐவரும் சேர்ந்து செங்கணானை எதிர்த்தோம்; அப்போது அத்தியை மட்டும் காணவில்லை; அவன் வீரர்கள் தனியே நின்று போர் செய்தார்கள்; தலைவன் இல்லாமல் போர் செய்யும் வீரர்களை எளிதில் தாக்கித் தருணம் பார்த்து, உள்ளே புகுந்து விட்டான் செங்கணான்; அவ்வளவுதான்! நம் படைகள் சின்னபின்னமாகிவிட்டன. பகைவன் படை நம் அணிவகுப்புக்குள் புகுந்த பின்பு என்ன செய்வது? அதற்கு இடம் கொடுத்தவன் தங்கள் மதிப்புக்குரிய அத்திதான்!” - கட்டியின் பேச்சு, சேரனைத் திடுக்கிடச் செய்தது. சேரனின் கண்கள் மருண்டு நோக்கின. “யுத்தத்தில் நிற்காமல் அத்தி எங்கே சென்றான்? அவன் இப்போது எங்கே?” என்று இதழ் துடிக்கக் கேட்டான். அப்போதுதான் நன்னன் தலை நிமிர்ந்து மறுமொழி கூறலானான்: “வேந்தே! ஒவ்வொரு நாளும் அவன் யுத்தம் செய்யாமல் இல்லை. அவன் திறமையைத் தாங்கள் அறியீர்களா? யுத்தத்தில் பகைவரைக் கண்டால் ரத்த வெறி கொண்டவன் போல் துள்ளிக் குதிப்பானே! நேற்று மட்டுமே அவன், விதி வசத்தால்..” நன்னன் பேச்சைக் கேட்டு, கணக்காலிரும்பொறை மேலும் கேள்வி கேட்டான்: “நன்னா! நேற்று அவன் செய்த காரியம் என்ன? யுத்தத்தைவிடப் பிரதான காரியம் வேறு என்ன?” “தங்களுக்குத் தெரியாதா அவன் போக்கு! பாசறையில் தங்கி விட்டான்!” “ஏன்? பாசறையில் தங்கியிருந்தபோது-” “வேந்தே! பாசறையில் நாட்டியம் நடந்தது!” கணக்காலிரும்பொறைக்கு உண்மை விளங்கியது: கடுங் கோபத்தோடு கண்கள் சுழலப் பார்த்தான். “அடே! நாட்டிய அரங்கேற்றம் அங்குமா நடந்தது? நாட்டியம் ஆடவா அவன் அங்கே வந்தான்! ஆண்மையில்லை அவனுக்கு? ஆம்! அவளும் உடன் வந்திருந்தாளல்லவா?-” என்றான். “மருதியோடுதான் பாசறையில் நாட்டியத்தில் ஈடு பட்டிருந்தான். அவள் மயக்கத்தால் மெய் மறந்திருந்தான். கனையன், செங்கணானிடம் அகப்பட்டவுடனே நான் இவர்களுடன் படைகளைத் திருப்பிப் புறப்பட்டேன்; அப்போதே அத்தியின் பாசறையை அடைந்து பார்த்த போது அந்தக் காட்சியைக் கண்டேன். ஆனல் மறுகணமே, நிலைமையை உணர்ந்து அத்தியும் மருதியும் புறப்பட்டார்கள். என் செய்வது? தங்களைப் பார்ப்பதற்குப் பயந்து தான் அவன் அவளுடன் மறைந்து விட்டான். அவன் ஏதோ தவறி விட்டான். வெற்றிக்கு மேல் வெற்றி கிட்டிக் கொண்டிருந்ததால் சிறிது நேற்று அலக்ஷ்யமாக இருந்து விட்டான்! அவன் எங்களிடம் வராததைச் சொல்லாததே பெருந்தவறாக ஆகி விட்டது!” என்று நன்னன் பேசி முடித்தான். “தோல்விக்குக் காரணம் இதுதானா? நன்றாயிருக் கிறது. மருதியின் காதலில் மயங்கி மானத்தை இழந்து விட்டானா? நாட்டிய மாடும் அந்தக் கூத்தனை இன்று மாலைக்குள் என் முன் பிடித்து வாருங்கள்! நன்னா!அவன் மருதியிடந்தான் இருப்பான்! என் முன் அவனைக் கொண்டு வந்து விட்டால் போதும்! போங்கள்! இந்தப் படுதோல்வியை நான் ஒப்புக்கொள்ளேன்” என்று சீறினான் அரசன். மறுகணமே நன்னன் முதலிய ஐவரும் அத்தியைத் தேடுவதற்குப் புறப்பட்டார்கள். சேரனும் அரண்மனைக்குப் புறப்பட்டான். அந்தக் காலத்தில் நாட்டில் போர் நிகழ்வதற்குப் பல காரணங்கள் உண்டு. ‘சோழன் என்னை இகழ்ந்தானாம்! அவனை அடியோடு அழித்து விட வேண்டும்’ என்று புறப்பட்டு விடுவான் சேரவேந்தன். உடனே போர், கடுமையாகிவிடும்! ஆயிரக்கணக்காக, உயிர்கள் மடிய வேண்டியதுதான்! ‘பாண்டியனுக்குப் படைவலி அதிகமாகிவிட்டது! அவனை நம் கீழ் அடக்கிவிடவேண்டும்’ என்று மிகுந்த பரபரப்போடு, சோழன்யுத்த முரசு கொட்டிப் புறப்பட்டு விடுவான். அவ்வளவு தான்! சோழ பாண்டியப் போரில், நாடு நிர் மூலமாகிவிடும். வறுமைப்பேய் தலை விரித்தாடும்! ‘என்ன அதிசயம்! நாம் இந்நாட்டு முடிமன்னர்களாக விளங்குகிறோம். செல்வவளம் மிகுதியாக நம்மிடமே இருக்கிறது. நமக்கு அடங்காதவர்கள் இல்லை! ஆனால் இவன் ஒரு சிற்றரசனாயிருந்தும் இவ்வளவு பிரபலம் பெற்றுவிட்டானே! புலவர்கள் எப்பொழுதும் இவனைப் பாடிய வண்ணமாக இருக்கிறார்களே! இவன் புகழ் உலகத்தில் ஒளி வீசுகிறதே! இவனை நாம் மூவரும் சேர்ந்து ஒழித்துவிடுவோம்; புறப்படுங்கள்’ என்று சேரன், சோழன், பாண்டியன் - மூவரும் அந்தச் சிற்றரசனை அழித்து விடுவார்கள்; இதனால் சிற்றரசனின் புகழ் மங்குமா? முன்னிலும் அதிகமாகிவிடும். ‘எங்கள் முன்னோர்கள் ஆண்ட நாட்டைச் சேரன் தனக்கு வேண்டிய ஒருவனுக்குக் கொடுத்துவிட்டான்: அதை மீட்டுத் தரவேண்டும்’ என்று ஒருவன் சோழனிடமோ, பாண்டியனிடமோ சொல்வான், போர்முரசு கொட்டிப் புறப்பட்டு விடுவார்கள்; வெற்றியும் இருக்கும், தோல்வியும் இருக்கும். எப்படியானால் என்ன? மக்களுக்கு அதனால் உண்டாகும் துயரம் கணக்கில் அடங்குவதா? இவ்விதமாக அந்தக் காலத்துப் போருக்குப் பல காரணங்களைச் சொல்லலாம். காரணம் என்னவோ அற்பமாகத் தான் இருக்கும். யுத்தம் மூண்டபின் ‘தமிழ் நாடே கிடுகிடாய்த்துப் போகுமாம்!’ யுத்தம் செய்வதற்காக முன்னதாகவே ஏற்பாடுகள் அதிகமாக ஒன்றும் செய்யவேண்டியதில்லை. ‘போர்’ என்று சொன்னவுடனே படைகள் புறப்பட்டு விடும். அதுமட்டுமல்ல- ஓர் அரசனிடம் இருக்கும் ஆயுதங்களே, மற்ற அரசர்களிடமும் இருக்கும். ‘இரகசிய ஆயுதம்’ என்று எதுவும் எவரிடமும் அக்காலத்தில் இல்லை. யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, தேர்ப்படை - இந் நான்கும் அக்காலத்தில் பிரபலம் பெற்றிருந்தன. வில், வேல், வாள், ஈட்டி முதலிய பலவித ஆயுதங்கள் இருந்தன. இவை யாவும் அரசர் யாவரிடமும் இருந்தன. ஆனால், இவை ஓர் அரசனிடம் மிகுதியாக இருக்கலாம்; ஒருவனிடம் குறைவாக இருக்கலாம்; அது அவரவர்க்கு உள்ள செல்வ வளத்தையும், ஆட்சி மேம்பாட்டையும் பொறுத்தது. இவ்வளவு இருந்தாலும், நீதியும் நெறியும் நிலையாக இருந்தன அவர்களிடம்.‘செங்கோல் மன்னர்’ என்று புகழ் பெற்றிருந்தார்கள், ஒருவன் கொடுங்கோன் ஆட்சி செய்தால் அவனை ஒறுப்பதிலும் அவர்கள் பின்னடையவில்லை. ‘அறத்தையும் மறத்தையும்’ ஒருங்கே வளர்த்தார்கள் அக்காலத்துத் தமிழரசர்கள் என்றால் மிகையாகாது! இனி, நாம் கூறுகின்ற சரிதகாலத்து அரசர்களான, சேரன் கணக்காலிரும்பொறைக்கும், சோழன் செங்கணானுக்கும் நடந்த போரைப்பற்றிக் கவனிப்போம். சேர நாட்டின் முடிமன்னன் சேரன் கணைக்கால் இரும்பொறை. அவனுக்குக் கீழே பல சிற்றரசர்கள் உண்டு. அத்தி, நன்னன் முதலிய அறுவரும் சிற்றரசர்களாக விளங்குபவர்கள்தாம். சேரன்யுத்தம் செய்ய நேர்ந்தால் அந்த அறுவரும் சேனாபதிகளாக படைத் தலைமை கொண்டு போர் புரிவது வழக்கமாயிருந்தது. அறுவருக்கும் தனித்தனியே நாடுகள் அளிக்கப் பட்டிருந்தன. அறுவரில், அத்தியும் நன்னனும் சேரர்மரபில் பிறந்தவர்கள்: பெரிய வீரர்கள். சேரனால் நன்கு மதிக்கப் பெற்றவர்கள். சேரநாடு அகன்ற நிலப் பரப்பையுடையது என்பது யாவரும் அறிந்ததல்லவா? அன்றியும் மலை வளத்தால் சிறந்த நாடு சேரநாடுதான். மேலைக் கடற்கரையில் உள்ள ‘தொண்டி’ என்னும் துறைமுகப் பட்டினத்தை அத்தி ஆளும்படியாக விட்டிருந்தான். வடமேற்குத் திக்கிலுள்ள கொங்கணம் என்ற பிராந்தியந்தை நன்னனுக்குக் கொடுத்திருந்தான். இவ்வாறே ஒவ்வொருவருக்கும் சேரன் நாடுகள் அளித்திருந்தான். எப்போதும் தன்னிடம் படைத் தலைவனாக இருக்கும் ‘கணையனுக்கு’ கழுமலம் என்ற நகரைத் தந்திருந்தான். இவ்வாறே அகன்ற நிலப் பரப்பையுடைய நாட்டை, தன் கீழ் அடங்கிய சிற்றரசர்களுக்குத் தனித் தனியே அளித்து, தான் முடி மன்னனாக விளங்கினான் கணைக்கால் இரும்பொறை. இல்லையேல் ஆங்காங்கே, பகைவர் தோன்றிக் கலகம் விளைவிப்பதைத் தடுக்க முடியாதல்லவா? அரசியல் தந்திரம் இது என்றால் மறுத்துச் சொல்ல முடியுமா? அதுவன்றியும், சேரன் எப்போதுமே சோழ பாண்டியர்களைவிடப் படை வன்மை மிகுதியாக உடையவனாயிருந்தான். வட கிழக்கிலே சோழரும், தெற்கிலே பாண்டியரும் எப்போதும் சேரனுக்குத் தொல்லை கொடுத்து வந்தார்கள். காரணம், சோழ பாண்டிய நாடுகளுக்கிடையே சேர நாட்டின் தலை நகரான வஞ்சி மாநகர் - கருவூர்க் கோட்டை விளங்கியதேதான். சோழநாடு முற்றும், செங்கணானுக்கு உரியதல்ல; சோழ நாட்டின் பெரும் பகுதிக்கு, கரிகாலன் என்பவன் அரசனக விளங்கினன். உறையூரைத் தலைநகராகக் கொண்டு, திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த ஊர்களுக்குத் தலைவனுக விளங்கினன் செங்கணான். கீழ்த் திக்கிலே கடல்வரையிலும் உள்ள ஊர்களையும், வடகிழக்கிலே காஞ்சியை முதலாகக் கொண்ட தொண்டை மண்டலத்தையும், காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து ஆட்சி செய்தான் கரிகாற் பெருவளத்தான். இதுகாறும் சரித்திரத்துக்கு வேண்டிய அளவு சேர சோழ நாடுகளின் நிலையை அறிந்தோம். இனி நாம் மேற்கூறியவாறு, செங்கணானுக்கும் கணைக்காலிரும்பொறைக்கும் பகை மூண்டுவிட்டதன் காரணத்தை அறிந்துகொள்வோம். சேர நாட்டின் வட மேற்குப் பகுதியில் உள்ள ‘கொங்கணப் பிராந்தியத்தைச்’ சேரன், நன்னனுக்குக் கொடுத்தான் என்பதை முன்பு அறிந்துகொண்டோம். அந்தக் கொங்கணம் என்ற பிராந்தியம் முதலில் கொங்கர் என்ற சாதியாரால் தனியே ஆளப்பட்டு, ஒரு சமயம், சேரர் முன்னோரால் கைக்கொள்ளப்பட்டது. அது தொடங்கிச் சேரர்களுக்கு உரியதாயிற்று கொங்கணம். கணைக்காலிரும்பொறையின் ஆட்சியில் அந்தக் கொங்கணதேசம் அகப்பட்டது. சேர குலத்து உறவு முறையுடைய ஒருவனிடமிருந்து அதைக் கைப்பற்றித் தன் நண்பன் நன்னனுக்கு அதை அளித்தான். நன்னன் தன் திறமை கொண்டு கொங்கரை அடக்கி ஆண்டான். பெரிய அரண்கொண்ட ‘பாழி’ என்ற ஊரைத் தலைநகராகக்கொண்டு கொங்கண தேசத்தை ஆட்சி செய்தான் அவன். கொங்கணப் பிராந்தியத்தை நன்னனுக்குக் கணைக்காலிரும் பொறை அளித்த செய்தியைச் சோழன் செங்கணான் அறிந்தான். கொங்கணத்தைத் தான் பெறவேண்டுமென்று எண்ணம் கொண்டான். அதுவுமன்றி நன்னன் கொடுங்கோலாட்சி செய்வதாகவும் அறிந்தான். செங்கணானோ அறநெறி தவறாதவன். தெய்வ பக்தியுள்ளவன். கணைக்காலிரும் பொறை மீதும் கோபம் கொண்டான். பல தீய காரியங்களை நன்னன் செய்யலானான். ஒரு சமயம் நன்னனுடைய அரண்மனைத் தோட்டத்தில் உள்ள ஒரு கால்வாயின் வழியே சிறுமி ஒருத்தி நடந்துகொண்டிருந்தாள். கால்வாயின் கரையிலிருந்த மரத்திலிருந்து ஒரு பசுங்காய் நீரில் விழுந்தது. இளஞ் சிறுமி அதை எடுத்துத் தின்று கொண்டே வழி நடந்தாள். தோட்டக் காவலர் உடனே அப்பெண்ணைப் பிடித்துச் சென்று நன்னனிடம், ‘அவள் பசுங்காய் திருடியதை’ச் சொன்னார்கள். நன்னன் கோபம் கொண்டு அச்சிறுமியைக் கொன்று விடும்படி கட்டளையிட்டான். அதை அறிந்த அப் பெண்ணின் தாய் தந்தையர், நன்னனிடம் சென்று, “இச்சிறுமியின் நிறைக்குச் சமமாகப் பொன் கொடுக்கிறோம்; யானைகள் பல தருகிறோம். குற்றம் பொறுத்து இவளைக் கொல்லாது விடுக” என்று முறையிட்டார்கள். நன்னன் அவ்வார்த்தைகளைக் கேளாமல் அச்சிறுமியைக் கொன்றுவிட்டான். ஒரு சிறு பசுங்காய் ஒன்றைத் திருடியதன் நிமித்தமாக, அச்சிறுமியைக் கொன்ற நன்னன் கொடுங்கோலன் அல்லவா? இவ்விதத் தீச் செயலைச் செய்யும் அவனைத் தண்டிப்பது நீதியல்லவா? ஆகவே அவனை அழிப்பதற்குக் கருதிய செங்கணான் மீது குற்றம் இல்லையல்லவா? கொடுங்கோலனாகிய நன்னனுக்கு ஆதரவளிக்கும் கணைக்காலிரும் பொறை மீதும் அவன் கோபம் கொண்டதில் வியப்பில்லையன்றோ! இன்னும் வேறு காரணங்கள் எதற்கு? சோழன் செங்கணான் நன்னன் மீது போர் தொடுத்தான். நன்னன் சேரனின் சேனாதிபதியாயிற்றே! உடனே கணைக்காலிரும்பொறை கணையன், அத்தி முதலிய சேனாபதிகளுடன் புறப்பட்டுச் சென்று நன்னனுக்கு உதவி புரிந்தான். முடிவில் சேரனுக்கும் சோழனுக்கும் கடும் போர் மூண்டது. செங்கனான் கடுஞ் சீற்றத்தோடு போர் செய்தான். அவனுடைய சேனாபதி பழையன் அந்தப் போரிலே வெட்டுண்டு வீழ்ந்தான். தன் சேனாபதி பழையன் போய்விடவே, செங்கணான் மிகுந்த கோபத்தோடு கொங்கணத்தை அழித்துவிட்டு உறையூர் மீண்டான்; எனினும் சோழனின் கோபம் தணியவில்லை. சேரனின் படை கருவூருக்குள் புகுந்த சில நாட்களில் மீண்டும் செங்கணான், சேரன் மீதே போர் தொடங்கி விட்டான். கணைக்காலிரும் பொறை கடுங் கோபத்தோடு தன் சேனாபதிகளைப் போருக்கு அனுப்பினான். சேரனின் ஆக்ஞைப்படி நன்னன் முதலியவர் கழுமல நகரில் சோழனின் படையோடு எதிரிட்டுப் போரிட்டார்கள். கழுமலத்தை அழித்துக் கணையனைச் சிறைப் பிடிக்கப் முயன்றான் செங்கணான். அவன் எண்ணம் நிறைவேறியது. போர் நடக்கையில், அத்தி தன் காதலி மருதியுடன் பாசறையில் நாட்டியத்தில் ஈடுபட்டிருந்தான். மற்றச் சேனதிபதிகள் போரில் ஈடுபட்டிருந்தனர். ஒவ்வொரு சேனாபதியும் அவரவர் படையுடன் போர் செய்தார்கள். அத்தியின் படை அவன் இல்லாமலே போரிட்டது. நாட்டியப் பிரியனான அத்தி, பாசறையில் மருதியோடு மெய் மறந்திருந்தான். போர் நினைவு இல்லாமலும் இல்லை. ஆனால் மருதியிடம் எல்லை மீறிக் கொண்ட காதலால் அவன் போர்க்களத்தையும் மறந்து விட்டான். பல நாட்களாகவே அவன் போர் செய்தவன் - விதியின் விளைவால் அன்று மருதியின் நாட்டியத்திலேயே மனமொன்றி விநோதமாகப் பொழுது போக்கி விட்டான். அவன் நர்த்தனம் ஆடுவதில் வல்லவன்; அவளும் நாட்டியத்திறமை மிக்கவள். அவளுக்கு அவன் ஆசிரியன்; அவள் மாணவி!- நாட்டியக் கலை பயில்வதிலேதான், அவள் மாணவி; மற்றச் சமயங்களிலே அவள் அவன் உயிர்க் காதலி! அவ்விருவரைப் பற்றியும் பின்னர் விரிவாக அறிந்து கொள்வோம். அத்தி ஒரு பெரிய வீரனாக இருப்பினும், விநோதமாகப் பொழுது போக்குவதிலே பேராவல் கொண்டவன்; கலா ரசிகன். நர்த்தனப் பிரியன். ‘ஆட்டனத்தி’ என்ற பெயர் அதனால் அவனுக்கு வழங்கலாயிற்று. போரில் புலியேறு போல் பாய்ந்து சமர் செய்வான்; ஆனால் தன் காதலி மருதியுடன் விநோதமாகப், பொழுது போக்குவதைவிட, போரைப் பெரிதாக அவன் மதிக்கவில்லை. அக் காரணத்தால் அன்று பெரிய கேடு உண்டாகி விட்டது; இவன் ஒருவனால் தோல்வி ஏற்பட்டு விட்டது- ஆம்! அதில் சந்தேகம் என்ன? எவ்வளவு கடுமையாகப் பகைவரோடு யுத்தம் செய்தாலும், பிளவுபடாத அணிவகுப்பைப் பல இடங்களில் அமைத்துப் பொருதாலும், ஒருபுறம் - சிறிது சோர்வு காணப்பட்டால், பகைவர் உள் புகுவதற்கு மிக எளிதல்லவா? பகைவர் உள்ளே புகுந்த பின் முன்னே அணிவகுப்புக்கள் சின்ன பின்னமாகாமல் இருக்குமா? அவ்வளவுதான்; படைத் தலைவன் கணையன் அகப் பட்டான் செங்கணானிடம்; கழுமலம் அவன் வசமாயிற்று. நன்னன் முதலியோர் தோல்விக்குக் காரணமான அத்தியைப் பாசறையில் கண்டார்கள்: அடுத்த கணமே யாவரும் கருவூர்க் கோட்டையை நோக்கி ஓடினர்கள். தன் தவறை உணர்ந்த அத்தி சேரன் முன் செல்ல நடுங்கினான். தன் ஆருயிர்க் காதலியோடு நகருக்குள் மறைந்து விட்டான். |