(வ. வேணுகோபாலன் அவர்களின் ‘மருதியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

3. சேரன் கட்டளை

     கோட்டைக்குள் தனக்குரிய மாளிகையை அடைந்தான் அத்தி. திகிலடைந்த மனத்தோடு அத்தியும் மருதியும் அம்மாளிகைக்குள் பதுங்கினார்கள். ஒவ்வொரு கணமும் அவ்விருவரும் அன்றில் பறவை இரண்டென மனம் பதை பதைத்துக் கொண்டிருந்தார்கள்; சேரன் கோபம் கொள்வானே என்று மட்டுமல்ல, இது காரணமாக ஒருவரை ஒருவர் பிரிய நேருமோ என்று தான் கலங்கினார்கள். அவர்கள் கலங்கியிருந்த அச் சமயத்தில்தான் நன்னன் முதலிய ஐவரும் அம்மாளிகைக்குள் புகுந்தனர். அவர்களைக் கண்டதும் காதலர் இருவரும் திடுக்குற்றார்கள். சேரவேந்தனின் கட்டளையை நன்னன் கூறியதுதான் தாமதம், உடனே மருதி ‘ஆ’ என்று கூவி மூர்ச்சையானாள்.

     அவள் மூர்ச்சை அடையும்படி நன்னன் என்ன கூறி விட்டான்? அவன் தெரிவித்தது அவ்வளவு அதிர்ச்சியைத் தரும் கட்டளையா? - ஆம்! மருதிக்கு, நன்னன் கூறிய வார்த்தைகள் அதிர்ச்சியையே தந்தன. அவன் கூறிய வார்த்தைகள் அவளால் பொறுக்க முடியாதவைதாம். “அத்தி, நடந்ததை அரசனிடம் தெரிவித்தேன். பெருங் கோபம் உண்டாகி விட்டது; உடனே, உன்னைக் காவலுடன் பிடித்து வரும்படி எங்களுக்குக் கட்டளை பிறந்திருக்கிறது; தவறினால்-”

     நன்னன் கூறியது இவ்வளவே. ஆனால் அது எவ்வளவு விபரீதமானது! தொண்டி நகரின் அரசனாகிய அத்தியை, குற்றம் செய்தவனாகப் பிடித்துச் செல்வதா? அது ஒரு புறம் இருக்கட்டும்; அவன் காதலி- மருதியை விட்டு அவனைப் பிரிக்க முடியுமா? அவளைப் பிரிந்திருக்க முடியுமானல், தொண்டி நகரத்திலிருந்து அவளை, தன்னுடன் அங்கு அழைத்து வருவானா?

     மருதி மூர்ச்சை அடைந்ததுதான் தாமதம்; சரேலென்று அத்தியின் முகம் மாறியது. மருதியை, மஞ்சத்திலே படுக்க வைத்தான். சந்தனத்தை முகத்திலே தெளித்தான். விசிறிகொண்டு மெல்ல வீசினான். அவளை நினைவுகொள்ளச் செய்வதற்கு அரும்பாடு பட்டான். நன்னன் முதலியவர்கள் இன்னது செய்வதென அறியாமல் தயங்கி நின்றார்கள். மருதியை அப்போதுதான் அவர்கள் கண்களால் ஆதுரம் தோன்றப் பார்த்தார்கள். ‘மருதி - அத்தி’ - இரு காதலருடைய உயர்ந்த காதலை மனத்தால் நினைத்தார்கள் வந்த காரியத்தையும் மறந்தார்கள். மருதியின் இளமையையும், அவள் அழகு மேம்பாட்டையும் அவளுக்கு அடிமையாகிக் கிடக்கும் அத்தியின் நிலையையும் கண்டு ஆச்சரியம் அடைந்தார்கள். அவர்கள் யோசனையில் மூழ்கியிருக்கும் தருணம், இடிபோன்ற குரலில் அத்தி பேசினன். அதுவரை அவனுக்கு அவ்வளவு கோபம் வந்ததே இல்லை.

     “நன்னா! எல்லாம் தெரிந்து கொண்டேன். என்னிடம் தவறு இருப்பதை நான் அறியாதவன் அல்ல; ஆனால், இத் தவறுக்காக எல்லாவற்றையும் இழக்க ஆயத்தமாக இருக்கிறேன். எவ்விதத் தண்டனைக்கும் உடம்படுகிறேன். என் காதலி - இவளை மட்டும் பிரிவது என்னால் முடியாது. என் பிரிவை இவள் பொறுக்க முடியாதவள்! அந்தச் செங்கணானுடன் எவ்வளவு காலம் நான் போர் செய்வது? நான் இவளுடன் புறப்பட்டுத் தொண்டிக்குப் போய்விடலாம் என்று எண்ணுகிறேன்.”

     இவ்விதம் மெய்மறந்து பேசலானான் அத்தி. நன்னன் முதலியவர் அவனைப் பற்றி நன்கு அறிவார்கள்; அதனால் அவனுடைய பேச்சுக்குச் சிறிது நாழிகை மறுமொழி கூறாமல் தயங்கி நின்றார்கள்: “அத்தி, நாங்கள் என்ன செய்ய முடியும்? வேந்தனின் கட்டளையை நிறை வேற்றுவது எங்கள் கடமை என்பது நீ அறிந்தது தானே!”

     “அப்படியானால் பொறுத்திருங்கள்! இவள் நினைவு வந்த பின்பே நான் எதுவும் சொல்லமுடியும். நான் வேந்தனிடம் வருவதானல் இவள் உடம்பாட்டைப் பெற்ற பின்பே வரமுடியும்.”

     இவ்வாறு அத்தி கூறிவிடவே நன்னன் முதலியவர் வாய்பேசாமல் வியப்புற்று நின்றார்கள். ‘ஒருவரும் அறியாமல் தொண்டி நகருக்கு இவளுடன் ஓடிவிடுவானோ!’ என்றும் அவர்கள் சந்தேகம் கொண்டனர்.

     சட்டென்று அப்போது அவர்கள் பார்வை ஒருங்கே மருதி மீது சென்றது.

     மஞ்சத்திலே படுத்திருந்த மருதி சிறிது பெரு மூச்சு விட்டாள். அவள் நெற்றியில் முத்துப்போல் வியர்வை அரும்பின. அவளது கொவ்வை இதழ்கள் சிறிதே மென்மெல அசைவுற்றன. சிவப்பூறியிருந்தன இரு கன்னங்களும். விசிறியிலிருந்து தவழும் காற்றால், அவளது கூந்தலின் சுருண்ட நெற்றி மயிர் நானாபுறமும் தவழ்ந்தது. காதுப்புறம் வரை, ஓடிய கயல்விழிகள் - மின்னல் ஒளியொடு மெல்லப் பிறழ்ந்தன. ஆதுரத்தோடு அந்தக் கருவிழிகளைக் கூர்ந்து நோக்கினன் அத்தி. களி துள்ளலாடியது அவன் முகத்தில். ‘எழுந்து களி நடம்புரியலாமா?’ என்றுகூட எண்ணிவிட்டான். நிறம் ஊட்டிய நீலமலர் இரண்டுபோல், தோன்றிய கரு விழிகள், ஒரு முறை, காதுப்புறம் வரை ஓடித் திரும்பின! அந்தக் கருவிழிகளில்தாம் எவ்வளவு கவர்ச்சி! களிதுள்ளும் வெறியொளியல்லவா அது! முடிவில்லாத இன்ப வசீகரம் அதில் துள்ளலாடியது. மதர்த்துச் செழித்து, செவ்வரி படர்ந்த கருவிழிகள் என்று புலவர் கூறும் புனை மொழி இவள் விஷயத்தில் உண்மையாகத் தெரிகிறதே! இவள் கருவிழிகள் இரண்டுமே போதும், உலகத்தை வாட்டி, அழிப்பதற்கு!

     பார்த்துப் பார்த்துப் பரவசமானான் அத்தி. எண்ண அலைகள் மீதே அவன் மனம் நர்த்தனமாடியது.

     “மருதி, மருதி!” என்று கொஞ்சும் மொழியால் மருதியைக் குளிர்வித்தான்.

     “ஐய! என்ன ஆயிற்று? நாம் போய்விடுவோமே!-”

     மருதி எழுந்து உட்கார்ந்து கொண்டே பேசினாள்: நன்னன் முதலியவர் நிற்பதைப் பார்த்தவுடன் அவள் மனம் அச்சத்தால் நடுங்கியவாறே இருந்தது. மருதியிடம் அத்தி கூறப்போவது என்ன என்று ஆவலோடு எதிர்பார்த்தார்கள் நன்னனும் மற்றவர்களும். அவன் என்ன மறுமொழி கூறமுடியும்? அவன் யோசித்தவாறே சிறிது மௌனமாக, அவளை உற்று நோக்கியிருந்தான்.

     அத்தியின் முகத்தைக் கண்டு மருதியின் மனத்தில் பழைய சம்பவங்களின் நினைவுகள் எழுந்தன. அத்தியின் முகத்தைப் பார்த்தபடியே பழைய நிகழ்ச்சிகளைக் கனவு கண்டாள் மருதி. அவள் கண்ட கனவுக் காட்சி என்ன? முன்பு நடந்தவற்றையே அவள் மீட்டும் மனத் திரையில் கண்டாள். அதிலே ஓர் ஆறுதல் கண்டாள்?

     தொண்டிப்பட்டினத்தில் தான் வாழ்ந்தது, அத்தியின் நர்த்தனச் சிறப்பைக் கண்டு அவன் மீது காதல் கொண்டது, கடற்கரையில் நாட்டியமாடி அத்தியை மயங்கச் செய்தது, அத்தி அவளைக் காதலித்துத் தன்னிடம் அழைத்துக்கொண்டது, அவள் கேட்ட உறுதி மொழிக்கு அவன் இணங்கியது - இவை முதலான கனவுக் கோவைகளே அவள்முன் தோன்றின. இந்தக் கனவுக் கோவையைப்பற்றிச் சிறிதே இங்கு அறிந்து கொள்வோம்.

     தொண்டி நகரில் கணிகையர் குலத்தில் பிறந்த தருணமங்கை மருதி. அழகு மிக்கவள். அருங்குணம் படைத்தவள். நாட்டியக் கலை பயின்று யாவராலும் புகழப் பெற்றாள். தொண்டி நகர் அரசனாகிய அத்தி நர்த்தன கலாநிதியாக விளங்கினான். அந்நாளில் அவனை, எல்லாவித ஆடலிலும் வெல்பவரில்லை என்றே சொல்லலாம். நர்த்தனக் கலையிலே அவனைப்போல் பயிற்சி பெற்றவர் இல்லை. ஆடல் வல்லோர் யாவராயினும், அத்தியின் பெயரைக் கேட்டால் தலைவணங்குவார்கள். கொல்லி மலையில் இருந்த ஒரு முனிவரிடம், அவன் நர்த்தனக்கலை பயின்றவனாம். கொல்லிமலைத் தெய்வமே அவ்வாறு நர்த்தனக் கலையை இவனுக்கு அளித்ததோ என்னவோ என்று தான் சொல்வார்கள். அத்தி இயற்கையிலேயே பேரழகு படைத்தவன்; உத்தம வீரனுக்குரிய லக்ஷணங்கள் அவனிடம் பொருந்தியிருந்தன. நர்த்தனப் பயிற்சியால் அவன் மேனி மிகுந்த வசீகரத் தோற்றத்தைப் பெற்றது: தன் அழகைக் கண்டு தானே வியந்து கொள்வானாம் சில சமயம். அவன் நர்த்தனம் ஆடும்போது, கண்டவர்கள் ஆண் - பெண் இரு திறத்தாரும் அவன் அழகிலே ஈடுபட்டு மயங்குவார்களாம்; அவனைக் கண்டு காதல் கொள்ளாத மங்கையர் இல்லை! அவ்வளவு அழகுடையவன்!

     அவன் தொண்டி நகர்க் கடற் கரையில் ‘நர்த்தனம்’ ஆடிய ஒரு நாள், நகர மக்கள் யாவரும் கூடியிருந்தார்கள். அவன் ஆடல் சிறப்பைக் காண்பதற்கு எத்தனையோ பல காதங்களுக்கு அப்பாலிருந்துங்கூட மக்கள் வருவார்களாம். அன்றும் பலர் வந்திருந்தார்கள். அவன் நர்த்தனம் ஆடுவதற்கு முன் எத்தனையோ பல மங்கையர் நாட்டியம் ஆடினார்கள். அவனிடம் பயிற்சி பெற்ற பல இளைஞர்கள் நர்த்தனம் ஆடினார்கள். முடிவில் அத்தியின் நடனம் தொடங்கியது.

     சிவபெருமான், திரிபுரம் எரித்த காலத்தில், விரித்த செஞ்சடையாட, பேரானந்தத்தோடு கைகொட்டி ஆடிய ‘கொடு கொட்டி’ என்னும் ஆடலை ஆடினான். அவன் ஆடலுக்கு ஏற்பத் தாளம் போடுவதற்கு பல மங்கையர்கள் முன்வந்தனர். ஆனந்த நர்த்தனம் புரியும் அத்தியின் ஆடலிலே மயங்கியவர்களாய்த் தாளம் போடவும் வன்மையின்றிச் செய்கையற்று நின்றார்கள் அவர்கள். ஆனால் அவன் ஆடல் முடியும் வரை, சோர்வில்லாமல் தகுந்த படி தாளம் தந்தாள் மருதி.

     அத்தியின் ஆடலுக்குப் பொருத்தமாக மருதி தாளம் தருவதைக்கண்டு, அங்கே கூடியிருந்தவர்கள் வியப்புற்றார்கள். அவளுடைய திறமையை அறியும் நிமித்தமாக அத்தியும் அற்புத நடனம் புரிந்தான். அத்தியை மயக்கித் தன் வசமாக்க வேண்டுமென்று நெடு நாட்களாக எண்ணியிருந்த மருதிக்கு அன்று தருணம் வாய்த்தது. அத்தியை அன்றே தனக்கு உரிமையாக்கிக் கொள்ளவேண்டும் என்ற தீவிர எண்ணம் கொண்டு நின்றாள். ‘இந்த இளமங்கைக்கு இவ்வளவு துணிவா? ஏதோ இவள் சூழ்ச்சியோடுதான் இப்படி வந்திருக்கிறாள்’ என்று சந்தேகம் கொண்டான். அவளுடைய அழகிலே அவன் ஈடுபட்டதோடு, அவள் நாட்டியத்திலும் திறமைமிக்கவளோ என்றும் யோசித்தான். அவளை முற்றும் பரீட்சிக்க எண்ணினன்.

     பாரதி வடிவாகிய கொன்றை வேணிக்கடவுள், வெண்ணீற்றை உடம்பெல்லாம் பூசி, பாம்புகள் பட மெடுத்து ஊசலாட, ஆடிய ‘பாண்டரங்கம்’ என்னும் ஆடலை ஆடத் தொடங்கினான்; தன் எண்ணம் நிறைவேறியதாகக் கருதிய மருதியும் முன்னிலும் பன் மடங்கு குதூகலம் கொண்டு, அதற்கேற்ப ‘பாணி’ (தாளம்) தந்தாள்.

     இளநகை செய்தவாறே அத்தி அவளை நோக்கி, “பாணி தருவது பெரிதல்ல! என்னுடன் சமமாக ஆட முடியுமா?” என்றான். மருதியின் முத்து நிரை பற்கள் ஒளி வீசின. பெரு மூச்சு விட்டவாறே கடைக்கண்களால், அத்தியை விழுங்கி விடுவாள் போல் பார்த்தாள்.

     “ஐயனே! அநுமதி தந்தால் ஆட ஆயத்தமாக இருக்கிறேன்; ஆனால், ஆடிவிட்டால் பணயம் என் விருப்பம்போல் அளிக்க முடியுமா?”

     மருதியின் இனிய பேச்சைக் கேட்டு அத்தி திகைத்து விட்டான். அவளிடம் அவன் உள்ளம் பாய்ந்தது. புன்னகையால் மறுமொழி அளித்தான்.

     “உன் பெயர்? நீ யார் மகள்?”

     “என் பெயர் மருதி; விடங்கி என்ற கணிகையின் மகள் நான்; இன்னும் நாடக அரங்கில் நான் அடிவைக்க வில்லை; நடனக் கலையில் மேம்பட்ட ஓர் உத்தமனை விரும்பி வாழ்ந்து வருகிறேன்.”

     “அவன் யார்?”

     “என் முன் ‘கொடு கொட்டியும், பாண்டரங்கமும்’ ஆடிய காம திலகன்தான்!” - மருதி கூறிவிட்டு நகைத்து விட்டாள்.

     “ஆ! யாரைச் சொல்கிறாய்? என்னையா?” - அத்தி கேட்டவாறே கூட்டத்தில் உள்ளவரைப் புன்னகை யோடு பார்த்தான். கைகொட்டிச் சிரித்து விட்டார்கள் யாவரும். எங்கும் ஒரே ஆரவாரம். மருதி மீது பொறாமை கொண்ட மற்றப் பெண்கள் மனம் பொருமிப் பெருமூச்சு விட்டார்கள்.

     “மருதி, எங்கே ஆடல் நடக்கட்டும்!” என்று பாண்டரங்கக் கூத்தைத் தொடங்கினான். எள் விழ இடமில்லாமல் மக்கள் கூடிவிட்டார்கள். மருதியும் அத்தியும் சமமாகச் சீரோடு பாண்டரங்கம் ஆடினார்கள். மருதி சிறிதும் களைப்புறவில்லை. அத்தியின் ஆடலுக்கு ஏற்ப அவளும் நயம்பட ஆடினாள். அத்திக்கு வியப்பு மேலிட்டது. ‘என்னுடன் சமமாக ஆடும் திறமை இவளுக்கு எப்படி உண்டாயிற்று? இவள் மேனியின் லாவகம்தான் என்ன? இவள் நினைத்தபடி இவள் அங்கங்கள் அழகு தோன்ற வளைந்து கொடுக்கின்றன! இத்தகைய பயிற்சியை எப்படி இவள் பெற்றாள்? இந்நகரில் எத்தனையோ பலர் நாட்டியம் ஆடுகின்றனர். ஆனல் இவள் ஆடலுக்கு இணையாகக் கூறுவதற்கில்லையே! என்னை வசப்படுத்தும் நோக்கமே இவளை இவ்வாறு ஆடச் செய்கிறது!’ என்று நினைத்தான் அத்தி.

     உடனே அவளை மீட்டும் பரீட்சித்தான். குவலயா பீட யானையைக் கொன்று அழித்தபோது கண்ண பிரான் களிகூர்ந்து ஆடிய ‘அல்லிக் கூத்து’ என்பதைத் தொடங்கினான். மருதியும் தளராமல் ஆடினாள். ‘மல்லாடல்’, ‘துடிக்கூத்து’, ‘காபாலப் பெருங்கூத்து’, ‘குடையாடல்’, ‘பேடி யாடல், ‘மரக் காலாடல்’, ‘பாவை யாடல்’ - இவ்வாறு பதினொரு ஆடல்களையும் அத்தியோடு சமமாக ஆடினாள் மருதி. பெண்டிர் ஆடும் பலவித அபிநயக் கூத்துக்களையும் ஆடினான். மருதி அத்தியை வென்று விட்டாள். அவள் ஆடிய திறம் யாவரையும் வசீகரித்தது. முடிவில் அத்தி மிகுந்த குதுகலத்தோடு மருதியை அணுகி, “நீ வேண்டிய பணயம் என்ன? இவ்வளவு பயிற்சி உனக்கு எப்படி உண்டாயிற்று?” என்றான்.

     “ஐயனே, நான் தங்களையே வேண்டுகிறேன்! என் மனத்தில் தங்களை நினைத்தே இவ்வளவு பயிற்சியையும் பெற்றேன்” என்று அவனைக் கைகுவித்து வணங்கினாள்.

     “மருதி, என் ஆடலைக் கண்டு களிப்பதற்கு நீ ஒருத்தியே போதும். நீ விரும்பியபடியே என்னை உனக்கு. அளித்துவிட்டேன். வருக, அரண்மனைக்கு” என்று அவள் தளிர்க்கரத்தைப் பற்றினான்.

     “எக்காலத்தும் என்னைப் பிரிவதில்லை என்று உறுதி மொழி வேண்டும்.”

     “இனி, உன்னைப் பிரிய என்னால் முடியாது; வீண் சந்தேகம் எதற்கு?” என்று வியப்போடு அவளைத் தழுவிக்கொண்டு அரண்மனை புகுந்தான்.

     கூடியிருந்தவர்கள் மருதியின் திறமையைக் கண்டு வியந்துபோனார்கள். அன்று கடற்கரையில் நாட்டியக் கொண்டாட்டத்திலே அத்திக்கும் மருதிக்கும் தளிர்த்த காதல் மிக விரைவில் வளர்ச்சியுற்றது. அவளும் அவனும் எக்காலத்தும் பிரிவின்றி வாழ்ந்தனர். அவர்களுடைய இன்ப வாழ்விற்குக் குறுக்கீடாக, சேரனுக்கும் சோழனுக்கும் போர் மூண்டது. அத்தியைப் போருக்கு வருமாறு கணைக்காலிரும்பொறை கட்டளையனுப்பினான். முடிமன்னனின் ஆணைக்குச் சிற்றரசன் அத்தி தலைபணியாமல் என்ன செய்வது? சேரனின் சேனதிபதியல்லவா அவனும்? போருக்குப் புறப்பட்டான். மருதியும் புறப்பட்டாள். அவன் அளித்த உறுதிமொழிப்படி போருக்குப் போனாலும், கணிகையர் உடன் போவது தவறல்லவே! அத்தி அவளை அழைத்துச் சென்று சேரனின் தலை நகராகிய கருவூர்க்கோட்டையில் தனக்குரிய மாளிகையில் தங்கினான். தொண்டியை விட்டு மருதி, கருவூர் வந்ததற்குக் காரணம் இதுதான். போர் நடந்த விவரந்தான் அறிந்ததாயிற்றே. இந்தச் சம்பவங்களைத் தான் மருதி, மனத்திரையிலே கண்டாள். பழைய சம்பவங்களைப் பற்றிய சிந்தனை அறுந்தது. அத்தியை நோக்கி ஏதோ சொல்ல முற்பட்டாள்!

     மருதியின் சிவப்பூறிய கண்களிலே நீர் திரையிட்டது. சுற்று முற்றும் நோக்கினாள். வார்த்தைகள் அவள் வாயிலிருந்து வெளிக் கிளம்பவில்லை. கூற விரும்புவன போல், வாயிதழ்கள் மெல்ல அசைந்தன. நன்னன் முதலியவர் அங்கே சூழ்ந்து நிற்கும்போது, அவள் எதுவும் கூறத் துணிவு கொள்ளவில்லை. ஆவலோடு அவள் கண்களை நோக்கியிருந்த அத்தி, உண்மையை உணர்ந்தான். சட்டென்று சூழ்ந்து நின்ற நன்னன் முதலிய சேனாபதிகளைப் பார்த் தான்.

     “நீங்கள் சற்று இங்கே இருங்கள்; நான் தனியே பேசிவிட்டு வருகிறேன்-” என்று கூறியவாறே அவர்களைப் பார்த்தான்.

     “அமைதியாகப் பேசிவிட்டு வரலாம்; ஆனால், விரைவில்...” என்றான் நன்னன்.

     “அவ்வளவு அவசரம் இப்போது என்ன?”

     “உனக்குத் தெரியாதா? மறுபடியும் போர் தொடுக்க வேண்டுமாம்! இதுவே இறுதிப் போராக, சோழனைச் சிறைபிடிக்கப் போகிறார் நம் அரசர்...”

     “மீண்டுமா? அதற்கு இப்போதே ஏதாவது...”

     “உன்னிடம் கடும் கோபத்தோடு இருக்கிறார்.”

     “இருக்கட்டும்; நான் விரைவில் வருகிறேன்” என்று கூறிவிட்டு மருதியின் கையைத் தன் கையோடு கோர்த்துக்கொண்டு அருகில் இருந்த அறைக்குள் புகுந்தான் அத்தி.

     நன்னன், மற்றச் சேனாபதிகளைக் கண்டு நகை புரிந்தான்.

     அறைக்குள் சென்று மருதியுடன் ஒரு மஞ்சத்தில் அமர்ந்தான்; மருதியின் கண்கள் நீர் துளும் பியவாறே இருந்தன.‘மீட்டும் போர்’ என்ற வார்த்தை அவளை நிலை கலங்கச் செய்தது. கூற எண்ணியதை யெல்லாம் மறந்துவிட்டாள். மறுகி மறுகி அழலானாள். அத்திக்கு மனம் பதறியது. அவளை ஆறுதல் அடையச் செய்வது மிகவும் அரிதாக இருந்தது.

     “வேண்டாம்! இந்தப் போர். உங்களுக்குப் போர் வேண்டாம்; போர்க்களம் போக வேண்டாம்! நானும் போர்க்களம் வந்து பாசறையில் ஏங்கிக் கிடக்க மாட்டேன். தொண்டி நகருக்கு ஓடிவிடலாம்; புறப் படுங்கள்!” -மருதி இவ்வாறு பதற்றத்தோடு பேசினள்.

     “ஓடிப்போவதா? இதென்ன! உனக்கு அவ்வளவு பயம் ஏன்? நாம் ஓடுவதானால் தொண்டி நகரின் அரசுரிமை நிலைத்திராது; கொல்லி மலைக்குத்தான் ஓட வேண்டும். போருக்குப் பயந்து ஓடுவது வீரனுக்கு அழகா? நான் ஒரு பேடியா?” - இவ்விதம் அத்தி கலங்கிய பார்வையோடு கூறினான்.

     “அப்படியானல் என்ன செய்வது? நானும் முன்பு போல் போர்க்களம் வந்து பாசறையில் தங்கியிருக்கலாம் என்று சொல்கிறீர்களா? முன்பே சேரவேந்தர் என்னை உடன் அழைத்துப் போகக் கூடாது என்று மறுத்தது நினைவில்லையா? என்னலேயே தாங்களும் போர்க் களத்தை விட்டு வந்து விட்டதை ஒரு காரணமாகக் கொண்டு, தோல்விப் பட்டத்தை உங்கள் மீதே சுமத்தி விட்டார்கள், இந்த வீர சேனாபதிகள்! இனி, வேந்தரின் கோபத்துக்குக் கேட்க வேண்டாம்! நீங்கள் போனால் என்ன சொல்கிறாரோ? எனக்கு என்னவோ மனம் கலங்கத்தான் செய்கிறது...”

     “மருதி, நீ என்ன சொல்கிறாய்?-அப்படியானல், இங்கேயே தங்கிவிடு; நான் போர் முடிந்தவுடன் திரும்பி விடுகிறேன்.”

     “என்னைப் பிரிந்து போகவா? உங்கள் மனம் இரும்பா, கல்லா? என் காதுகள் கேட்க இவ்வளவு துணிவோடு சொல்லுகிறீர்களே! ஐய, உண்மையில், என்னைப் பிரிவதென்றா முடிவு செய்தீர்கள்?”

     “மருதி, இது என் முடிவல்ல; முன்பே அரசன் கடிந்து சொல்லியிருப்பதால் மறுபடியும் தீவிரமாக மறுத்துச் சொல்வானே என்றுதான் யோசிக்கிறேன். மருதி, இப்போது நிலைமை மிகவும் பயமாகத்தான் தோன்றுகிறது எனக்கு. சோழனை வெல்வது சாமானியமல்ல! கடும் போர் புரிந்தால்தான் நமக்கு வெற்றி கிட்டும். அதனால் நீ அங்கே வந்து கூடாரத்தில் தங்குவதுகூட இப்போது முடியாதுதான்! உன்னைப் பிரிந்திருக்கவும் என்னால் முடியாதுதான்; ஆனால் போருக்குச் செல்லாமல், ஓடிப் போவது முறையா? நியாயமா?”

     மருதி மனம் தடுமாறினாள். என்ன சொல்வதென்று அறியாமல் மருண்டு நோக்கினாள். பிரியவும் அவள் மனம் விரும்பவில்லை; அத்தியின் விருப்பத்தை மாற்றி அவன் மனத்தைப் புண்படுத்தவும் எண்ணவில்லை! போர்க்களத்திற்கு அவனுடன் போகவும் துணியவில்லை: அத்தி மட்டும் போருக்குப் போனால், அவனுக்குத் துன்பம் ஏதேனும் நேர்ந்தால் என்செய்வது என்ற பயமும் கணத்துக்குக் கணம் அவள் இருதயத்தைப் பிளந்தது. ‘அத்தியைப் போருக்குப் போக அநுமதிப்பதா? அல்லது அவனுடன் எங்கேனும் நாடுகடந்து ஓடிவிடுவதா’ என்று தனக்குள் தானே கேட்டுக் கொண்டாள். ‘ஒரு பெண், வெறும் காதல் வேட்கையால், ஒரு வீரனின் வீரத்துக்குக் களங்கம் உண்டாக்குவதா? வீரனைப் பேடியென்று சொல்லும்படி, பழிக்கு ஆளாக்குவதா? ஏன்! போருக்குச் சென்று திரும்புவாரோ இல்லையோ என்றுதானே பயம்? அதற்காக இவரை மானம் இழக்கச் செய்வதா? - இல்லை! போர் புரிந்து இவர் திரும்பியபின் நிலையாக இன்பத்தைப் பெறுவோமே! - இல்லையேல் மறுபிறவியிலேனும் இவரை அடைவதற்குக் கொல்லிப் பாவையிடம் உயிரைப் பலி கொடுப்பேன். என் பெண் மதியால் இவர் வீரத்தை மாசுறும்படிச் செய்யேன்! இவர் சொல்லை மீறுவதும் என் வாழ்வுக்கு ஏற்றதல்ல!’

     -இவ்வாறு மருதியின் காதல்மனம் உறுதிசெய்தது. “ஐயனே, கவலைவேண்டாம்!” என்று தளிர்க்கரத்தால் அவன் வயிரத் தோள்களைத் தடவினாள்.

     “கவலையா? மருதி! ஏதோ உன் மனத்தில் உறுதி கிளைத்துவிட்டதாக உன் கண்கள் தெரிவிக்கின்றனவே! ஆனால் என் மனம் இருதலைக் கொள்ளி எறும்புபோல் தடுமாறுகின்றது.”

     “வேண்டாம்! எதற்கும் நான் துணிந்துவிட்டேன்.”

     “துணிவு! போர் புரியவா? - ஓடி மறையவா?”

     “வீரத்தோடு போர்புரிந்து வாருங்கள்! நான் ஏங்கிக் கிடந்தாலும், உயிரைப் போகவிடாமல் உங்களை எதிர்நோக்கிக் கொண்டிருப்பேன். அதிக நாள் பசியோடு உயிர்வாழ முடியாது! ஆனால், தங்களைக் காணும் ஆவலோடு உயிர்வாழ முயன்று பார்க்கிறேன்!”

     “மருதி, என் உள்ளத்தை அறிந்தவள் நீ! அதனால் தான் இக் காரியத்தில் உனக்குத் துணிவு உண்டாகி விட்டது; எனினும் என்னால் பொறுக்க முடியாது உன் பிரிவை. உன்னைக் காணவேண்டுமென்று தோன்றிவிட்டால் போர்க் களத்தை மறந்து விடத்தான் நேரும்! வாள் நுனியில் நின்றாலும் சரி, திரும்பி விடுவேன்! தெய்வம் எனக்கு உதவி செய்ய வேண்டும்!”

     “ஐயனே, என் மனம் துணிவு கொண்டதை மறு படியும் நெகிழச் செய்கிறீர்கள்! வேண்டாம்! தங்கள் வீரத்துக்குக் களங்கம் உண்டாக்குவது என் காதலுக்கும் கறை உண்டாக்கியதாகும்! தங்களைப் போரில் புறங்கொடுத்து ஓடிய பேடியாகச் செய்ய நான் விரும்பேன்! என் நினைவு வருமானால், கைவாள் முனையிலும் நான் நிற்பதாகக் காணுங்கள்! உங்கள் கைவேல் நுனியிலும் நான் களிநடம் செய்வதாகக் கருதுங்கள்! வெற்றியுடன் திரும்புங்கள்!”

     “திரும்பாவிடில்! -”

     “நீங்கள் எந்த உலகில் இருந்தாலும் நான் பின் தொடர்ந்து வருவேன்! என் காதல் எனக்கு வழி காட்டும்!”

     “அப்படியானல், அரசனின் விருப்பத்துக்கு நான் உடம்படலாமா?”

     “என் காதலில் நம்பிக்கை கொண்டு போய் வாருங்கள்!”

     “மருதி, இப்போது நான் சேரவேந்தனைப் பார்த்து விட்டு வருகிறேன். அதுகாறும் கவலையில்லாமல் இரு” என்று கூறிவிட்டு, அறையிலிருந்து புறப்பட்டான். மருதியின் ஒளிவீசும் வகிர்நுதலில் தன் இரு கைகளாலும் தடவி, அவள் - அச்சத்தை அகற்றிவிட்டு வெளியே வந்தான். மருதி அவனைப் பின் தொடர்ந்து ஆண் மானின் பிரிவுக்கு மனம் குமுறும் பெண் மான்போல் அலமந்த கண்களோடு நின்றாள்.

     “நன்னா! புறப்படலாம்; எதுவரினும் நான் அதற்கு ஆயத்தமாக இருக்கிறேன்” என்றான் அத்தி.

     மறுகணமே நன்னன் முதலியவர் சூழ்ந்துவர, கையில் வேலைத் தாங்கிக்கொண்டு, மாளிகையை விட்டுப் புறப்பட்டான். குதி கொள்ளும் பிடரி மயிருடைய வெண்குதிரை மீதே அத்தி ஏறிக் கொண்டான்; நன்னன் முதலிய ஐவரும், தத்தம் குதிரை மீது ஏறியமர்ந்தனர். மாளிகையின் வாயிலிலிருந்து இராசவிதி வழியே அறுவர்களும் குதிரையில் ஏறியவர்களாய் சேரவேந்தனின் அரண்மனை நோக்கிச் சென்றார்கள். மருதி மாளிகையின் உப்பரிகையில் இருந்தவாறே அத்தியின் உருவம் மறையும் வரையில் பார்த்து நின்றாள்.



மருதியின் காதல் : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17