உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(வ. வேணுகோபாலன் அவர்களின் ‘மருதியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) 6. மருதிக்குச் சிறை சேரன் சிறைப்பட்ட செய்தி பரவி, நகரில் பெருங் கலக்கம் உண்டாகிய சிறிது நாழிகையில் அரச வீதி வழியே ஒரு பல்லக்கு மிக வேகமாகச் சென்றது. நூற்றுக் கணக்கான வீரர்கள் அங்கும் இங்கும் அலைந்து தடுமாறும் அச்சமயத்தில் அப் பல்லக்கு எங்கே போகிறது என்பது யாருக்குத் தெரியும்? நகருக்குள் பகைவர் புகுந்தால் என்ன செய்வது என்று நடுங்கிக் கொண்டிருந்தார்கள் எல்லோரும். ‘இயன்றவரை எதிர்த்துப் பகைவரைத் தாக்குவோம்’ என்று இறுமாப்புடன் கூறித் திரிந்து கொண்டிருந்தனர் மிடுக்குடைய வீரர். தத்தம் பாதுகாப்புக்காக ஆடவரும் மகளிரும் சிறுவரும் சிறுமியரும் ஆங்காங்கே தக்க இடங்களில் மறைந்து கொள்ள ஓடிக்கொண்டிருந்தார்கள். நகருக்குள் போர் நடக்குமானால் அதனால் என்ன நேருமோ என்று அஞ்சாதவர் யார்? ஆகவே, அந்த மூடுபல்லக்கும், ஏதோ பாதுகாப்பான ஓர் இடத்தைத் தேடியே போயிருக்கலாம் அல்லவா? வீதியில் நிற்கும் பெரிய மாறுதல்களைச் சிறிதும் மதிக்காமல் அப் பல்லக்கு கடுகிக்கொண்டிருந்தது. அரச வீதியைக் கடந்து அவ் வீதியிலிருந்து ஆமிராவதி ஆற்றுக்குப் போகும் சிறு சந்து வழியே அப்பல்லக்குத் திரும்பியது. அப்பல்லக்குக்குள் அமர்ந்திருப்பவரின் கட்டளையை ஏற்று அதன்படி. அப்பல்லக்கைக் கொண்டு சென்றார்கள் வீரர்கள். இரு புறமும் உயர்ந்த மதிள்கள் வளைந்து குறுகிச் செல்லும் வழி! அவ் வழியில் அப்பல்லக்கையன்றி யாரும் போவார் வருவார் கூட இல்லை. போகப் போக, குறுகிச் சென்றது அவ்வழி; யாரும் அவ்வழியில் தனியே போவதற்குக்கூட அஞ்சுவார்கள்! அத்தகைய அரிய வழியில் யாரும் போகும் வழக்கமே இல்லை. அரசன் - அவன் பரிவாரத்தினர் - இவர்கள் நீராடப் போவதற்கென்றே அமைக்கப்பட்ட வழி அது. அவ்வழியில் பிறர் எதற்காகப் போக வேண்டும்? அப்பல்லக்குப் போவதைப் பார்த்துச் சந்தேகிப்பதற்கு அவ்வழியே யாரும் இல்லை; ஜனங்களின் கூக்குரலும் படைகளின் பெருமுழக்கமும் மிகுதியாகவே, அப்பல்லக்கு கடிதாகக் குறுகிய அவ் வழியைக் கடந்து, ஆமிராவதியை அணுகி விட்டது; சட்டென்று பல்லக்கு நீர்த் துறையில் இறக்கப்பட்டது. உடனே பல்லக்கின் கதவுகள் திறக்கப்பட்டன; முதிய கிழவி ஒருத்தி முதலில் வெளி வந்தாள். அடுத்தாற்போல் மேனி முழுவதும் மெல்லிய ஆடையால் போர்த்திக் கொண்ட ஓர் உருவம் வெளிவந்தது. அவ் வுருவத்தின் மேனி லாவகத்தை எவ்விதம் புனைந்து கூற முடியும்? மேலே போர்த்திய மெல்லிய ஆடைக்குள்ளிருந்து பொன்னாபரணங்களும் முத்து மாலைகளும் மின்னலிட்டன. அவ்வுருவத்தின் வட்ட மதி முகத்திலிருந்து, மதர்த்த கரு விழிகள் வேலைப் பழிக்கும் கூர்மையுடன் அங்கும் இங்கும் பாய்ந்தன. அந்நீர்த்துறையிலே தோணி ஒன்று மிதந்து கொண்டிருந்தது. சலசலவென்று ஓலமிட்டு, அத்தோணியை அசைத்துக் கொண்டிருந்தது ஆமிராவதி. அந்தத் துறைக்கு நேராக அக்கறையில் துறை ஒன்று காணப்பட்டது; அதனை அடுத்து அகன்ற சாலையும் தெரிந்தது; பல்லக்கை விட்டு இறங்கிய இருவரும் சட்டென்று நீர்த் துறையில் இறங்கினார்கள். பல்லக்குத் தூக்கிய வீரர், தோணியை அருகில் கொணர்ந்து நிறுத்திக்கொண்டு அக்கரைச் சாலையை ஒரு முறை உற்றுப் பார்த்துப் பின்பு, அவ்விருவரையும் நோக்கினார்கள். “அம்மா, விரைவில் தோணியில் அமருங்கள்; ஏதோ பெருஞ் சப்தம் கேட்கிறது; நீங்கள் முதலில் அக்கரையில் சேர்ந்த பின்பு தான் பல்லக்கை மீண்டும் அங்கே கொணர வேண்டும்! தாமதம் செய்தால் என்ன நேரிடும் என்று சொல்லவே முடியாது...” என்று துரிதப்படுத்தினார்கள் அவர்கள். மறுமொழி சொல்லாமல் அவ்விருவரும் தோணியில் ஏறினார்கள். உடனே தோணியைச் செலுத்திக் கொண்டு அவ்வீரர் அக்கரையை அணுகினார்கள். ஆமிராவதியின் மிகுந்த ஓட்டத்தை ஊடறுத்துப் பிளந்து சென்றது தோணி, ‘சர்’ ரென்று முழக்க மிட்டவாறே கரையில் அலைமோதியெறிய தோணி துறையை அடைந்தது. “இறங்குங்கள்! இறங்குங்கள்! சப்தம் அண்மையில் கேட்கிறது” என்று வீரர் கூவினர்கள், அவர்கள் சொல்லிய அப்போதே இருவரும் தோணியை விட்டு இறங்கினார்கள். தோணி உடனே புறப்பட்டது பல்லக்கு இருக்குமிடம். அடுத்த சில கணத்துக்கெல்லாம் பல்லக்கைத் தோணியில் ஏற்றிக்கொண்டு அவ்வீரர்கள் அக்கரையைத் திரும்ப அடைந்தனர். தோணியை விட்டுப் பல்லக்கைக் கீழிறக்கியதுதான் தாமதம். இருவரும் பல்லக்குக்குள் புகுந்து கதவைத் தாளிட்டுக் கொண்டார்கள். “விரைவில் போகட்டும்! தாமதம் வேண்டம்” என்று பல்லக்குக்குள் இருந்து மென் குரலில் வார்த்தைகள் வெளி வந்தன. அந்தக் குரலின் மென்மைத் தன்மையிலிருந்து - இனிமையிலிருந்து அவ்விதக் கண்ட தொனி, வசீகர அழகுடைய ஓர் இளமங்கையுடையதாகவே இருக்க வேண்டும் - ஆம் - அதில் சந்தேகம் ஏன்? அசாதாரண அழகு வாய்ந்த ஒரு தருணியின் இன்ப மொழியே அது! மெல்லிய ஆடையால் போர்த்திக்கொண்டு ஒரு கிழவியுடன் பல்லக்குக்குள் அமர்ந்திருக்கும் உருவம் - ஒரு தருணமங்கைதான். அம்மங்கையின் குரலே அது என்பதில் சந்தேகமில்லை. மேற்குத்திக்கை நோக்கிப் பல்லக்கைத் தூக்கிக்கொண்டு விரைவாக ஓடத் தலைப்பட்ட வீரர், சிறிது தூரம் சென்றதும், கோட்டை வாயிலுக்கு நேராகச் சாலையில் பெரும் படைகள் சூழ்ந்து நிற்பதைக் கண்டு பிரமிப்புற்றார்கள்; சட்டென்று அவர்கள் நின்றார்கள். ஆமிராவதியின் அணை உடைபட்டிருப்பதையும் தோணிமூலமாகப் படைகள் கோட்டையை அணுகுவதையும், புதிதாக மரங்களால் அணை அமைக்கப்படுவதையும் கண்டு கண் சுழன்றது அவர்களுக்கு. ‘பகைவர் படை’ என்பதை உணர்ந்ததும் பல்லக்கைத் திருப்பினர்கள். “அம்மா, இவ் வழியே போக முடியாது. வேறு எங்கேனும் தப்பி மறைய வேண்டியதுதான்” என்று கூறிக்கொண்டே கீழ்ப்புறமாகச் சாலையில் கடுகினார்கள். கிழக்குத் திக்கிலிருந்தும் தூளி எங்கும் பரவி சாலை மறையும்படி பெரும் படை வந்து கொண்டிருந்தது; ஆம்! பகைவர் படைதான்! மிக வேகமாகத் தேர்களும் குதிரைகளும் முழக்கமிட்டு வந்தன. அதைக் கண்டதும் பல்லக்கு அசைவில்லாமல் நின்று விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் மயங்கினார்கள் அவ் வீரர். என்ன தான் செய்வது? “அம்மா! பகைவர் படை, கீழ்ப்புற மிருந்தும் சூழ்ந்து வருகின்றனவே! என்ன செய்வது? அதோ மேல் புறம் ஆமிராவதி அணைக்கரை உடைபட்டுக் கிடக்கிறது... சாலையிலிருந்து படைகள் பாய்கின்றன” என்று நடுங்கிக் கூறிக்கொண்டே வீரர்கள் கண்கலங்கி நின்றார்கள். பல்லக்கின் சாளரத்து வழியே பார்த்து நிலைமையை அறிந்துகொண்டு, “ஐயோ! இனி என்ன செய்வது? விரைவில் பல்லக்கை இறக்குங்கள். எங்கேனும் மறைந்து நின்று தப்பித்துக் கொள்ளலாம்” என்று அத் தருண மங்கை கூறினாள். பல்லக்கைக் கீழே இறக்கினர்கள். சட்டென்று கதவுகளைத் திறந்துகொண்டு வெளிவந்த இருவரும் படைகள் பக்கத்தில் வந்து விட்டதைக் கண்டு அகல முடியாமல் நினைவிழந்து நின்றார்கள். வீரர்கள் அவ் விருவரையும் சுற்றிக்கொண்டு நின்றனர். அடுத்த கணமே ‘கல்’ என்று முழக்கம் கேட்டது. சாலையில் ஒரே கூட்டம். தேர்களும் குதிரைகளும் மோதித் தள்ளி வந்துகொண்டிருந்தன. வீரர் கூக்குரலிட்டு வெள்ளம்போல் எதிர்த்து வந்தனர். நெடுந் தூரம் வரையில் படைகள் வந்தவண்ணமாக இருந்தன. படை வரும் வேகத்தைக் கண்டு நினைவிழந்த நங்கை சாலையின் ஓரத்தில் தலைகவிழ்ந்து நின்றாள். தன் உருவம் புலப்படாதபடி மேலாடையில் மறைத்துக்கொண்டு நின்றாள் மறைந்து ஓடுவதற்கு வழி புலப்படாமல் தடுமாறினாள். மேல்புறமும் கீழ்ப்புறமும் சூழ்ந்து வந்த படைகள், கோட்டைக்குள் புகுவதற்கு அணையில்லாமல் சாலையிலேயே சூழ்ந்துகொண்டன. இவ்விதம் நேரு மென்று அறிந்து தானே ஆமிராவதி அணையைச் சேர நாட்டு வீரர் உடைத்துவிட்டுச் சென்றார்கள்! சாலை வழியே சென்ற படைகளில் முதலில் சென்ற கூட்டம், ஆமிராவதியின் அருகில் நிற்கும் இவர்களைக் கண்டு சட்டென்று நின்றது. அடுத்த கணமே, தேர்களிலிருந்து வீரர் பலர் குதித்து இவர்களை நோக்கி வந்தனர். வீரர் நால்வரின் நடுவில் நிற்கும் ஒரு தருண மங்கை மீது அவ் வீரர்களின் பார்வை சென்றது. உடனே அவர்களை வளைத் துக்கொண்டார்கள் கூக்குரலுடன். அவர்களா வளைத்துக்கொண்டார்கள்? அவர்கள் தலைவன் கட்டளையல்லவா அது? “யாரடா நீங்கள்? வழிப்போக்கர்களைத் துன்புறுத்துவது தகுமா? போய்விடுங்கள்” என்று அம்முதிய கிழவி நடுங்கும் குரலில் கூறினாள்; அவ்வார்த்தையை வந்த வீரர் மதிப்பார்களா? “இதோ, இவ்வாளுக்கு முன் நில்லுங்கள்; பின்பு சூழ்ந்துக்கொள்ளலாம்” என்று கையில் வாளேந்தி, எதிர்த்தார்கள் பல்லக்குத் தூக்கும் வீரர்கள். வீரர்கள் தயங்கினர்கள்; வாளேந்திய வீரர்களோடு போர் புரியும் படி அவ்வீரர்களுக்கு அவர்கள் தலைவன் கட்டளையிட வில்லையே! அவர்கள் என்ன செய்ய முடியும்? “எங்கள் இளவரசர் கட்டளைப்படி சூழ்ந்து கொள்வது எங்கள் காரியம். உங்களுடன் போர் புரிவதென்றால் - இவ்வளவு நாழிகை நீங்கள் உயிருடன் இருக்க முடியாது; உங்கள் இருதயத்திலிருந்து இரத்த ஆறு பெருக்கெடுத்து ஆமிராவதியில் கலந்திருக்கும், தெரியுமா?” “ஓ! அவ்வளவு திறமையுண்டா? இதோ எங்கள் வாளுக்கு வழி சொல்லுங்கள்” என்று அந்தப் போர் வீரர்களை நால்வரும் வாள் கொண்டு தாக்கினார்கள். “ஐயோ, வேண்டாம்!” என்று கூறிக்கொண்டே தன் மணிக்குரலில் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள் தருண மங்கை. அதே தருணம், ‘டக்டக்’ என்ற முழக்கத் துடன் குதிரை ஒன்று அவ்விடத்தை அடைந்து நின்றது. குதிரையில் இருந்த வீரன் - அவன் யார்? படைகளின் நடுவிலிருருந்து புறப்பட்டு வந்த குதிரை வீரன்தான். சோழநாட்டு வீரர்கள், ‘எங்கள் இளவரசர்’ என்ற குறிப்பிட்டது அவ் வீரனைத்தான்; ஆம்! - அவ்வீரன் - சோழநாட்டு இளவரசன் என்பது உன்மை தான்! “வேண்டாம்; வாளை உறையில் செருகுங்கள்! உங்களை இப்படிப் போர்ப் புரியும்படிச் சொன்னேனா? துஷ்டர்களே, விலகிப்போங்கள் -” என்று கூறிக்கொண்டே அரசிளங்குமரன், தருண மங்கையின் அழகைக் கண்டான். அரசிளங் குமரனின் வார்த்தையில் எவ்வளவு காம்பீர்யம்! அவ்வார்த்தையைக் கேட்டுப் பயம் நீங்கினாள் தருணி. அவ்வீரன் தனக்கு எதுவும் தீங்கு செய்யான் என்று அவள் பேதை மனம் கனவு கண்டு துள்ளியது; சட்டென்று நீர் வார்த்த கருவிழிகளால் அவ்வுத்தம வீரனை நோக்கினாள். அவள் விழியம்பு அவன் இருதயத்தில் பாய்ந்து அவனை நிலை கலக்கியது. உண்மை அது தானே! “ஐயா, மிகவும் நன்றி! நாங்கள் தொண்டி நகருக்கு யாத்திரை போகிறோம்; இவர்கள் காரணமில்லாமலே தடைசெய்து துன்புறுத்துகிறார்கள்” என்றாள் அம் முதிய கிழவி. “பாட்டி, ஏன் வருந்துகிறாய்? இந்தப் பெண்ணும் தொண்டி நகர் போகிருளா?... தனிடே போகக் காரணம்?” “எங்கள் ஊர் தொண்டிநகர்தான்; இந்நகருக்கு வந்தோம்; யுத்தம் நேர்ந்து விட்டது; ஆகவே திரும்பிப் போகிறோம்; என் பெண் இவள்; என்னுடன் இருக்கிறாள். எங்களைத் தடையில்லாமல் போக விடுங்கள்; மிகுந்த, புண் ணியம் உண்டு!” நல்லடிக்கோனின் பார்வை தருண மங்கையின் மேனியில் பதிந்திருந்தது. கிழவியின் மொழியைக் கேட்டு நகை செய்தான். “பாட்டி, உன் பேச்சு நன்றாயிருக்கிறதே! உன் பெண்ணா இவள்? கிடைத்தற்கரிய நித்திலம் போன்ற இவளை உன் பெண் என்று கூற உனக்கு எவ்வளவு தைரியம்? இவள் ஓர் அற்பமான பெண்ணல்ல - நிச்சயம் உன் பெண் அல்ல இவள்! இவள் அங்கங்களும் மேனி லாகவமும் - இவளிடம் தோன்றும் ஒளியும் என்னைச் சாலையில் வரும்போதே வசீகரித்து விட்டன. இவள் சௌந்தர்யக் கடலில் தோன்றிய மோஹினி, இல்லையேல் போர்முழக்கம் செய்து செல்லும் என்னைத் தன்னிடம் வசீகரிப்பானேன்? பாட்டி உண்மையைச் சொல்! வெய் யோன் ஒளி தன் மேனியின் சோதியில் மறைந்து போகும் படி நிற்கும் இவள் யார்?” என்று அரசிளங்குமரன் சோழன் செங்கணான் மகனாகிய நல்லடிக்கோன் மென் மெலப் பேசிக்கொண்டே அவ்விருவரையும் அணுகினான். பெருங் கூட்டம் கூடிவிட்டது அவ்விடத்தில். அரசிளங் குமரனின் பேச்சால் திடுக்கிட்டாள் இள மங்கை. அவனுடைய இளமையின் வளமையையும், வசீகரப் பேச்சையும் கேட்டு எண்ணம் மாறியது அவளுக்கு. மேலே போர்த்திய துகில் நழுவியது; சிறிதே ஆமிராவதிப் புறமாக நோக்கினாள் மனம் கலங்கி. தன் அழகுருவை ஆமிராவதியின் நீரசைவிலே கண்டு நாணினாள். தனக்குள்ள பேரழகே இவ்வாறு பிறரைத் தன்வசம் வசீகரிக்கிறது என்பதை உணர்ந்தாள். சில்லென்ற காற்றின் வேகத்தால் தன்ளாடினாள் ஒசிந்து விழும் பூங்கொடிபோல். தன் நிலை இவ்வாறு ஆகிவிட்டதே என்ற துயரமும் அரசிளங் குமரனின் எல்லை மீறிய பேச்சும் அவளைக் கோபமூட்டின. இதழ் துடிக்க வார்த்தைகள் அம்புகள்போல் எழுந்தன. “ஐயா, நாங்கள் யாராயிருந்தால் என்ன? எங்களைப் பற்றிக் கேட்பதற்கு தாங்கள் யார்? வீண் பேச்சுக்கள் பேசுவது, தங்கள் போன்ற உத்தம வீரர்க்கு அழகல்லவே! எங்களை வளைத்துக்கொண்டு துன்புறுத்திய இவ்வீரர்களைத் தண்டிப்பதற்கு வந்தவரா தாங்கள்? தங்களிடம் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள இருந்த எனக்கு - தங்கள் பேச்சு மிகவும் வருத்தத்தை உண்டாக்கிவிட்டது. வழிப் போவோராகிய எங்களை...” என்று கிளி கொஞ்சும் மொழியில் தடுமாற்றத் தோடு பேசினாள் அத்தருணி. நல்லடிக்கோன் முன்னிலும் துணிவும், மயக்கமும்: கொண்டான் அவள் பேச்சால்: அவள் குரல் அவனைப் புள காங்கிதம் அடையச் செய்தது. “நங்காய்! உன் பேச்சு நான் எதிர்பார்த்ததைவிட மிகுந்த வசீகரமுடையதாகவே இருக்கிறது. உன்னை யார் என்று அறிந்துகொள்ள மிகவும் ஆதுரம் கொண்டிருக்கிறது என் உள்ளம். இந்தக் கிழவியுடன் நீ எங்கே போகிறாய்? - இந்தப் பல்லக்கில் அமர்ந்து நெடுந் தூரத்திற்கு அப்பால் இருக்கும் தொண்டி நகர்க்குப் போவது உண்மையா? உண்மையைச் சொல்” என்றான் நல்லடிக்கோன். பெண்கள் பால் உள்ளம் நெகிழாத அவன் இன்று ஒரு தருண மங்கையின் மீது மோகம் கொண்டு நிற்பதைக் கண்டு படை வீரர்களும் மற்றையோரும் சூழ்ந்து நின்று மேல் நடப்பதைக் காண ஆவல் கொண்டனர். அவன் அரசிளங் குமரன் அல்லவா? இளமங்கையின் முகத்தில் கோபத்தின் செம்மை பரவியது. அவ்வளவு பெரிய கூட்டத்தில் தன்னுடைய நிலைமையைப் பரிசோதிக்கும் இளைஞனைக் கண்டு சீறுபவள் போல் நின்றாள். பெண் நாகத்தின் சீற்றத்திற்கு முன் யார் எதிர் நிற்க முடியும்? கோபத்தால் உடல் நடுங்கியது அவளுக்கு. இதழ்கள் தீயுறுசெந்தளிர் போல் துடித்தன. கண்கள் நீர்த்துளியோடு, பனி சிதறிய நீலமலர் போல் படபடப்புற்றன. இருதயம் வெடித்துவிடும்போல் பெருமூச்சு விட்டாள். “என்னைப்பற்றி உங்களிடம் கூறுவது எதற்காக? இவ்வளவு துணிவுடன் என்னைக் கேட்பதற்கு நீங்கள் யார்?” கோபத்திற்கு அஞ்சினாலும் அந்தக் கோபாவேசத் திலும் தோன்றும் அவள் மேனி அழகை அதுபவிக்க முற்பட்டான் அவன். “நான் உன்னைக் கேட்க வேண்டியதுதான். நீயும் சொல்லியாக வேண்டியதுதான். இந்தச் சேர நாடு முழுவதும் இப்போது என்னுடையது. நான் சோழ நாட்டின் அதிபதியாகிய செங்கணான் மகன், நல்லடிக்கோன். சேரனைச் சிறைப்படுத்திய பின் கருவூரை வசமாக்க வந்திருக்கிறேன். இதோ பார், சாலையின் கிழக்கிலும் மேற்கிலும் இடமில்லாமல் நிற்கும் என் படைகளை! போதுமா? இன்னும் சொல்ல வேண்டுமா?” என்று கூறிவிட்டு வெடி நகை செய்தான் நல்லடிக்கோன். “ஓ! கோடாச் செங்கோல் சோழர் குலத்து உதித்த இளவரசோ தாங்கள்! அதனால்தான் இவ்வளவு பேச்சுப் பேசுகிறீர்கள்; தாங்கள் யாராயிருந்தால் என்ன?... தாங்கள் வந்த காரியத்தைக் கவனியாமல், வழிப் போகும் எங்களை இப்படி வழி மறிப்பது ஏன்?” - இள மங்கையின் பேச்சில் முன்னிலும் மிகுதியாக வேகம் தெரிந்தது. “முடியாது; நீ யார் என்பதைச் சொல்வதில் உனக்கு ஏன் இவ்வளவு கோபம்? என் காரியத்தை அதோ பார்? படைகள் கோட்டைக்குள் புகுந்துகொண்டுதான் இருக் கின்றன! உன் கண்களும் செவிகளும் நன்றாக அறிய வில்லையா? உன்னைப்பற்றித் தெரிந்து கொள்ள என்னால் முடியாது என்று நினைக்கிறாயா? - ஆனால் - பெண்களுக்குள் உன்னைப்போன்ற அழகுடையவர்களையும் நான் பார்த்ததில்லை - பேச்சுத் திறமையுடையவர்களும் உன்னைப்போல் காணக் கிடைக்காது. உன்னுடைய பேச்சின் சாதுரியம் யாரைத்தான் வசீகரிக்காது!-” “இளவரசே, தங்களைப் பார்க்கையில் மேலான குணம் உடையவராகத் தோன்றியது. ஆனால், பேச்சிலிருந்து அபலைகளான உத்தமப் பெண்களிடம்கூட உங்களுக்குக் கருணை இல்லை என்றே தெரிகிறது. முடிந்தால் தாங்கள் என்னை அறிந்துகொள்ளுங்கள்; நான் தங்களைப்போன்ற ஓர் உத்தம வீரனின் உரிமை. இனி, தாங்கள்...” என்று நடுங்கும் குரலில் சொன்னாள். “இல்லை, நான் நம்பவில்லை! அடே இம்மங்கையை இப்பல்லக்கிலேயே வைத்துத் தக்க காவலுடன், உறையூரில் என் மாளிகையில் சிறை செய்யுங்கள்; நான் வரும் வரையில் காவல் சிறிதும் தவறக்கூடாது. புறப்படுங்கள் விரைவில்” என்று கட்டளையிட்டு அம்மங்கையை ஏறெடுத்துப் பார்த்தான். அம்மங்கை நடுங்கினாள் நினைவு சுழன்றது அவளுக்கு. பல்லக்குத் தூக்கும் வீரர்கள் மனம் பதறி ஒன்றும் செய்ய முடியாமல் நின்றனர். கிழவி கண்ணீர் அரும்ப அச்சத்தோடு பார்த்தாள். “இது என்ன கட்டளை? அநீதியல்லவா இது? ஐய! யோசித்துச் செய்யுங்கள்; நான் ஒரு நாடகக் கவிகை! நாட்டியம் ஆடுபவள்!...” என்று அமைதியாகக் கூறினாள் அம்மங்கை. நல்லடிக்கோன் செவியில் ஒன்றும் படவில்லை; நகை செய்தான்: “விரைவில் புறப்படுங்கள்; பெண்ணே, இனி உன் விருப்பம்! இந்தப் பல்லக்கில் அமர்ந்து கொள்ளலாம் நான் விரைவில் உன்னைச் சந்திக்கிறேன். உன்னைத் தனியே போகவிட எனக்கு விருப்பம் இல்லை.” அம்மங்கை கோபாவேசம் கொண்டாள்; அதற்கு மேல் என்ன செய்வது? - என்ன சொல்வது? பெண்ணல்லவா அவள்? ஒரு முடிவுக்கு வந்தாள். “அப்படியா? இதோ இப்பல்லக்கில் அமர்ந்து விட்டேன். என்னைக் காத்துக்கொள்ள எனக்கு முழு வன்மை உண்டு. தெய்வம் துணை நிற்கும். இப்போது சொல்கிறேன். நான் தான் மருதி என்னும் நாடகக் கணிகை!” என்று கூறி, அம்முதிய மங்கையுடன் அப் பல்லக்குக்குள் புகுந்து அமர்ந்து கொண்டாள். “ஆ! நீ மருதியா? நாட்டியக் கலாதிலகமா நீ! உன் சாதுர்யப் பேச்சே என்னை மயக்கி விட்டதே! மருதி! உன்னை இன்று தான் கண்டேன்! இனி உன்னை நான் விடுபவனா? - அடே ஏன் தாமதம்?” பல்லக்குப் புறப்பட்டது. கோபத்தோடு கதவுகளைத் தடாலென்று மூடினாள் மருதி. மிக வேகமாக இருபது வீரர்கள் சூழ, பல்லக்கு உறையூர் நோக்கிச் சென்றது. ஆனால் பல்லக்கிலிருந்து, அழுகையின் விம்மும் சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. சிறிது நாழிகை வரையில் பிரமை பிடித்தவனாய் நடந்தவாறே படைகளின் நடுவே புகுந்தான் நல்லடிக்கோன். |