உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(வ. வேணுகோபாலன் அவர்களின் ‘மருதியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) 7. இது வீரமா? என்ன அதிசயம் இது! சூரியனின் அஸ்தமனம் ஒரு புறம்! சேரநாட்டு ஆட்சியின் வீழ்ச்சி ஒருபுறம்! நிற்க நிலையற்று மேலைக் கடலில் விழுந்து மாய்ந்தானே என்று சொல்லும்படி இருந்தது சூரியனின் அஸ்தமனம்; அதே தருணம், சேர ராஜ கிருகமான, கருவூர் நகரின் அரண்மனை உச்சியிலிருந்து வில்லெழுதிய கொடி துண்டிக்கப்பட்டு, அடியற்ற மரம்போல் கீழே சாய்ந்தது. இது பெரிய உற்பாதம் அல்லவா? எள் விழ இடமின்றி சோழநாட்டு வீரர், சேரனின் அரண்மனையைச் சுற்றி நின்று கோபுரத்து உச்சியிலிருந்து விழும் வில்லெழுதிய கொடியைப் பார்த்துக் கோஷம் செய்தார்கள்; சேர ராஜ ஸ்தானத்தின் வீரத்துக்கும் புகழுக்கும் எடுத்துக் காட்டாக வானை அளாவ அசைந்து நிற்கும் வில்லின் கொடி வீழ்த்தப்படுவதைக் கண்டு, சேர நாட்டு மறவர்களின் நெஞ்சம் கொதித்தது! - இருதயம் பதை பதைத்தது! சோழ வீரரை எதிர்க்க வகையில்லாமல் மனம் இடிந்து நின்றார்கள் - தலை குனிந்து நின்றார்கள் - தோள் குழைய நின்றார்கள். இவ்விதத் துணிவுடன் சேர வேந்தனின் கொடியைத் துண்டித்தவன் யார்? என்ன துணிவு அவனுக்கு! இத்தகைய கொடுஞ் செயலை வேறு யார் செய்ய முடியும்? சோழன் செங்கணானின் மகன் நல்லடிக்கோன் துணிவுடன் செய்த செயல்தான் அது; போர்ப் புறத்துப் போரில் வெற்றி மாலை சூடி - வஞ்சிமா நகரெனப் புகழ் பெற்ற கருவூருக்குள், சோழ நாட்டுப் பெரும் படையுடன் புகுந்து அஞ்சா நெஞ்சத்துடன் அகநகரையும் புற நகரையும் அடக்கிக் கைக்கொண்ட அரசிளங்குமரன் நல்லடிக்கோனையின்றி, வேறு யார் இதைச் செய்ய முடியும்? ஒரு பகலுக்குள், கருவூர் முழுவதையும் அடக்கிக் காவல் கொண்டான் நல்லடிக்கோன். வில்லெழுதிய கொடியை வீழ்த்திய மறுகணமே தனக்குரிய புலிக் கொடியை நிலைநாட்டினன். அதைக் கண்டு சோழவீரர் எல்லையற்ற குதூகலத்தோடு ஆரவாரித்தனர். அரண்மனையின் வெளிமுற்றத்தில் பெருங் கூட்டத்துக்கு நடுவே நல்லடிக்கோன் நின்றான். அவனை அணுகிச் சூழ்ந்து சோழ நாட்டுப் படைத்தலைவர் பலரும் பிரதான சேனாபதி வேங்கை மார்பனும் நின்றார்கள். அச்சமயம் கூட்டத்துக்குள் புகுந்து ஒரு வீரன் நல்லடிக்கோனிடம் அணுகி வணங்கி நின்றான். “வேந்தர், கோட்டைக்கு வெளியே, குணவாயில் கோட்டத்தில் தங்கியிருக்கிறார்; தங்கள் வருகையை எதிர்பார்க்கிறார்” என்றான் அவன். நல்லடிக்கோன் சட்டென்று அந்தப் பெருங் கூட்டத்தை விட்டுப் புறப்பட்டான். உடனிருந்தவர்களை யெல்லாம் கையமர்த்தி நிறுத்திவிட்டுத் தன் சேனாபதி, வேங்கை மார்பனை அழைத்துக் கொண்டு அரண்மனையை விட்டு வெளியேறினான். சோழ வீரர்கள் அங்கங்கே காவல் காத்து நின்றார்கள். சோழர் கைப்பட்ட, அந்நகரம் பொலிவழிந்து தோன்றியது. எங்கும், மின் மினியென விளக்குகள் விளங்கின. வான வீதியில் முழுமதி உலாப் புறப்பட்டது. வீதிகள் எங்கும் சோழரின் படைகள் கூட்டம் கூட்டமாக இயங்கிய வண்ணம் இருந்தன. இந்தக் காட்சிகளைக் கண்டவாறே நல்லடிக்கோனும், வேங்கை மார்பனும் ஒவ்வொரு வீதியாகக் கடந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் ஆரோகணித்துச் செல்லும் குதிரைகள் மந்த கதியாகவே தாவிச் சென்றன. அகன்ற வீதியிலே பயமின்றி, தனித்துச் சென்றார்கள் இருவரும். கோட்டையின் மதிலை அணுகி விட்டார்கள்; சட்டென்று குதிரைகள் நின்றன; நல்லடிக்கோன், சுற்று முற்றும் பார்த்துக்கொண்டே வேங்கை மார்பனிடம் மெள்ளக் கூறலானான். “சேனாபதி! காரியங்கள் யாவும் முடிந்து விட்டன; தந்தை, எனக்கு என்ன கட்டளை இடப்போகிறாரோ என்று கவலையாக இருக்கிறது. என் மனம் உறையூரில் நிலையாகப் பதித்துவிட்டது. இங்கே தங்குவதற்குச் சிறிதும் மனம் விரும்பவில்லை...” “இதற்கு ஏன் கவலை? தங்கள் விருப்பத்தை வேந்தர் மாற்ற மாட்டார் என்றே கருதுகிறேன்: எனக்குக்கூட ஆச்சரியமாக இருக்கிறது தங்கள் மனமாற்றம்!” “நான் என்ன செய்வேன்? அவளை அற்பமானவள் என்று எண்ணாதே! அழகால் மட்டுமல்ல! நாட்டியத்தில் யாவரையும் திகைக்க வைக்கும் திறமையுடையவள் என்று நம் அரண்மனை நாட்டியக்கலை நிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்நகரில் நடக்கும் விழாக் காலங்களில் அவள் அத்தியுடன் நாட்டியமாடுபவளாம். நம் நகரத்துப் பங்குனி உத்தர விழாவிற்கு அவளை அழைக்க வேண்டு மென்று நம் அரண்மனையில் எல்லோருக்கும் ஆதுரம்! தருணம் வாய்த்தது தெய்வச் செயலாக. ஆனால், அவள் அழகும் என்னைத் திகைக்க வைத்து விட்டது! எவ்வித மாயினும் நான் அவளை இன்றே சந்தித்து விட வேண்டும்! தந்தையிடம் சொன்னால், என்ன நேருமோ?...” “தாங்கள் தந்தையைக் கண்ட பின்பே எதையும் உறுதியாக-” என்று மேற்கொண்டு கூறாமல் நின்றான் வேங்கை மார்பன். “ஆம்! - அவளைச் சிறைசெய்தது அவ்வளவு நேர்மையல்ல என்றுதான் தோன்றுகிறது. ஆனால் இனி உண்மையைச் சொல்லாமல் இருப்பதும் நேர்மையன்று.” “அவள் ஒரு கணிகைதானே! - தந்தை அதற்குக் கோபம் கொள்வாரா? அல்லாமல், அவள் நம் அரண்மனைக்கு - நம் ராஜ சபைக்கு நாட்டிய விருந்து அளிக்க வல்லவள்! அதனால் தந்தைக்கு இதில் கோபம் ஏற்படாதென்று எண்ணுகிறேன். உனக்கு எப்படித் தோன்றுகிறது?” “நான் என்ன சொல்வது? அவள் கணிகை என்றாலும் ஒருவனுக்கு உரிமையானவள் அல்லவா? - அவளே சொல்லவில்லையா அப்போது? அதனால் தாங்கள் பலாத்காரம் செய்து சிறைப்பிடித்தது...” “வேங்கை மார்ப, போதும்! உன்னை யோசனை கேட்டதற்கு எனக்குப் புத்தி கூற வந்துவிட்டாயோ! அரச குலத்தில் பிறந்த எனக்கு எந்தக் கணிகையையும் பலாத்காரம் செய்து சிறை செய்ய நியாயம் உண்டு; அவள் கணிகை! - உனக்குத் தெரியாதா, வத்ஸ் ராஜனான உதயணன் நருமதை என்ற கணிகையைப் பலாத்காரம் செய்து அழைத்துச் சென்றது?” என்று சிறிது கோபத்தோடு கூறிவிட்டு, குதிரையைத் தட்டிவிட்டான். சேனாபதியும் மறுமொழி கூற முடியாமல் அவனைப் பின் தொடர்ந்தான். மதிளைக் கடந்து, அயலில் உள்ளதாகிய குணவாயிற் கோட்டத்தை, இருவரும் அணுகினார்கள். ஜைன முனிவர்கள், தங்குவதற்கென்று அமைக்கப் பட்டதாகிய ‘குணவாயில் கோட்டத்’தில் சோழன் செங்கணான், தன் சிறு படையுடன் சூழ அமர்ந்திருந்தான். அவனுக்குச் சிறிது அணிமையிலே இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பெற்ற தோள்களோடு தலை குனிந்து நின்றது ஓர் உருவம். நெற்றி மீது இரு புருவமும் ஏறி வளைந்து நிற்க, நிலத்தில் பாய்ந்து நிலைத்த பார்வையோடு முகம் கருகி நின்றது அவ்வடிவம். ஆம்! - அவ்வுருவம் சேரநாட்டு முடி மன்னனாக விளங்கிய கணைக்காலிரும் பொறைதான். செங்கணானால் அவன் சிறைப்பட்டு நின்ற காட்சி - விலங்கு பூண்டு நின்ற அவன் தோள்கள் நன்கு தெரிந்தன; காட்டில் மதம் கொண்டு கர்ச்சித்துத் திரிந்த யானையைத் துரத்திப் பிடித்துச் சங்கிலிகளால் பிணைத்துக் கொணர்ந்து நிறுத்தியது போல் இருந்தது அக்காட்சி. சோழன் செங்கணானுக்கு முன்பு - சோழவீரர்கள் சூழ்ந்து நின்று காவல் செய்ய நடுவிலே பெருந்தூண் ஒன்றுபோல் சேரவேந்தன் நின்றான். அவன் உடல் அங்கு நின்றதேயன்றி அவன் உயிர் எங்கோ ஓடி ஒளிய முற்பட்டது என்றுதான் தோன்றியது. தன் முகத்தைப் பிறர் சிறிதும் காண முடியாத வகையில் அவன் நின்றான். மத்தயானை போன்ற அவன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது; சிலையில் செதுக்கிய சோக உருவமோ என்று சொல்லும்படி உணர்ச்சியற்று நின்றான் அவன். அவன் அடைந்த கதியை என்னென்பது? தான், முடி மன்னனாக ஆட்சி செலுத்திய நாட்டிலேயே அவன்பிறநாட்டு அரசனால் சிறைப்பட்டு விலங்கு பூண்டு நிற்பதென்றால், அதைவிட அவமானம் வேறு என்ன இருக்கிறது? சேரனை அவன் நாட்டிலேயே அவ்விதம் மானமிழக்கச் செய்வதென்றே சோழனும் யோசித்துச் செய்தானா? ஆம் - உண்மை அதுதான். தனக்குத் தீவிரப் பகைவனாகிய சேரனை அவன் நாட்டில் - அவன் குடிமக்களுக்கு முன்பு - சிறைப்படுத்தி நிறுத்த வேண்டும் என்பதே அவன் முடிவு. அம்முடிவு நிறைவேறி விட்டதிலே, சோழனுக்கு உண்டான மகிழ்ச்சிக்கு எல்லை உண்டா? அவ்விதம் சிறைப்பிடித்தவாறே சேரனே, அவன் குடி மக்களும், வீரரும் காணும்படி நகருக்குள் வீதி வலம் செய்யவேண்டும் என்று கூட எண்ணினன். ஆனால் அவன் நுண்ணறிவுக்கு அது தகாதென்று தோன்றியது; நகருக்குள், சேரனைச் சின்றப்பிடித்தபடியே அழைத்துச் சென்றால் பெருங் கலகம் மூண்டுவிடலாம். உண்மையில் ராஜபக்தி உள்ள வீரர்கள் கோபாவேசத்தால் தனக்கு எவ்வகையிலேனும் தீங்கை உண்டு பண்ணலாம்; இக் காரியத்தைத் துணிந்து செய்வது அவ்வளவு நல்லதல்ல என்று முடிவு செய்த பின்னரே மதிளுக்கு வெளியே உள்ள குணவாயில் கோட்டத்தில் தங்கினான். அக்குணவாயில் கோட்டமே சேரனுக்கு உரிய சிறைக்கோட்டமாகவும் அவன் கருதினான். சிறைக்கோட்டத்திற்கு தகுதியான இடம் அதைக்காட்டிலும் வேறு இல்லை என்பதே அவன் உள்கருத்து. ஜைன முனிவர்கள் தியானம் செய்வதற்கென்றே அமைத்த அக்கோட்டம் சேரவேந்தனின் சிறைக்கோட்டமாக மாறியது. நகரிலிருந்து வெளியே போவோருக்கும், நகருக்குள் புகுவோருக்கும், ஆமிராவதி நதிக்கரை வழியே இயங்குவோருக்கும் கட்புலனாக நடு நிலை விளக்கமாக விளங்கும் குணவாயில் கோட்டத்தில் சேர வேந்தன் சிறைப்பட்டு விலங்கு பூண்டு நிற்பது என்றால் அதைக் காணுபவரின் மனம் என்ன பாடுபடும்! நல்லடிக்கோனும், வேங்கை மார்பனும் சிறிது தூரத்திலேயே இக் காட்சியைக் கண்டு திகைப்புற்றனர். குதிரைகளை அகலவே நிறுத்திவிட்டு செங்கணானுக்கு முன்னர் நடந்து வந்தார்கள். தன் மகனின் வருகையைக் கண்டு செங்கணான் உள்ளம் குது குதுப்புற்றான். நல்லடிக்கோனிடம் அவனுக்குள்ள அன்பும் மதிப்பும் அளவிட முடியாதவை; மகன் என்று மட்டும் அல்ல! தன்னுடைய உயர் குணங்களாலும் கம்பீர வீரச் செயலாலும், பலவிதக் கலைப் பயிற்சியாலும் தந்தையின் உள்ளத்தை அவன் கவர்ந்து விட்டான். ஏன்? அவனிடம் பழகிய யாவரையுமே அவன் பலவகையிலும் வசீகரித் திருந்தான். ஆகவே இப் போரிலும் வெற்றி மாலை சூடிய, அரசிளங் குமரன் நல்லடிக்கோனிடம் அவனுக்கு முன்னிலும் மும் மடங்கு மதிப்பு மேலிட்டதில் ஆச்சரியம் என்ன! நல்லடிக்கோன், செங்கணானைக் கை குவித்து வணங்கினான். அவனுக்குப் பின்னர் தலை வணங்கினவனாய்ச் சேனாதிபதி நின்றான். அதுவரை ஆதுரத்தோடு கண்களால் பேசிய செங்கணான் நல்லடிக்கோனைத் தன் இரு கைகளாலும் தழுவி அருகில் அமர்த்திக் கொண்டான். “குமர! வெற்றி வீரன் நீ உண்மையில் எம் பெருமான் கைலை நாதனின் திருக்குமரனின் அம்சமோ என்று எண்ணுகிறேன். அழகாலும், வீரத்தாலும், குணத்தாலும் முருகவேள் என்றே உன்னைக் கருதுகிறேன். போரில் நீ திறமை காட்டியதோடு, இந் நகருக்குள் இவ்வளவு விரைவில் புகுந்து செய்த துணிவுள்ள காரியங்களை நான் கேட்டு, குதூகலம் அடைந்தேன். பகைவரை வசீகரிக்கும் ஆற்றலும் உன்பால் அமைந்துள்ளது. எல்லையற்ற ஊக்கத்தோடு யுத்தத்தை முடித்தாகிவிட்டது. இனி, நீ களைப்பாற வேண்டாமா?...” என்று மென் மொழிகளைக் கூறினான். “தந்தையே, எனக்குச் சிறிதும் ஊக்கக் குறைவே இல்லை. களைப்பாற வேண்டியதுமில்லை. தங்கள் அருளால் எல்லாம் பூர்த்தியாகிவிட்டது. அகநகரில் வில்லெழுதிய கொடி அசைந்த இடத்தில் நம் புலிக்கொடி விளங்கிக் கொண்டிருக்கிறது! இனி எதுவும் கவலைக்கு இடமில்லை; நம் நிலைப்படைகள் அங்கங்கே காவல் செய்கின்றன; தாங்கள்...” என்று நல்லடிக்கோன் சாதுரியமாகப் பேசினான். “இல்லை - இப்போது நான் நகருக்குள் புகுவது அவசியமன்று, நம் பகைவனுக்கு ஏற்ற சிறைக்கோட்டம் இதுவே தான்; நான் முன்பு கருதியபடி இவனை இவன் நாட்டினருக்கு முன்னரே - இவ்விடமே சிறைப்படுத்தி இருக்கச் செய்வது என்று உறுதி செய்துவிட்டேன். நிமித்திகரையும் கேட்டேன். நாளை உதயத்தில்தான் நான் நகருக்குள் புகுவதற்கு ஏற்ற தருணம் என்றார். ஆகவே அவ்விதமே யாவும் நடக்கவேண்டும். உனக்கு இப்போது ஒரு கட்டளையிடுகிறேன். அதன்படியே நடப்பது உன் கடமை...” என்று கூறிவிட்டு மற்ற வீரர்களைக் குறிப்பாக நோக்கினான். அப்போதே அவன் கட்டளைப்படி கணைக்காலிரும் பொறை விலங்கிடப்பட்டவாறே குணவாயிற் கோட்டத்து உட்புறம் கொண்டு போகப்பட்டான். அவன் இரு தோள்களிலும் பிணைக்கப் பட்ட சங்கிலிகள் இருபுறத்துப் பெருந்தூண்களிலும் கட்டப்பட்டன. குனிந்த தலை நிமிராமல் நின்றான் சேரன். வாயிற் கதவுகள் தாளிடப்பட்டு வீரர்கள் காவல் செய்தார்கள். வேட்டையாடிப் பிடித்துவரப்பட்ட சிங்கம், இரும்புக் கூண்டில் அடைபட்டதுபோல் இருந்தது அக்காட்சி. ஏன்? - சிங்கம் தான் சுதந்தரமாகத் திரிந்த தன் காட்டிலேயே - தன் குகையிலேயே அடைத்து வைக்கப்பட்டது போலத்தான் ஆயிற்று சேரவேந்தனின் நிலையும்! அதைக் கண்ட பின்னர், “தந்தையே தங்கள் விருப்பம்போல்” என்றான் நல்லடிக்கோன். “போர் முடிந்துவிட்டாலும், ஓடி மறைந்த சேனாதிபதிகளில் நன்னனும், ஆட்டனத்தியும் மீண்டும் ஏதேனும் உபாயம் செய்யலாம். ஆனால் அவர்களைப் பின் தொடர்ந்து போர் புரிவதும் நமக்கு முடியாது. அவர்களை மறக்கவும் முடியாது. எனவே, நீ விரைவில் உறையூரை அடைந்துவிடு; ‘தலைவன் இல்லாத சிறிய ஊரும் நிலை கலங்கும்’ என்பது மறக்க முடியாத உண்மை. பகைவர் பலவித உபாயம் செய்து தீங்கு உண்டாக்கலாம்; ஆனால், இனி இந்தச் சேரனின் தொல்லை இல்லை!-” என்று கூறுகையில் இடைமறித்து நல்லடிக்கோன் ஏதோ கூறத் தலைப்பட்டான். “ஆட்டனத்தி...” என்று சொல்லிவிட்டு அப்புறம் பேசவில்லை. “ஏன், அத்தியைப்பற்றி என்ன? அவன் வெறும் நர்த்தனப் பிரியன் - கூத்தாடுபவன் என்று எண்ணாதே! போரில் புலி அவன்; உபாயத்தில் நரி போன்றவன். மறைவதில் மாயமானுக்கு ஒப்பானவன். பகைவரைக் கூட, தன் நர்த்தனக் கலையால் வசீகரித்து விடுவான்! அவனை அற்பமானவன் என்று எண்ணாதே! நன்னனும் அப்படியே! இன்னும் ஒன்று; இவ்வருஷத்தில் நம் நகரில் நடக்கும் பங்குனி உத்திர விழாவை இந்நகரிலும், இந் நகரில் நடக்கும் உள்ளி விழாவை உறையூரிலும் நடத்த வேண்டுமென்பது என் விருப்பம்.” “அது எப்படி? நம் நாட்டு விழாவை இங்கு நடத்துவதா?” “குமர! உனக்கு விளங்கவில்லையா? நம் வெற்றிக்குச் சின்னமாக, நம் நாட்டு விழாவை, நாம் கைப்பற்றிய இந் நாட்டில் செய்கிறோம். இந் நாட்டினருக்கு உரிய உள்ளி விழாவை நம் நாட்டில் கொண்டாடச் செய்வதும் நமக்குப் பெருமை தானே! இதனால் மற்றும் ஓர் உண்மையை உனக்குச் சொல்லுகிறேன் கேள், இந்நாட்டு வீரர்களான கொங்கர்களில் ஒரு பகுதியாரை உறையூரிலும், நம் வீரர்களில் பலரை இங்கும் இருக்கச் செய்து தான் விழாவைக் கொண்டாட வேண்டும். இதனால் நம் பகைவன் நாட்டில் நமக்குச் சிறிதும் கலகம் உண்டாகாது. நமக்கு வன்மையும் பெருமையும்...” “ஆம், உண்மை தெரிந்தது. தங்கள் விருப்பம் போல் செய்கிறேன்.” “சிறிது காலம் நான் இந் நாட்டிலே இருக்க எண்ணுகிறேன். உன் ஆட்சி உறையூரில் நிலைத்திருக்கட்டும். இன்றிரவே நீ கொங்கு நாட்டு வீரர்களின் பெரும் பகுதியோடு உறையூர் புறப்படவேண்டும்,-” என்று நல்லடிக்கோனின் தோள்களைத் தடவினான். அடுத்த கணமே வேங்கை மார்பனை நோக்கி, “சேனாபதி, இன்றிரவே, இந்நகரிலுள்ள கொங்க வீரர்களை ஒன்று சேர்த்து, உறையூருக்குக் கொண்டு சென்று காவல் செய்வது உன் கடமை. முன்னதாக, நல்லடிக்கோன் புறப்படுகிறான். விரைவில் ஆயத்தமாகப் புறப்படு” என்று கட்டளையிட்டான். “தங்கள் கட்டளை” என்ற வண்ணம் வேங்கை மார்பன் கொங்கர்களே ஒன்று சேர்த்து வரப் புறப்பட்டுச் சென்றான். அவன் சென்ற சிறிது நாழிகை வரையில் நல்லடிக்கோன் மௌனமாக இருந்தான். தன் உள்ளத்தில் அலைமோதிக் கொண்டிருந்த உண்மையை வெளிப்படுத்தச் சமயம் எதிர்பார்த்தான். தன் மகன் ஏதோ கூற முற்படுவதை அவன் முகக் குறிப்பால் அறிந்து கொண்டான் செங்கணான். “மைந்த! என்ன யோசனை செய்கிறாய்? என்ன விசேஷம்?” என்றான் சிறிது வியப்புடன். நல்லடிக்கோனுக்குத் துணிவு உண்டாயிற்று. செங்கணானின் முகத்தை உற்றுப் பார்த்தான். “தந்தையே, மன்னிக்கவேண்டும் என் பிழையை. இன்று நான் எதிர்பாராமல்...” என்றான். செங்கணான் அதைக் கேட்டு முகம் மாறுபட்டான். தன் மகன் என்ன செய்தனனோ என்று கலங்கினான். “அப்பனே, நீ என்ன செய்துவிட்டாய் இன்று?” “இன்று ஆமிராவதிக் கரையில் படைகளுடன் வருகையில், ஒரு நாட்டிய மங்கையைச் சிறைப் படுத்தினேன். அவள்தான் ஆட்டனத்தியின்...” “என்ன? நாட்டிய மங்கையைச் சிறைப்படுத்தினாயா? - நீயா?” செங்கணானின் முகம் பெரிதும் மாறியது வியப்பால். ‘பிற பெண்களை ஏறெடுத்தும் நோக்காத இவன் ஒரு நாட்டிய மங்கையைச் சிறைப் பிடித்தானா? - ஏன்?’ என்று வியப்பும் சந்தேகமும் கொண்டான். “அவள் பெயர் மருதி! விழாக் காலங்களில் அத்தியுடன் நாட்டியம் ஆடுதலில் புகழ் பெற்றவள்...” “நல்லடிக்கோன்! அவள் அத்தியின் துணைவியல்லவா - கணிகையர் குலத்தில் பிறந்தவள்தான்; என்றாலும் அவன் காதலி! அவளை நீ கண்டது எங்கே? சிறைப் பிடிக்கக் காரணம்?” “ஒரு பல்லக்கில், தொண்டி நகர்க்கு யாத்திரையாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள் ஒரு கிழவியுடன்; அவளைப் பார்த்தேன் அப்போது?” “அதனால்?-” “யாரென்று அறியாமல், கேட்டேன். அவள் அழகுருவம் என்னை, அப்படி வசீகரித்துக் கேட்கச் செய்தது, அவள் முதலில் உண்மையை மறைத்துப் பின்பே கூறினாள். ஆனால் அவளைப் போகவிட, நான் - ” “நல்லடிக்கோன்! உன் செய்கை எனக்கு மிகவும் வியப்பை உண்டாக்குகிறது; உண்மையில்...” “தந்தையே, மன்னிக்க வேண்டும்; ஏதோ அவளைக் கண்டவுடன் என் புத்தி அவசம் அடைந்து விட்டது. அவள் விரும்பாத நிலையிலேயே...” “என்ன காரியம் இது? இது வீரமா? முறை கேடானது என்று நீ உணரவில்லையா?” “அவள் ஒரு கணிகை என்ற நினைவு அப்படிச் செய்யத் துணிந்துவிட்டது. அவள் நாட்டியத்தை என்றும் நிலையாகக் காணவேண்டுமென்ற ஆதுரம்! அவள் அழகுருவம் என் இதயத்தில் பதிந்து விட்டது. நம் அரண்மனையில் அவளை அழகோவியமாகக் கண்டுடிருக்கலாம் என்ற வேட்கையும் என்னை எல்லை மீறச் செய்தது. அவளை அவள் பல்லக்கிலேயே தகுந்த காவலுடன் உறையூர் அனுப்பிவிட்டேன். என் தவறை இப்போது உணர்ந்து மன்னிப்பு வேண்டுகிறேன்” - என்று தடுமாற்றம் நிறைந்த சொற்களைக் கூறினான். செங்கணானுக்கு வியப்புக்கு மேல் வியப்பு உண்டாயிற்று. “நல்லடிக்கோன்! இதனால் உண்டாகும் நன்மை தீமைகளை நீ ஆராயவில்லையே! அவளைச் சிறைப்படுத்தியிருப்பது உன் ஆண்மைக்கு அழகா? - அல்லது அவள் விருப்பத்தைப் பெற்று அவ்விதம் செய்தாயா? - இதனால் ஆட்டனத்தியின் பகைமையை தேடிக் கொண்டு விட்டாய்! இதை நான் மறுத்து என்ன?-உன் விருப்பம்!” “ஏன், அத்தியை அகப்படுத்துவதற்கும் இதை ஓர் உபாயமாகக் கொள்ளக் கூடாதா?” “நீ செய்தது பெருந் தவறு. இனி அதைப்பற்றிச் சிந்திப்பதில் காரியம் இல்லை. ஆனால் நீ இவ்விதம் செய்ததை என்னால் நம்பமுடியவில்லை; உன்னை இப் போது பார்க்கையிலும் நான் உன் பேச்சை நம்பவில்லை. உண்மையை நீ உரைத்த பின்பும் என் மனம் உறுதி கொள்ளாததில் வியப்பே இல்லை; அவள் கிடைத்ததற்கு அரியவள்! ஆனால் அவள் விரும்பாத நிலையில் நீ, பலாத்காரம் செய்திருப்பது நேர்மையாகாது. கிடைத்த கொம்புகளிலெல்லாம் சுற்றிக் கொள்ளும் கொடியல்ல அவள்! அவளுக்குக் கொழு கொம்பாக உள்ளவன் அத்தி ஒருவன் தான். உனக்கு எது நேர்மையாகத் தோன்றுகிறதோ அவ்விதம் செய்! உன் விருப்பம் ஒன்றுக்காக தகுதியற்றதை - பிறருக்கு விருப்பம் இல்லாததைக் செய்வது எந்த வகையிலும் போற்றத் தகுந்தது ஆகாது... இதற்கு நீ மன்னிப்பு வேண்டுவதும் அவசியம் அன்று.” செங்கணான் வார்த்தைகள் நல்லடிக்கோனைத் திகைக்க வைத்தன. தன் தந்தை இவ்வாறு மொழிவாரென்று அவன் கருதவில்லை, அவன் மனம் அல்லலுற்றது. அந்நிலையிலும் மருதியை இழக்க அவன் மனம் துணிவுற வில்லை, அவளைத் தன் இருதய மாளிகையை விட்டுப் பெயர்த்து வைக்க அவன் விரும்பவில்லை. தன் மகன்மீது எல்லைமீறிக் கோபம்கொண்டு பேசவோ, ஒறுக்கவோ செங்கணான் நினைக்கவில்லை. அவனுக்கு ஏற்ற நன்மொழிகளையே சொன்னான். அச் சொற்களுக்குமேல் அதிகமாக அவனை வற்புறுத்திக் கேட்க விரும்பவில்லை. தவம் கிடந்து பெற்ற மைந்தனிடம் தனிப் பிரேமை ஒருபுறம் இருந்தது. அவன் வாழ்வில் வருத்தமும் கவலையும் உண்டாவதற்கு, செங்கனான் சிறிதும் இடம் கொடான். ஆகவே நல்லடிக்கோனை வற்புறுத்தவில்லை. அவன் மனம் துயர் கொண்டு விடுமோ என்ற அச்சத்தால் மேற்கொண்டு சொல்லவும் இல்லை. எனவே நல்லடிக்கோன் சிந்தனை செய்தான்; ‘அதிக நாழிகை இவ்விடத்தில் தங்கினால் செங்கணான் மருதியைப்பற்றி ஏதேனும் வற்புறுத்திக் கேட்டு விடுவான்’ என்ற பயத்தால் முன்னதாகவே புறப்பட முயன்றான். நல்லடிக்கோனின் உட் கருத்தைச் செங்கணான் எளிதில் கண்டுகொண்டான். அவன் மனத்தில் அது விஷயமாகக் கவலை அதிகம் ஏற்பட்ட போதிலும், நல்லடிக்கோனை அவன் விட்டு விடவே எண்ணிவிட்டான். அந்நிலையில், செங்கணான் செய்யத் தகுந்தது அவ்வளவுதான்! வேறு எவ்விதம் அவன் நல்லடிக்கோனை மாற்ற முடியும்? “தந்தையே, மன்னிக்கவேண்டும்! என் மனம் அமைதியாக இல்லை; படைகள் பின்னே வருவதற்கு முன், நான் புறப்பட்டுப் போகிறேன்...” நல்லடிக்கோன் புறப்பட ஆயத்தமானான்; நிற்க நிலைகொள்ளவில்லை அவனுக்கு. “குமார, நான் சில சொல்லியதால் ஒன்றும் வருத்தம் வேண்டாம். உன் அறிவுக்குப் புலப்பட்டதைச் செய்; போய்வா!” செங்கணான் எழுந்து நல்லடிக்கோனைத் தழுவிக் கொண்டு அனுப்பினான். நல்லடிக்கோனுக்குத் துணையாக ஐந்து வீரர் புறப்பட்டுச் சென்றார்கள். தன் குதிரையில் ஏறிக்கொண்டு நல்லடிக்கோன் புறப்பட்டான். மற்ற ஐவரும் குதிரைகளில் ஏறியவர்களாய் அவனைச் சூழ்ந்துசென்றார்கள். அணையைக் கடந்து ஆமிராவதிக் கரை வழியே உறையூர் நோக்கி அறுவரும் கடுகினார்கள். மருதியின் நினைவிலேயே, உள்ளம் ஒருமைப்பட்டவனாய் நல்லடிக்கோன் மிக வேகமாகக் கடுகினான். அவளைக் காண்பதிலே அளவற்ற ஆதுரம் கொண்டு சென்றான். சிந்தை மிக்கவனாய், சிறிது நாழிகை நல்லடிக்கோனின் உருவம் தெரியும்வரை, பார்த்து நின்றான் செங்கணான். அவன் கண்களுக்கு வடிவம் மறைந்ததும் பிரதானிகளுடன், குணவாயில் கோட்டத்தை அடுத்திருந்த தன் கூடாரத்தை அடைந்தான். நல்லடிக்கோனின் வார்த்தைகள் அவன் மனதில் பலவிதச் சந்தேகங்களை எழுப்பி விட்டன. ‘இனி என்ன செய்வது? நல்லடிக்கோன் இனி என்ன செய்வான்? மருதியை விடுதலை செய்து அவள் விருப்பம்போல் விட்டு விடுவானா? அவளிடம் இவன் எப்படி நடந்து கொள்வானே? அவள் அழகிலே மயங்கிய இவன், எவ்விதம் அவளை விடுதலை செய்வான்?...’ என்று அவன் மனம் கலங்கினான். வெண்குதிரையில் மிக வேகமாகச் சென்று கொண்டிருந்தான் நல்லடிக்கோன். நெருப்புப்பந்தம் ஏந்திய வீரர் அவனைப் பின் தொடர்ந்து சென்றார்கள். பகல் போல் நிலவின் ஒளி பரவியிருந்தது; எனினும் அடர்ந்த மரங்களையுடைய அச்சாலையில் போகும் அரசிளங் குமரனுக்கு வழிக்கு விளக்காக, வீரர்கள் தீப்பந்தம் ஏந்திச் சென்றனர். வஞ்சிமா நகராகிய கரூரின் எல்லையைக் கடந்து ஆமிராவதியின் சங்கமத்தையும் கடந்து காவிரிக்கரை வழியே கிழக்கு நோக்கிச் சென்றார்கள். சோழ ராஜ தானியான, உறையூரை அணுக அணுக நல்லடிக்கோனின் இருதயம் தீவிர உணர்ச்சி மேலீட்டால் குதுகுதுப்புறத் தொடங்கியது. தன் தந்தை செங்கணானின் உபதேச மொழியை அறவே மறந்தான். அவனுடைய உள்ளத்தில் கிளைத்த வேட்கைத் தீயிலே பட்டு மாய்ந்தன செங்கணானின் நன்மொழிகள். அவை மாய்ந்த இடத்தில் நாட்டிய மங்கை மருதியின் அழகுப் பிழம்பு மின்னலிட்டது. ‘உள்ளத்தில் தேங்கிக் கிடக்கும் இன்ப உணர்ச்சிகளையும் முடிவில்லாத நினைவுத் துளிகளையும் தெள்ளத் தெளியக் காட்டி காண்பவர் கண்வழியே புகுந்து கருத்தைக் கவர்ந்து மயங்க வைக்கும் கருநீலக் கண்கள் தீயில்பட்ட செழுந்தளிர் போல், கோபத்தாலும் துயரத்தாலும் உள்ளம் அதிர்ந்ததை உணர்த்திச் சிவந்து துடிக்கும் செவ்விதழ்கள், நாட்டியப் பயிற்சியின் மிகுதியால் லாவகம் மிகுந்து மென்மையும் சோபையும் பெற்றுத் திரண்டு உருண்டு வசீகரிக்கும் அங்கங்கள் - இவை தாம் நல்லடிக்கோனின் இருதயக் கோயிலில் கிளைத்து நின்ற பெண்ணணங்கு - மருதியின் அழகோவியம். பெண்மையின் நிறை சோபை - ஒளி வீசும் அழகோவியம் - பெண்மையின் வளம் செழித்து ஓர் உருப் பெற்று இவ்விதம் தோன்றிய உயிரோவியப் பாவை இவள். இவளை அடையப்பெற்றவன் பெரும்புண்ணியம் செய்தவன்; ஆம்! இந்தப் பெண்கனியை நான் இழந்து விடுவது மதியீனமாகும்’-இவ்வாறு கருத்தில் கற்பனை செய்தவாறே தாவும் குதிரை மீது சென்றுகொண்டிருந்தான் நல்லடிக்கோன். மரங்கள் அடர்ந்த சாலையைக் கடந்து உறையூர் நகர எல்லையை அணுகினான். நகருக்குப் போகும் சாலையிலே குதிரை கால் மாறிப் பாய்ந்தது. நகருக்குள் புகுவதற்கு வழியாகிய சாலையில் - அகன்ற மணற்பாங்கான இடத்தில் இரு கல்தூண்களுக்கு நடுவில் இரு வீரர் முன்னிட்டு நின்றார்கள். வெண்புரவி தாவி வரும் வேகமும் அதன்மேல் அமர்ந்துள்ள வடிவத்தின் சாயலும் பின்னேவரும் தீப்பந்தங்களின் காட்சியும், அந்த நகர்ப் புறக் காவலரின் உள்ளத்தில் நல்லடிக்கோனின் வருகையைப் புலப்படுத்தின. அடுத்த கணமே தலைமேல் குவித்த கையினராக அகல நின்றார்கள். மின்னல் தோன்றி மறைவதென இரு தூண்களுக்கு நடுவே பாய்ந்து சென்றது. வெண் குதிரை. அதை அடுத்துத் தீப்பந்தம் ஏந்திய வீரர்களின் குதிரைகளும் கடுகின. காவலரின் உள்ளத்தில் பிரமை தட்டியது அந்தக் காட்சி. புறநகர் கடந்து, மதிள்வாயிலை அணுகியது வெண் புரவி. மதிள் வாயிலில் வீரர் சிலர் கூடி நின்று பேசுவது நல்லடிக்கோன் கண்களுக்கும் செவிகளுக்கும் தெரிந்தது. விரைந்து செல்லும் குதிரையை மந்த கதியாக உந்தினன். அவர்கள் பேச்சு அவன் கா தில் முழுவதும் புகவில்லை. வார்த்தைகள் சட்டென்று அடங்கிவிட்டன. குதிரை வரும் சத்தத்தைக் கேட்டுத்தான் அவர்கள் பேச்சை நிறுத்தியிருக்க வேண்டும்! நல்லடிக்கோனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. அவன் வாயிலை அணுகவே, சூழ்ந்து நின்ற வீரர், இளவரசன் வருகையை அறிந்து வணங்கி ஒடுங்கி நின்றார்கள். நல்லடிக்கோன் குதிரையை நிறுத்தினான். மதிள் வாயிலில் நின்ற வீரர்களின் தோற்றம் நிலவொளியால் நன்கு தெரிந்தது. “இரவுப்போதில் இவ்வளவு பேரிரைச்சல் ஏன்? காவல் செய்யும் இடத்தில் கலகமா?” என்று கம்பீரமாய்க் கேட்டான். சிறிது நாழிகை பேச்சவிந்து நின்றார்கள் வீரர். ஒரு வீரன் தாழ்ந்த குரலில் பேசினான்: “வேந்தே, பொறுத்துக் கொள்ள வேண்டும். தங்கள் வெற்றியைப் பற்றிக் கேள்விப் பட்டோம்; அதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தோம்.” “அடே, நீங்கள் பேசியது இதுதானா? வேறொன்றும் இல்லை?” அவ் வார்த்தைகளைக் கேட்ட வீரர்கள் நடுங்கி விட்டார்கள். ‘நாம் பேசிக்கொண்டது இளவரசர் காதில் விழுந்து விட்டது போலிருக்கிறது. அதனால்தான் இப்படிக் கேட்கிறார்’ என்று சந்தேகம் கொண்டான் அவ் வீரன். “இல்லை... சேரநாட்டுப் பெண்ணைத் தாங்கள் சிறைப்படுத்தி தங்கள் மாளிகைக்கு...” “துஷ்டர்களே, போதும்; இனி இவ்விதப் பேச்சுக்கள் வெளிப் புறப்பட்டால்... தெரியுமா? உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; இன்னும் சிறிது நாழிகையில் வேங்கைமார்பன் தலைமையில் கொங்கு நாட்டு வீரர் வருவார்கள்; அவர்கள் வந்தவுடன் மதிள் புறத்தில் இருக்கும் பெருஞ்சதுக்கத்தை திறந்து: விடுங்கள்.” வாயில் வீரர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு நல்லடிக்கோன் குதிரையைச் செலுத்தினான். அக நகர்க்குள் புகுந்து அரச வீதி வழியே அரண்மனை நோக்கிச் சென்றான். வீதியில் குதிரையின் குளம்படிச் சத்தம் கேட்டு, ‘இது என்ன? இரவில் இப்படி வேகமாகக் குதிரை போகிறது?... அதோ இளவரசர் அல்லவா?’ என்று வியப்புக் கொள்ளாதவர் இல்லை. மாளிகையின் சாளரங்களிலிருந்தும், மாடங்களின் உப்பரிகையிலிருந்தும், வாயில் மாடங்களிலிருந்தும் தலை நீட்டிப் பார்த்தனர் வீதி ஜனங்கள். இளவரசன் நல்லடிக்கோன் போகிறான் குதிரையில் என்று தமக்குள் பேசிக்கொண்டவர்கள் மற்றொரு ‘புதிரை’யும் தமக்குத் தாமே கேட்டுக் கொண்டார்கள். ‘யுத்தத்துக்குச் சென்ற இளவரசர் சேர நாட்டு நங்கை ஒருத்தியைப் பிடித்துக் கொணர்ந்து தன் மாளிகையில் அடைத்து வைத்திருக்கிறாரே! இனி என்ன செய்வாரோ!’ - ‘நல்ல அழகியாம்! இள நங்கையாம்! நாட்டியத்தில் அவளை வெல்பவர் இந்த உலகத்திலேயே இல்லையாம்; ஆமிராவதி நதிக்கரையில் கண்டவுடன் சிறைப்பிடித்து அனுப்பிவிட்டாராம்; பாவம்! அந்தப்பெண் யாரோ தெரியவில்லை; இளவரசன் நல்ல அழகன்தான் என்றாலும், அவள் சிறைப்பட்டது முதல் அழுதுகொண்டே இருக்கிறாளாம்’ ‘அவள் ஒரு குலமங்கை அல்லவாம்! கணிகையர் குலமாம்! ஏன் இந்த வீண் பழி இவனுக்கு? செங்கணான் காதுகளுக்கு எட்டினால் என்ன நடக்குமோ? இதுவரையும் பெரிய துறவிபோல் பெண் ஆசையே இல்லாமல் இருந்தாரே! ‘ஒரு கால் துறவியாகப் போய்விடுவாரோ’ என்றுகூட செங்கணான் கவலைப்பட்டு விட்டான் முன்பு. இப்போதுதான் தெரிகிறது நல்லடிக்கோனின் செய்கை! என்ன இருந்தாலும் ஒரு கணிகையிடம் இப்படி...’ ‘காமத்திற்குப் பகுத்தறிவு உண்டா? ஆனால், அவள் பெரிய மாயக்காரியாம்; தைரியம் உடையவளாம்: இவனிடம் அவளுக்குக் கோபந்தான் என்று தெரிகிறது.’ ‘ரகஸ்யமாகத் தன் மாளிகையில் காவல் செய்ய ஏற்பாடு செய்தார் இவர். அந்தக் காவலர்கள் என்ன காரணமோ இந்தச் செய்திகளையெல்லாம் நகரில் உலாவ விட்டுவிட்டார்கள்.’ ‘இவ்வளவு வேகமாகப் போகிறாரே! அவளை நினைத்துக் கொண்டுதானே! வேறு என்ன இருக்கப்போகிறது?’- ‘இவரைப்பற்றி எவ்வளவு மதிப்பு இருந்ததோ, அவ்வளவும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது என்றுதான் நினைக்கவேண்டும்!’ ‘அரசிளங்குமரன் - இவன் செய்ததில் ஒன்றும் தவறில்லை என்று நினைக்கலாம். ஆனல் இவ்வளவு நாட்கள் மிகுந்த நல்லொழுக்கத்தோடு இருந்து புகழ் பெற்றவர் ஆயிற்றே! - இப்போது ஒரு கணிகையிடம் மயங்கிவிட்டார் என்றால் நகைப்புக்கு இடந்தானே!’ இவ்வாறு பலவிதமாகப் பேசிக் கொண்டார்கள் ஜனங்கள். வீதியில் மிக வேகமாகச் செல்லும் நல்லடிக்கோனுக்கு இவையெல்லாம் காதில் விழுமா? மெள்ள மெள்ளத் தமக்குள் பேசிக்கொள்ளும் ஜனங்களின் பேச்சு அவன் செவிகளுக்கு எவ்விதம் எட்டும்? |