(வ. வேணுகோபாலன் அவர்களின் ‘மருதியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

9. நாட்டிய விருந்து

     மருதியின் மனம் சிந்தனை செய்தது. அம்பையின் வார்த்தைகளைப் பற்றி அவள் ஆராய்ந்தாள். இவள் பேச்சை நம்புவது தகுமா? என்று யோசித்தாள். சிறிது நாழிகை மௌனமாக இருந்து சிந்தித்தாள். அவளுடைய சித்தக் கடலிலே ஆட்டனத்தியின் நர்த்தனக் காட்சி அலை மோதிக்கொண்டிருந்தது. ‘என் நாட்டியத்தால், இவனை மகிழ்வித்து நான் விடுதலை பெறுவதா? என் காதலன் என் நிலையை அறிந்தால் இவன் நிலை என்ன ஆகும்? விதியின் காரியம்! என்னை இவனுக்குப் பணிந்து நடக்கும்படிச் செய்தது விதிதான்; அம்பை சொல்வது போல் இவன் நல்ல குணமுடையவனாயிருந்தால், என் நிலையை உணர்ந்தவனாயிருந்தால் என் நாட்டியத்தின் உயர்வைக் கண்டு என்னை என் விருப்பப்படி விடுதலை செய்து விடுவான்! இல்லையேல் நான் உயிரை இழக்க வேண்டியதுதான். ஆனால் என் பாக்கிய வசமாக என் காதலர் இவனிடமிருந்து என்னை விடுதலை செய்தால் எனக்கு எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்!’ - மருதியின் உள்ளம் இவ்வாறு சிந்தித்தது.

     “அம்பை, என்னை என்ன செய்யச் சொல்லுகிறாய்?”

     “மருதி, உனக்குத் தெரியாததை நான் சொல்லப் போகிறேனா? இயல்பாகவே சாதுர்யமும் சாகஸமும் கொண்ட நீ, எங்கள் இளவரசரிடம் எப்படி நடந்து கொள்வது என்று யோசனை செய்கிறாயா?”

     “என் நாட்டியத்தைக் கொண்டு அவர் வேட்கையைத் தணிக்க வேண்டும் என்கிறாயா? அப்படி என் நாட்டியத்தை அவர் உள்ளத்தில் நிலைகொள்ள வைத்தால் - அவர் வேட்கை விபரீதமாகி விடாதா? மூண்டு எரியும் தீயை நெய்யால் அவிக்க முடியுமா?”

     “இல்லை; அவ்விதம் விபரீதம் ஏற்படாது. அவரை நீண்ட நாட்களாக நான் அறிவேன். அவர் இயல்பும் எனக்கு நன்றாகத் தெரியும். அவ்வளவு தூரம் மனத்தை நெகிழ விடமாட்டார். நாட்டியத்திலே உள்ளத்தைப் பறி கொடுத்து, உன்னிடம் உயர்வான மதிப்பைப் பெறுவார்; உன்னிடம் கொண்ட வேட்கையை மாற்றித் தீவிரமான தூய பக்தியை உன்னிடம் கொள்வார்...”

     “அம்பை, உன்னுடைய யோசனையை நான் மேற் கொள்கிறேன். என்னுடைய நாட்டிய விருந்தை அவருக்கு அளித்தால், எனக்கு விடுதலை கிட்டும் என்று நம்புகிறேன். மாறான எண்ணம் அவருக்கு உண்டாகு மென்று தெரிந்தால் என் உயிரை வெறுத்து விடுகிறேன். இதில் சந்தேகமே இல்லை. எவ்விதமேனும் நான் விடுதலை பெற்று என் காதலரைச் சந்தித்தால் போதும்.”

     “மருதி, இன்னும் யோசனை ஏன்? இப்போதே உண்மையைப் பரீக்ஷித்து விடலாம்; அதோ விடியல் வெள்ளி உதயமாகப் போகிறது: இளவரசரும் விழித்துக் கொண்டுதான் இருப்பார்; உன் நினைவாகத் தான் இருப்பார்; அந்தப்புர மாளிகைக்குப் போவோம், வா.”

     “அம்பை, எனக்கு ஏதோ பயமாகத் தான் இருக்கிறது; இளவரசர் எங்கேயிருப்பார்?”

     “அவர் முன் மாடத்தில் இருப்பார்; பயமில்லாமல் வா.”

     மருதி, அம்பையுடன் தன் சிறைக் கோட்டமாகிய அந்தப்புர மாளிகைக்குச் சென்றாள். நிசப்தமான அந்த இடத்தில் மருதி அம்பையுடன் மௌனமாக நின்றாள். நிலவொளியும் விளக்கொளியும் சேர்ந்து அந்தப்புரத்தை அழகு செய்தன. சாளரங்களிலிருந்து, காலைக்காற்று குளிர்ந்து வீசியது. காலை மலர்களின் இனிய நறுமணம் எங்கும் கமழ்ந்தது.

     “மந்திரவாதி குழலெடுத்து ஊதினால், புற்றி லிருக்கும் பாம்புகள்கூடப் படமெடுத்து ஆடிவரும்; நாகண வாய்ப் பறவையும் கிளியும் பறந்து வரும்” என்று சாதுர்யமாகப் பேசினாள் அம்பை.

     “அது உண்மைதான்; ஆனால் பாம்பினிடம் விஷம் இருக்குமே!” என்று புன்னகையோடு கேட்டாள் மருதி.

     “பாம்பினிடம் விஷம் இருப்பது உண்மைதான்; ஆனால் அந்த விஷப் பாம்பையும், மந்திரவாதி, தன் குழலோசையால் மயக்கி, பெட்டிக்குள் அடக்கி மூடிவிடுவான்; அவனிடம், பாம்பின் விஷம் என்ன செய்யும்?” என்றாள் அம்பை.

     மருதி நகைத்துவிட்டாள். அம்பையின் சாதுரியம் மிகுந்த பேச்சைக் கேட்டு ஆச்சரியம் அடைந்தாள்.

     “அம்பை, நீ பேச்சில் வல்லவள்தான்! ஒன்று சொல்கிறேன் கேள்; நானும் விஷமுடைய பெண் நாகம் என்று அறிந்துகொள்.”

     “பின், ஏன் பயம்? நடக்கட்டுமே நாட்டியம்!”

     “அம்பை, இதுவும் விதியின் விளையாட்டுப் போலும்” என்று கூறிக்கொண்டே காலில் அணிந்திருந்த பாடகத்திலிருந்தும் சிலம்பிலிருந்தும் இன்னொலியை எழுப்பினாள் மருதி. அமைதி நிலவிய அந்தப்புரத்தில், பாடகமும் சிலம்பும் கலீர் கலீர் என்று நாதத்தை எழுப்பின; அந்த இன்னொலியால் மெய் சிலிர்த்தது அம்பைக்கு. பிரமித்து நின்றாள் மருதியைப் பார்த்து. சிலைப்பெண், தெய்வ சாந்நித்தியத்தால் ஜீவகளை பெற்று நாட்டியம் ஆடுவதுபோல் இருந்தது. பூங்கொடி மென்மெல நெளிவது போன்றிருந்தது அவள் மேனியின் குழைவு. பாம்பின் உடல் நெளிவதென, அவள் கைகள் வளைந்து கொடுத்தன. கை வளையல்களின் சப்தமும், கால் சிலம்புகளின் முழக்கமும், பாடகத்தின் ஒலியும், இடையில் கட்டிய மேகலாபரணத்தின் ஓசையும் முறையே இன்பநாதத்தை உண்டாக்கின. ‘இதென்ன, பலவித சப்த ஜாலங்கள்!’ என்று கூறும்படியிருந்தது மருதியின் நாட்டியத்தின்-முதல் பகுதி! ஆம்; அப்போது வெறும் சப்த ஜாலமே அவளுக்கு முக்கியமாக வேண்டியிருந்தது. அவ்வித நாட்டியத்தை அம்பை கண்டதே இல்லை; அதனால் அவள் மருதியின் நாட்டியத்திலேயே மெய்மறந்து விட்டாள்.

     ‘கல் கலீர், கல் கல் கலீர்’-இவ்வித இன்னொலியால் மாளிகையின் நானாபுறமும் எதிரொலியை உண்டாக்கி, எங்கும் இன்ப நாதத்தை எழுப்பிவிட்டாள்; ஏன்!-- இன்ப மயமாக்கி விட்டாள் சப்த ஜாலத்தால்.

     எந்த எந்த வகையில் சப்த ஜாலத்தால் நாட்டியத்தைச் சோபையுறச் செய்ய வேண்டுமோ, அவ்வித மெல்லாம் தன் திறமையைக் காட்டினாள். விடியற்போதிலே ஆங்காங்கே அயர்ந்து உறங்கும் யாவரையும் இன் துயில் எழுப்பிப் புளகாங்கிதமடையச் செய்து, ‘இது என்ன? நாட்டிய அரங்கத்தின் வசீகர ஒலி!’ என்று திகைக்க வைத்தது, மருதியின் நாட்டியஜாலம்; அவள் பாதங்கள் லாவகமாக பூமியில் பதிந்து உண்டாக்கும் இன்னொலியும், கை வளையல்களின் மெல்லொளியும், கேட்டவர் செவி வழியே புகுந்து இருதயத்திலே இன்ப உணர்ச்சியை ஊட்டின. இவ்விதச் சப்த ஜாலங்களுக்கு இடையே நெஞ்சை அள்ளும் மணிக்குரலில் தன் கண்டத் தொனியை எழுப்பினாள்; இருதயத்தில் இன்பவூற்றைச் சுரக்கச் செய்யும் அவள் கண்டத் தொனியைக் கேட்டு மயங்காதவரும் உண்டோ?

     அமைதி நிலவிய அம்மாளிகையில் ஆங்காங்கே பேச்சுக்குரல் கேட்டது; அந்தப்புரத்தை அணுகியும் அணுகாமலும் பலர், மருதியின் நாட்டியத்திலே ஈடுபட்டார்கள். அவள் நாட்டியத்தைக் கண்ணால் காணா விடினும், சப்த ஜாலத்திலே மனதைப் பறிகொடுத்தார்கள். இந்நிலையில் திடீரென்று, முன்மாடத்திலிருந்து மிகவேகமாகக் கடுநடையுடன் வந்தான் நல்லடிக்கோன். அவன் வருகையைக் கண்டு பலரும் ஓடி மறைந்தனர், யாரையும் மதிக்காதவனாய், மிகுந்த ஆதுரத்தோடு அந்தப்புரத்தை அணுகினான். அணுகியவன், சற்று அகல நின்று அந்தப்புர மாளிகைக்குள், கொடிபோல் நுடங்கியாடும் மருதியைக் கண்டான். என்ன அதிசயம்! அப்படியே பிரமித்து நின்றான். கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது அவனுக்கு. மெள்ள மறைவாக அணுகினான். அவன் உள்ளத்தையும் உடலையும் வசீகரித் தது மருதியின் நாட்டியம்; அவளுடைய நாட்டிய சப்த ஜாலமும், மணிக் குரலில் அவள் பாடும் கண்டப்பாடலும் வாடிய அவன் உள்ளத்தை மலரச் செய்தன. தான் காண்பது கனவா நினைவா என்று பிரமித்தான் என்னிடம் கோபாவேசத்துடன் சீறிவிழுந்த மருதியா இவள்! இவள் நாட்டியம் இப்போது காணக் கிடைத்ததற்குக் காரணம் என்ன? இந்த அமுதின் சாயலாளை அடையப் பெற்றவன் பெரும் புண்ணியம் செய்தவன் என்பதில் சந்தேகம் இல்லை; இவ்வளவு வசீகரத் தன்மையோடு நாட்டிய மாடும் இவள் தெய்வப்பிறவியா? இவள் குரல் என்ன, தேவகண்டமா? மானிடகண்டமா? ஆ! மேனியின் குழைவில் எவ்வளவு கவர்ச்சி! எவ்வளவு அழகு! இவள் கண்களில்தான் என்ன, எவ்வளவு களிமயக்கம்! ஆடவரைக் கொல்லாமல் கொல்லும் இவள் புன்னகையை என்னென்பது? இவளுடைய நாட்டியத்தை இப்போது யாருக்காக அபிநயித்துக் காட்டுகிறாள்? இவள் முகத்தில் சந்தோஷத்தின் நிறைவு துள்ளலாடுகிறதே! தன் நாட்டியத்தைக் கண்டு, ரஸிப்பதற்குத் தகுந்த கலாரஸிகன் இல்லையென்று எண்ணி, தனக்குத் தானே மகிழ்ந்து ஆடுகிறாளா? இவள் என்ன, சக்தியின் அம்சமா? ஆ! அதோ சிலை போல் அம்பை நின்று கொண்டிருக்கிறாளே! ஆம்! இனி என்னால் பொறுக்கமுடியாது; இவள் நாட்டியத்தை நன்கு கண் குளிரக் காண்பேன்!-- நல்லடிக்கோன் மனவுறுதியோடு, அந்தப்புரத்துக்குள் மெள்ளப் புகுந்தான்; புகுந்தவன் அவளுக்கு அருகில் இருந்த மஞ்சத்தை அணுகினான்: நல்லடிக்கோனின் வரவைக் கண்டு மருதி திகைப்படையவில்லை, நாட்டியத்தை நிறுத்தவும் இல்லை; அதைக்கண்டு அவன் பிரமித்துவிட்டான்; அம்பை, சட்டென்று ஒரு மஞ்சத்தை அவனுக்கு முன் கொணர்ந்து போட்டாள். நல்லடிக்கோன் வியப்பும் பெருமிதமும் கொண்டவனாய் அந்த மஞ்சத்தில் அப்படியே அமர்ந்து கொண்டான்; மெய்மறந்து மருதியின் நாட்டியத்திலே ஈடுபட்டான். அவளிடம் அவன் கொண்ட கோபம் மாய்ந்தது; என்னைக் கண்டு சீறிப்பாய்ந்தவள், இப்போது நான் இங்கே வந்த பின்பும், சிறிதும் மாறுபாடில்லாமல் நாட்டியம் ஆடுகிறாளே! என்னைக் கண்டால் ஒருகால், நாட்டியத்தையே நிறுத்தி விடுவாளோ என்று நான் அஞ்சினேனே! இது என்ன அதிசயமாயிருக்கிறது! இவள் போக்கை இவள் மனத்தியல்பை அறிவது முடியாது போல் இருக்கிறதே! இவ்வளவு நாட்டியத் திறமையும் தேவ கண்டம் போன்ற குரலும், திகைக்க வைக்கும் அழகும் கொண்ட இவள், அந்தப் பேதை ஆட்டனத்தி என்னும் கூத்தனோடு திரிவேன் என்கிறாளே! இவளை நம் சபைக்கு அலங்கார மாகப் பெற்றால் எவ்வளவு பெருமை, நம் நகரத்துக்கு: நம் நாட்டுக்கே பெருமையல்லவா!-இவள் இப்போது எதிர்பாராவிதமாக என்னைக் கண்ட பின்பும் நாணாமல் நாட்டியத்திலே ஈடுபட்டிருப்பது ஆச்சரியமாயிருக்கிறது! இவள் எண்ணந்தான் என்ன? இவளை இச் சமயத்தே பெற்ற நான், தகுந்தவாறு இவளைப் பயன் படுத்திக் கொள்வேன். தந்தையின் கட்டளைப்படி ‘கொங்கர் உள்ளிவிழா’வை சிறப்பாகக் கொண்டாடி, அதில் இவள் நாட்டியத்தையும் ஏற்பாடு செய்ய வேண்டும்! வழக்கம்போல் உள்ளிவிழாக் கொண்டாட்டத்தில் நாட்டியம் ஆடுவதற்கென்றே இவள் என்னிடம் சிறைப்பட்டாளா? - ஆனால் இவள் உயிர்க்காதலனாகச் சொல்லும் ஆட்டனத்தியைப் பிரிந்த இவள், இப்படி நாட்டியத்திலே ஈடுபடுவதற்குக் காரணம் என்ன? எப்படியிருந்தால் என்ன? இவளை எப்படியேனும் உடம் படச் செய்து உள்ளிவிழா நம் நகரில் நடக்கப் போவதையும் அதில் நாட்டியமங்கை மருதியின் நாட்டியம் நிகழப் போவதையும் எங்கும் முரசறைந்து இன்றே செய்தி தெரிவிக்கச் செய்வேன்!’ - இவ்வாறு கற்பனையில் மனத்தைச் செலுத்தியவனாய், மருதியின் நாட்டியத்தைக் கண்களால் கண்டு களிகூர்ந்திருந்தான்.

     அதுவரையில் அளவு மீறிய கற்பனையில் ஈடுபட்டிருந்த அவன், நாட்டியத்தை ரஸிக்கத் தலைப்பட்டான்; நாட்டியத்தின் ஒவ்வோர் அம்சங்களையும் நுணுக்கமாகத் தெரிந்து தெளிந்த நல்லடிக்கோன் மருதியின் நாட்டியத்தைப் போற்றாமல் இருப்பானா? தன்னுடைய நாட்டியத்திலே தன் மயமாகி அநுபவித்து நடித்துக்கொண்டிருந்தாள் மருதி; அவள் சிந்தனை சிறிதும், வேறு வழியிலே புகவில்லை. வேறு சிந்தனைக்கு இடம் கொடாமல் தனக்குத்தானே அநுபவித்து நடித்து ஆனந்திப்பதே நாட்டியத்தின் சிறந்த அம்சமல்லவா? அன்றியும்; தன்னுடைய நாட்டிய அனுபவத்தாலே உள்ளத்தில் அமைதியும் பரந்த நோக்கமும்-சுக துக்கங்களின் சம நோக்கமும் - ஒப்பில்லாப் பெரு மிதமும் உண்டாவதை நன்கு உணர்ந்து நடித்தாள். துயர்க் கடலில் மூழ்கிக் கரை காணாமல் தவித்த அவள் உள்ளத் தோணிக்கு, கடற்கரைத் தீபமாகத் தோன்றி அவள் கவலையை அகற்றியது ஒன்றே ஒன்றுதான்: ‘துயர்ப் பள்ளங்களை இப்போது எவ்வகையிலும் கடந்து சென்று விட்டால், வருங்காலத்தில் இணையற்ற இன்பத்தின் உச்ச நிலையை நிச்சயம் அடையலாம்’ என்பதே அந்த நினைவு. நல்லடிக்கோனின் சிறைக்கோட்டத்தை விட்டு வெளியேறிவிட்டால் காதலன் ஆட்டனத்தியின் இன்பத்தைப் பெறலாம் என்று கருதினாள்.

     காண்பவரை யெல்லாம் வருத்தும் வடிவழகும், கேட்பவரின் உள்ளத்திலேயே குதுகுதுப்புக் கொள்ளச் செய்யும் கண்டத்தொனியும், நாட்டியத்தால் ஆண் பெண் யாவருடைய உள்ளத்திலும் உணர்ச்சி குமிழியிடச் செய்யும் நடிப்புத் திறமையும் அவளிடம் ஒருங்கே அமைந்திருந்த அற்புதத்தை நல்லடிக்கோள் கண்ணால் கண்டு களிகொண்டான்.

     உள்ளத்தின் உணர்ச்சிகளையும் - நினைவுச் சுழல்களையும்-இன்ப துன்பங்களின் எண்ணக் குவியல்களையும்-கருணை, சோகம் சிருங்காரம் முதலிய ஒன்பது வகைச் சுவைகளின் உணர்ச்சி வைசித் திரியங்களையும் தன் கருவிழிகளின் இயக்கத்தாலும், இருபுருவங்களின் நெளிவிலும், முல்லையரும்பன்ன இளநகையாலும், கொவ்வை இதழ்களின் அசைவிலும், முகவிலாஸத்தாலும், மற்றைய அங்கங்களின் குழைவிலும் - லாகவ அபிநயத்தாலும் தெள்ளத் தெளிய பாவ நிறைவுடன் நடித்துக்காட்டினாள். நாட்டியத்தின் பிரதான அம்ச மாகிய பாவம் வியக்கத்தக்க முறையில் அவளுடைய அபிநயத்திலே பிரதிபலித்தது. அவளுடைய நாட்டியத்தை அழகுபடுத்த, அங்கே, யாழும் குழலும் இல்லை; நாட்டியத்தின் மற்றோர் அம்சமான ‘ராகத்’திற்கு, அவளுடைய கண்டத்தொனி, யாழையும் குழலையும் காட்டிலும் அழகுபடுத்தியது. தன்னுடைய கண்டத் தொனியால் ‘ராகப்’ பகுதியையும் பூர்த்தி செய்தாள். அவளுடைய காலணிகளாகப் பாடகமும், சிலம்பும், கை வளையல்களும் நாட்டியத்திற்கு ஏற்ற தாளத்தை அளித்தன. நாட்டியத்திலே, பாவம், ராகம், தாளம் என்ற மூன்றிலும் தாளம் பிரதானம் அல்லவா? ஆனால் அந்த இடத்திலே அப்போது, நாட்டியத்திற்கு அங்க மான மத்தளம் கொட்டுவோன் இருந்தானா?-இல்லையே! தாளத்தை நிறைவாக்கி, நாட்டியத்தைச் சிறப்பிக்கும் வாத்தியங்கள் இல்லாவிட்டாலும், அவள் கால்கள் நிலம் பதியும்போது, விதவிதமாகச் சிலம்புகளிலிருந்தும் பாட கத்திலிருந்தும் எழும் சப்த ஜாலங்களும், கை வளையல் களின் இன்னொலியும், ஏற்ற தாளம் தந்தன.

     பாவம், ராகம், தாளம் என்ற மூன்று அம்சங்களும் நிறைந்த அவள் நாட்டியத்திலே - அழகுணர்ச்சி துளும்பும் வசீகர அபிநயத்திலே - குழலினும் இனிய கண்டத் தொனியிலே - பாடகச் சிலம்புகளிலிருந்து எழும் சப்த ஜாலங்களிலே நல்லடிக்கோன் தன் இருதயத்தைப் பறி கொடுத்தான். மெய்சோர்ந்து கண் இமைக்காமல், மருதியின் நாட்டியத்திலே ஈடுபட்டான் - அவளுடைய நாட்டியத்திலே அவன் ஐக்கியமாகி விட்டதாகவே எண்ணி மயங்கினான்.

     சிறிது நாழிகைக்குப் பின், திடீரென்று நாட்டியம் நின்றது; நாட்டியம் நின்ற பின்பும் பிரமை பிடித்தவனாய் அப்படியே விழித்த கண் இமைக்காமல் அமர்ந்திருந்தான் நல்லடிக்கோன். அவனுடைய நிலையைக் கண்டு வியப்புற்ற மருதி, கலகலவென்று நகைத்து விட்டாள். அவளையறியாமல் சிரித்துவிட்டாள். வசந்த காலத்திலே தளிரும் பூவுமாகத் தளிர்த்து நிற்கும் பூங்கொடிபோல் தோன்றினாள் அவள். அவள் நகைப் பொலியைக் கேட்டவுடனேதான் நல்லடிக்கோன் நல்லுணர்ச்சி பெற்றான்; எனினும் அவன் மௌனமாக அவளை நோக்கியபடியே, உள்ளத்தின் வியப்பை முக பாவத்தால் வெளிக்காட்டினான்.

     “என்ன நீங்கள் சிலையா என்ன? இப்படிக் கல்லாய்ச் சமைந்து விட்டீர்களே!” என்று இளந்கையோடு மருதியின் வார்த்தை வெளிவந்தது.

     நல்லடிக்கோன் திடுக்கிட்டான், மருதியின் வாய் மொழியைக் கேட்டு. “மருதி, இது கனவா, நனவா? நீ தான் பேசு கிறாயா?” என்றான்.

     “இன்னும் மயக்கம் தெளியவில்லையா? இன்னும் சிறிது நாழிகை நான் நாட்டியம் ஆடியிருந்தால், உருகிப் போயிருப்பீர்கள் போலிருக்கிறது!” என்று மருதி சிரித்தாள். அந்தச் சிரிப்பில், எவ்வளவு மாயம் கலந்திருக் கிறது என்பதை அவன் உணரவில்லை.

     “ஏன்? அதில் சந்தேகமில்லை; உன்னுடைய நாட்டியத்தைக் கண்டு உருகாதவன் கல்தான்; அதனால்தான் என்னைக் கல் என்று சொல்லிவிட்டாயா? மருதி உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்? எதிர்பாராத விதமாக எனக்கு நாட்டிய விருந்தை உதய காலத்தில் அளித்த உனக்கு என்றும் கடமைப்பட்டவன். விடுதலை ஒன்றைத் தவிர்த்து நீ என்னவேண்டினாலும் அதை நான் மறுக்கவில்லை.”

     “இளவரசரே, எனக்கு வேண்டியதை நான் கேட்க வேண்டுமா? என் விருப்பத்தை மீறி என்னைத் தாங்கள் அணுகித் துன்பம் செய்வது கூடாது; என்னிடம் எல்லை மீறிய பேச்சையும் பேசலாகாது. இவையே நான் வேண்டுவன.”

     “மருதி, உன் விருப்பம்போல் நடப்பேன்; இனி உன்னை நான் அற்பமானவளாகக் கருதுவேனா? கணிகை என்ற எண்ணத்தால் கலங்கிவிட்டேன். உன் நாட்டிய விருந்து ஒன்றே எனக்கு எப்போதும் இன்பத்தை அளிக்கும்: அதுவே போதும்; உன்னிடம் நான் கொண்ட தீய சிந்தையை மாற்றிக் கொண்டேன். உன்னுடைய நாட்டியத் திறமையின் உயர்வுக்குத் தலை வணங்குகிறேன்; வேண்டும்போது உன்னுடைய நாட்டியத்தை நான் காணக் கிடைத்தால் போதும்” என்று கூறிக்கொண்டிருக்கையில் சேடி ஒருத்தி முன் வந்து, “கரூரிலிருந்து தூதுவர் வந்துள்ளனர்” என்று வணங்கினாள். திடுக்கிட்டு, மரு தியும், நல்லடிக்கோனும் திரும்பிப் பார்த்தனர்; தூதுவரை உள்ளே வருமாறு கட்டளையிட்டான். இரு தூதுவர் முன் வந்து ஓர் ஓலையை நீட்டி வணங்கினார்கள். செய்தி என்னவோ என்று இருவருக்கும் தனித்தனியே திகில் மூண்டது. நல்லடிக்கோன் ஓலையை வாங்கிப் பிரித்துப் படித்தான்.

     “செங்கணான் ஓலை நல்லடிக்கோன் காண்க; நாளைக்கு, நம் நகர் பங்குனி உத்தர விழாவை வஞ்சி மாநகரான இக்கருவூரில் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறது. ஆகவே, நம் பட்டத்து யானைமீது புலிக் கொடியை உயர்த்தி ஊர்வலம் செய்வித்து, இக்கருவூருக்கு அனுப்புக; உடனே இக்காரியத்தை முடிக்க, உள்ளி விழாவை, அங்குள்ள கொங்கர்களைக் கொண்டு, நாளையே நடத்திக் கொள்க: அன்றியும் உனக்குக் கட்டளை: நீ சிறை கொண்ட கணிகையிடம் அணுக வேண்டாம்.”

     செங்கணானின் ஓலையைப் படித்தவுடன், நல்லடிக்கோனுக்கு உண்டான மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை. மருதியைப்பற்றி ஓலையில் குறிப்பிட்டிருந்ததை சிரமேல் ஏற்றுக் கொண்டான். ஆனால் மிகுந்த உவப்பை அவனுக்கு உண்டாக்கிய செய்தி என்னவென்றால், ‘உள்ளி விழாவை உறையூரில் நடத்துக’ என்பதே.

     “மருதி, கவலை ஏற்படுமானால் ஒருங்கே மேன்மேல் வந்துகொண்டிருக்கும்; அதுபோலவே மகிழ்ச்சி பிறந்தால் மேன்மேல் மகிழ்ச்சி தரும் செய்திகள் வருகின்றன: இன்று என் தந்தையிடமிருந்து ஓலை, வந்திருப்பதில் ‘உள்ளி விழாவை’ உறையூரில் நடத்தக் கட்டளையிட்டிருக்கிறார்; இதைவிட மகிழ்ச்சி தரும் செய்தி என்ன இருக்கிறது? உள்ளி விழாவில் வழக்கம் போல் உன்னுடைய நாட்டியத்தை..” என்று உவகையால் தழுதழுத்த குரலில் கூறினான்.

     நெடு நாட்கள் பழகியவன் போல் பேசும் அவன் வார்த்தைகளைக் கேட்டு மருதி திகைப்படைந்தாள்: எனினும் வருங்காலத்தில் நம்பிக்கை கொண்டு. அவனுக்குத் தலை வணங்கினாள்.

     “இளவரசே, தங்கள் கட்டளை. சோழ சாம்ராஜ் யத்தின் அரசிளங்குமரரின் கட்டளையை, நாடகக் கணிகையான நான் மீற முடியுமா?” என்று குறு நகை, செய்தாள். அந்தக் குறு நகையிலும் முடிவில்லாச் சோகத்தின் நிழல் பரவியிருப்பதை அவன் உணராமல் இல்லை. ‘என் நிலை இவ்வாறு ஆக வேண்டுமோ!’ என்று எண்ணி அவள் ஏங்குவதை, அவள் கண்கள் நன்கு எடுத்துக் காட்டின. ஆயினும் என்ன? நல்லடிக்கோன் அவற்றையெல்லாம் கவனித்தானா என்ன?

     “மருதி, விரைவில் விழாவுக்குரிய காரியங்களை ஆயத்தம் செய்கிறேன்; என் தந்தை கட்டளைப்படி, பட்டத்து யானையை அலங்கரித்துக் கருவூர் அனுப்பியாக வேண்டும்; போய் வருகிறேன்; அம்பை, பார்த்துக் கொள்!” என்று கூறிவிட்டு நல்லடிக்கோன், அந்தப்புர மாளிகையை விட்டு வெளியேறினான்.

     நல்லடிக்கோனிள் குதூகலப் போக்கைக் கண்டு மருதி, சோர்வடைந்தாள் என்று சொல்லவும் வேண்டுமோ! நாட்டியம் ஆடியதால் ஏற்பட்ட களைப்பும் அதோடு சேர்ந்துகொண்டது. சற்றுப் பிரமையோடு சுற்று முற்றும் பார்த்தாள்; இளஞ் சூரியனின் பொன் கிரணங்கள் சாளரத்து வழியே, பொன் கொடிபோல் பாய்ந்தன. அம்பையைப் பார்த்தாள் மருதி. அவள் கண்கள் பேரிரக்கத்தோடு மருதியைப் பார்த்தன.

     “நீ சொல்லியதில் நம்பிக்கையோடு இருக்கிறேன்; ஆனால் தெய்வம் என்ன நினைத்திருக்கிறதோ! நான் சிறிதே களைப்பாறுகிறேன். மயக்கமாக இருக்கிறது” என்று சொன்னவள், அம்பையின் மறுமொழியை எதிர்பாராமலே கட்டிலில் பஞ்சணை மீது சாய்ந்தாள். சாய்ந்தவள் அப்படியே கண்கள் இமை மூடி அயர்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தாள். பொன் கொடி போன்ற அவள் மேனியின் சாயலைப் பார்த்தவாறே, மருதியின் கால்பக்கம் உட்கார்ந்து கொண்டாள் அம்பை.

     சிறிது நாழிகையில் மருதியின் மார்பு விம்மியது. வாயிதழ்கள் ஏதோ முனு முணுத்தன; கண்களின் இமை மூடப்பெற்றிருந்தும், தாரை தாரையாக நீர் கசிந்து கொண்டிருந்தது. கண் திறந்து பார்க்காமலும், வாய் திறந்து பேசாமலும், அவள் விம்மியழுவதை அம்பை உற்றுப் பார்த்தாள்.

     “மருதி, மருதி!” என்றாள்; பேச்சில்லை. அம்பை வியப்புற்றாள்.

     “மருதி, என்ன இது? கனவா, நினைவா?” என்று மருதியின் கால்களை அசைத்தாள்.

     “இரண்டுந்தான்” என்று கூறிக்கொண்டே மருதி கண்களைத் திறந்தாள். அவளுக்குக் களைப்பு நீங்கி விட்டது. எழுந்து உட்கார்ந்து கொண்டாள். ஆட்டனத்தியைப் பிரிந்த அவளுக்குத் துக்கம் எப்படி வரும்?



மருதியின் காதல் : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17