உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
19. சலோ, பாண்டிச்சேரி! மணியின் கரம் சுந்தரின் கரத்தைப் பற்றிக் கொண்டு இருந்தாலும், அவனுடைய கண்கள் மட்டும் பேச்சு மூச்சின்றி அப்படியே சோபாவில் சாய்ந்துவிட்ட அருணாவையே நோக்கிக் கொண்டு இருந்தன. சுந்தரை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்த ரூபா ஒன்றும் புரியாமல், “என்ன அருணா, என்ன உடம்புக்கு?” என்று அவள் தோளைப் பிடித்து உலுக்கினாள். “உடம்புக்கு ஒன்றுமில்லை; நீங்கள் கொஞ்சம் எட்டி நில்லுங்கள்!” என்று அவளைக் கொஞ்சம் எட்டி நிற்கச் செய்துவிட்டு, மோகன் ஒரு சோடாவைத் திறந்து வாங்கி அவள் முகத்தில் அடித்து குடிக்கச் செய்தான். மேலே சுழலும் மின்சார விசிறியின் காற்று போதாதென்று நினைத்தோ என்னமோ, பாமா வேறு தன் கையிலிருந்த பாட்டுப் புத்தகத்தால் அவளுக்கு விசிறினாள்! ‘மொடக், மொடக்!’ - என்று இரண்டு ‘மொடக்கு’ சோடா உள்ளே சென்றதுதான் தாமதம், கண் விழித்த அருணா தன்னைச் சுற்றி நின்றவர்களை நோக்கி, “எல்லோரும் என்னை ஏன் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்?” என்று கேட்டாள் வியப்புடன். “இன்னொரு முறை மூர்ச்சையாக மாட்டாயா என்று தான் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்!” என்றான் மோகன், சிரித்துக் கொண்டே. அப்போதுதான் தன்னுடைய நிலையை ஒருவாறு உணர்ந்த அருணா, “ஓ, நான் மூர்ச்சையாகிவிட்டேனா? ஆகியிருப்பேன், ஆகியிருப்பேன்!” என்று சொல்லிக் கொண்டே ரூபாவின் பக்கம் திரும்பி, “உனக்கும், உனது காதலருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள், ரூபா! போய் வா, அவசியம் நேரும் போது நாம் மறுபடியும் சந்திப்போம்!” என்றாள், அவளை அங்கிருந்து சீக்கிரம் அனுப்பிவைக்கும் நோக்கத்துடன்! “நன்றி; நான் என்னமோ ஏதோ என்று பயந்து விட்டேன்!” என்று சொல்லிக் கொண்டே அவள் ஏற்கெனவே உட்கார்ந்திருந்த இடத்துக்குத் திரும்பியதும், “இப்போது நீ போகலாம்!” என்றான் மணி, சுந்தரின் கையை விட்டு! - ஆம், அருணாவுக்கு ஒன்றுமில்லை என்று தெரிந்த பிறகு அவனுடைய கையைப் பிடித்துக் கொண்டிருக்க அவன் விரும்பவில்லை! இதை ஒருவாறுப் புரிந்துகொண்ட சுந்தர், அப்பாடா! என்று திரும்பியபோது, இடைவேளை மணி மறுபடியும் கிணுகிணுத்தது. அதைத் தொடர்ந்து தியேட்டரின் விளக்குகள் மட்டும் ஒன்றன் பின் ஒன்றாக அணையவில்லை; சுந்தரின் ஆசை விளக்கும் அணைந்தது! - அணையாதா, பாழாய்ப்போன மணி அதுவரை தன்னைப் படுத்தி வைத்த பாடு போதாதென்று தனக்குப் பக்கத்தில் வேறு வந்து உட்கார்ந்து விட்டால்? ஒரு வினாடி, இரண்டு வினாடி, மூன்று வினாடி, நான்கு வினாடி என்று ஐந்து வினாடிகளும் ஆயின. சுந்தர் படத்தைப் பார்ப்பதாகத்தான் தெரிந்ததே தவிர, தன்னைப் பார்ப்பதாகத் தெரியவில்லை, ரூபாவுக்கு! இது என்ன அதிசயம்! விளக்கை அணைத்து ஐந்து வினாடிகள் ஆனபிறகும் இவரா இப்படி உட்கார்ந்திருக்கிறார்? நம்ப முடியவில்லையே, தன்னால்? இடைவேளைக்கு முன்னால் இருட்டைத் துணையாகக் கொண்டு இவருடைய விரல்கள் தன்னைப் படுத்திய பாடு! -எங்கெல்லாமோ தொட்டுத் தடவி, உரசி. நெருடி... ஒரு கணம் தன்னை மறந்து அந்த இன்பக் கிளுகிளுப்பைக் கண்ணை மூடி அனுபவித்துப் பார்த்தாள் அவள்; மறுகணம் என்ன இருந்தாலும் தான் உயர்ந்த வகுப்பைச் சேர்ந்தவள் என்பதை எந்த நிலையிலும் மறந்து விடக் கூடாது என்பதற்காக, “சீச்சீ! ஆபாசம், ஆபாசம்!” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு சுந்தரைப் பார்த்தாள். அப்போது குறும்பு செய்த அவனுடைய கைவிரல்கள் இப்போது ஏன் செய்யவில்லை என்றுதான்! ஆனால் அவனோ அவள் நினைத்ததுபோல் படத்தைக் கூடப் பார்க்கவில்லை; படத்தைப் பார்ப்பது போல் பக்கத்தில் இருந்த மணியைப் பார்த்துக் கொண்டிருந்தான்! இந்த சினிமா முடிந்த பிறகாவது இவன் தன்னை விடுவானா? - எங்கே விடப் போகிறான், இவன் தொடர்வதைப் பார்த்தால் ஏழேழு பிறவிக்கும் அல்லவா தன்னைத் தொடர்ந்து கொண்டே இருப்பான் போலிருக்கிறது! அதிலும், இன்று அருணா தன் வீட்டுக்குப் போய்ச் சேரும் வரை இவன் தன்னை விடப் போவதில்லை. அத்துடன், ரூபா வேறு சேர்ந்து கொண்டு விட்டாள், இப்போது! - கேட்க வேண்டுமா, இவர்கள் இருவருடைய கற்பையும் காப்பதாக நினைத்துக்கொண்டு இவன் தனக்கு வேண்டாதத் தொந்தரவையெல்லாம் கொடுத்துக் கொண்டே இருக்கப் போகிறான்! - பைத்தியக்காரன், இப்படி எத்தனை நாட்கள் இவர்களுடைய கற்பை இவனால் காப்பாற்றிக் கொண்டு இருக்க முடியும்? உலகம் வினாடிக்கு வினாடி மாறிக் கொண்டே இருக்கிறது; வளர்ந்து வரும் நாகரிகத்துக்கு முன்னால் பழைய சட்ட திட்டங்களெல்லாம் தவிடு பொடியாகிக் கொண்டு வருகின்றன. நேற்று ஒருத்தி ஒருவனை சாகும்வரை பிரிய முடியாது சட்ட ரீதியாக; இன்று நினைத்தால் பிரிந்து விடலாம் - பிரிந்தவள், இன்னொருவனைத் திருமணமும் செய்து கொண்டு விடலாம்; செய்து கொண்டும் விடுகிறார்கள்! - அப்போது எங்கே போகிறது, கற்பு? ஒருத்தி ஒருவனிடம் இருக்கும் போது வேண்டுமானால், தன் கற்பை இன்னொருவனிடம் இழக்காமல் இருக்கட்டும், அவ்வாறு இழப்பது குற்றமாகவோ, துரோகமாகவோ கருதப்படட்டும்; அந்தக் குற்றத்தையும் துரோகத்தையும் வேண்டுமானால், இவனைப் போன்றவர்கள் வந்துத் தடுக்கட்டும். இந்த ரூபாவும் அருணாவும் யாரிடம் இருக்கிறார்கள், இப்போது? இல்லை, நான்தான் யாரிடம் இருக்கிறேன், இப்போது? - யாரும் யாரிடமும் இல்லை! அப்படியிருக்கும்போது, நான் ஏன் இவர்களைக் காதலிக்கக் கூடாது? இல்லை, இவர்கள்தான் ஏன் என்னைக் காதலிக்கக் கூடாது! காதல் என்றால் ஒருவன் ஒருத்தியைத் தான் காதலிக்க வேண்டும், ஒருத்தி ஒருவனைத்தான் காதலிக்க வேண்டும் என்று சிலர் சொல்லலாம். இருக்கட்டுமே, அதனாலென்ன? - பகிரங்கமாகக் காதலிப்பதுதானே பண்புக்குக் குறைவு! அப்படியே இருந்தாலும் என்னப் பண்பு வேண்டிக் கிடக்கிறது, இந்தக் காலத்துக் காதலில்? - அந்தக் காலத்துக் காதல் என்றால் அதன் அர்த்தமே வேறு; இந்தக் காலத்துக் காதல் என்றால் இதன் அர்த்தமே வேறு - இரண்டையும் ஒன்றாக்கி இவனைப் போன்றவர்கள் குழப்பிக் கொண்டு இருந்தால் அதற்கு நானா பொறுப்பு? அந்தக் காலத்தில் காதலுக்கும் கற்புக்கும் தவறிக் கூடப் பங்கம் நேர்ந்து விடக் கூடாது என்பதற்காக இறந்த கணவனோடு இறக்காத மனைவியையும் சேர்த்து வைத்துக் கொளுத்தினார்கள்; இந்தக் காலத்தில் அப்படியாக் கொளுத்துகிறார்கள்? ‘ஒருவன் போனால் இன்னொருவன்’ என்று மறுமணம் அல்லவா செய்து கொள்ளச் சொல்கிறார்கள்! இதெல்லாம் எதைக் காட்டுகிறது, காதலுக்கும் கற்புக்கும் விடுதலை வேண்டும் என்பதைத்தானே காட்டுகிறது? அந்த விடுதலைதான் எனக்கும் வேண்டும், இவர்களுக்கும் வேண்டும் என்கிறேன் நான் - அதைத் தடுக்க இவன் யார்? யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். இவனை நேருக்கு நேராக எதிர்த்து நிற்பதென்பதுத் தன்னால் இப்போது முடியாத காரியம். ஆகவே, இவனும் இவனால் தடுத்தாட் கொள்ளப்படுபவர்களும் எப்படியாவது போய்த் தொலையட்டும் என்று சினிமா விட்டதும் தான் பாண்டிச்சேரிக்குப் புறப்பட்டுவிட வேண்டும். இன்றைய இரவையாவது எந்தவிதமான ஏமாற்றமும் இல்லாமல் இன்பமுடன் கழிக்க! அங்கேதான் மனிதனுக்குப் பூரண சுதந்திரம் இருக்கிறது; அங்கேதான் உலகப் பெருங் கவிஞன் உமர்கய்யாம் வாழ்ந்துக் காட்டிய வாழ்க்கை நெறி அப்படியே கடைப்பிடிக்கப்படுகிறது - அதாவது, மதுவும், மங்கையுமே வாழ்க்கை; மனிதனுக்கு அதை விட்டால் வேறு வாழ்க்கையும் இல்லை, இன்பமும் இல்லை! என்ன அற்புதமான தத்துவம், என்ன அற்புதமான தத்துவம்! - இல்லாதவன் அதை வெறுக்கலாம்; இருப்பவன் அதை ஏன் வெறுக்க வேண்டும்? - எல்லாம் விதி விட்ட வழி! - ஆம், எனக்குப் பக்கத்தில் இப்போது உட்கார்ந்து கொண்டு இருக்கும் இந்தப் பயல், காலையிலிருந்து என் கழுத்தை அறுத்துக் கொண்டு இருக்கிறானே, அது கூட விதி விட்ட வழிதான்! பெண்ணே! நீ இந்த மதுக் கிண்ணத்தை நிரப்பு, நிரப்பிக் கொண்டே இரு! - அச்சமின்றி இப்படிக் கேட்க இப்போது ஓர் இடம் இருக்கிறதென்றால், அதுதான் பாண்டிச்சேரி; சலோ பாண்டிச்சேரி! இப்படி தனக்குத்தானே உத்தரவு போட்டுக்கொண்டு அவன் தன்னை மறந்து எழுந்தபோது, “படம் இன்னும் முடியவில்லை, உட்கார்!” என்று அவன் தோளின்மேல் கையை வைத்தான் மணி. “ஓகோ, படம் இன்னும் முடியவில்லையா?” என்று ஏமாற்றத்துடன் சொல்லிக் கொண்டே சுந்தர் உட்கார்ந்தான்! படம் முடிந்தால் என்ன, முடியாவிட்டால் என்ன? இவனைத் தான் ஏன் உட்கார வைக்க வேண்டும்? தான் வந்த வேலையோ அநேகமாக முடிந்துவிட்டது; அருணா தன் அண்ணனுடன் சேர்ந்துவிட்டாள்; தற்செயலாக அவள் அடைந்த மூர்ச்சையும் தெளிந்துவிட்டது; தன்னை இனம் காட்டிக் கொள்ளாமல் தனக்கு அடுத்தாற்போல் சுந்தரிடம் ஏமாறுவதற்குத் தயாராகிக் கொண்டு இருக்கும் ரூபாவையும் அவளே வாழ்த்தியும் அனுப்பிவிட்டாள். அதற்குப் பிறகு இங்கே தனக்கு என்ன வேலை இருக்கிறது? ‘சினிமா’ என்னும் பேரால் ஒரு குற்றமும் செய்யாமல் மற்றவர்கள் அனுபவிக்கும் ‘மூன்று மணி நேரச் சிறைவாச’த்தைத் தானும் ஏன் அனுபவிக்க வேண்டும்? - அதிலும், கஷ்டப்பட்டுச் சம்பாதித்த காசைக் கொடுத்து! ஏதோ ஒரு வெறி, ஏதோ ஒரு தூண்டுகோல் - இந்தக் காதலனிடமிருந்து அந்தக் காதலியைக் காக்க வேண்டுமென்று தன்னை உந்தித் தள்ளிற்று; அதற்காக ஏதோ செய்தோம் - அவ்வளவுதான்! அதற்கு மேல் தன்னால் என்ன செய்யமுடியும்? - இவர்களைச் சேர விடாமல் தடுக்க முடியுமா? இல்லை, சேர்த்துத்தான் வைக்க முடியுமா? - இரண்டுமே தன்னால் முடியாத காரியம்! ஒருவேளை இவனுடைய விருப்பத்துக்கு அவள் இணங்கியிருந்தால்? - இவர்களுடைய விஷயத்தில் தான் தலையிட்டிருக்கப் போவதேயில்லை - காதலை உள்ளத்தில் வளர்ப்பதற்குப் பதிலாக வேறு எங்கோ வளர்க்கும் கழுதைகளோடு கழுதைகளாக இந்தக் கழுதைகளையும் சேர்த்து விட்டுப் போயிருப்பேன்! - ஆனால் நடந்தது வேறு; எனவே தானும் வேறுவிதமாக நடந்து கொள்ள நேரிட்டுவிட்டது! அதனாலென்ன, அது தன் கடமை! - அந்தக் கடமையையும் பிறருக்காகத் தான் ஆற்றவில்லை; தனக்குத்தானே ஆற்றிக் கொண்ட கடமை, அது! இதைத் தவிர இவர்கள் விஷயத்தில் வேறொன்றும் செய்ய முடியாது, தன்னால்? - உலகத்தில் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் இருப்பார்கள்; ருசி கண்ட பூனை உறியை உறியைத் தாவிக் கொண்டுதான் இருக்கும்; சூடு காணும் வரை அடுப்பில் காயும் பாலைக்கூட அது நக்கி நக்கிக் குடிக்க முயன்று கொண்டுதான் இருக்கும்! இந்த விஷயத்தில் சாஸ்திர சம்பிரதாயங்கள் மட்டுமல்ல; தார்மீக ஆன்மீகத் தத்துவங்கள் மட்டுமல்ல; தீராத வியாதி வெக்கைகள் மட்டுமல்ல; சட்டம், நீதிமன்றம், சிறைச்சாலை ஆகியவையெல்லாம் கூட அன்றும் தோல்வியையேக் கண்டன; இன்றும் தோல்வியையேக் கண்டு வருகின்றன. எத்தனையோ அவதார புருஷர்கள் இந்த நாட்டிலே தோன்றினார்கள்; மறைந்தார்கள். எத்தனையோ உபதேசங்கள் அவர்களால் செய்யப்பட்டன; சொல்லப்பட்டன. ஆனால், மனிதன் தனக்குத் தானே தேடிக் கொள்ளும் தீமைகள் மட்டும் அன்றும் மறையவில்லை; இன்றும் மறையவில்லை! இவற்றையெல்லாம் பார்க்கும்போது தான் ஒன்றுமே இல்லைதான்! - ஆனால் கண்ணிருந்தும் பாராமல் காதிருந்தும் கேளாமல், கையிருந்தும் செயல்படாமல் செத்த பிணம் வேண்டுமானால் இருக்கலாம்; உயிருள்ள மனிதன், உணர்ச்சியுள்ள மனிதன் அப்படி இருக்க முடியாது அல்லவா? அப்படி இருக்கக்கூடாது அல்லவா? - அதனால்தான் இவர்களுடைய விஷயத்தில் தான் தலையிட நேர்ந்தது; தன்னால் முடிந்ததையும் செய்ய நேர்ந்தது. இனி, தான் போய்விடலாம்; இந்தச் சுந்தரைத் தவிர மற்றவர்கள் தன்னைப் பார்ப்பதற்கு முன்னாலேயே தான் போய் விடலாம்... இந்த முடிவுடன் மணி எழுந்தபோது, “படம் இன்னும் முடியவில்லை; உட்கார்!” என்று தன்னை யாரோ பழிக்குப் பழி வாங்குவதை அவன் உணர்ந்தான். ஒருவேளை சுந்தராயிருக்குமோ என்ற அதிசயத்துடன் மணி, தன்னை அந்த உணர்வுக்கு உள்ளாக்கியவனைத் திரும்பிப் பார்த்தபோது, அவன் சுந்தராயில்லை; மோகனாயிருந்தான்! “நீ வேறு பார்த்துவிட்டாயா, என்னை?” என்றான் மணி, மறுபடியும் உட்கார்ந்துகொண்டே. “ஏன், பார்க்கக்கூடாதா?” என்றான் மோகன். “அதற்குச் சொல்லவில்லை...” “பின் எதற்குச் சொல்கிறாய்? ‘சினிமா பாவத்தின் பிறப்பிடம்’ என்று இத்தனை நாட்களாகச் சொல்லிக் கொண்டிருந்துவிட்டு, இன்று நீ யாருக்கும் தெரியாமல் இங்கே வந்திருக்கிறாயே, அதற்குச் சொல்கிறாயா?” “இது நான் எதிர்பார்த்ததுதான்!” “இருக்கலாம்; ஆனால், நான் எதிர்பார்க்கவில்லை!” அதற்குமேல் அதை விவரிப்பது அருணாவை அவனுக்குக் காட்டிக் கொடுப்பதில்தான் போய் முடியும் என்று அஞ்சிய மணி, “அது சரி, நீ ஏன் அவர்களை அங்கே விட்டுவிட்டு இங்கே வந்துவிட்டாய்?” என்று பேச்சை மாற்றினான். “அவர்கள் இருவரும் பேசுவதற்கு இதுவரை தடையாயிருந்தது போதும் என்று எண்ணித்தான் வந்தேன்!” என்றான் மோகன். அதற்குள் ‘ஸ்ஸ்’ என்று பின்னால் இருந்த ரசிகர்கள் இரையவே, இருவரும் பேசுவதை நிறுத்திவிட்டுத் திரையைப் பார்த்தார்கள்; காதலியை அடைய முடியாத காதலன் கண்ணில் நீருடன், அடிவானத்தை நோக்கிப் போய்க்கொண்டு இருந்தான்! “அழவேண்டியதுதான், வாழ்க்கையில் அதைத் தவிர அடைவதற்கு வேறு என்ன இருக்கிறது?” என்றான் மணி, வெறுப்புடன். அவன் சொன்னதைப் பொருட்படுத்தாமல், “ச்சூச்சூ!” என்று தங்கள் அனுதாபத்தைக் கதாநாயகனுக்குத் தெரிவித்துக் கொண்டே ரசிகர்கள் எழுந்தார்கள்; அந்த ரசிகர்களுக்குத் தன்னுடைய அனுதாபத்தை மானசீகமாகத் தெரிவித்துக் கொண்டே மணியும் எழுந்தான்! அப்போது அவனைப் பார்த்த அருணாவுக்குத் ‘திக்’ கென்றது - அதுவரை அவர் தன் அண்ணாவுடன் அல்லவா பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்? தன்னைப்பற்றி அவர் அவனிடம் என்ன சொன்னாரோ, ‘என்னமோ?’ என்றுதான்! காதலும் கல்யாணமும் : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
|