2. காதல் மன்னன்!

     இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு, “ஏன் தான் வருகிறதோ, இந்தத் திங்கட்கிழமை” என்று அலுத்துக் கொண்டே எழுந்து உட்கார்ந்தான் மோகன். காபியும் கையுமாக வழக்கம் போல் அவனுக்கு எதிர்த்தாற் போல் வந்து நின்றாள், அவன் அம்மா.

     ‘இதே காபியை, இதே காலை நேரத்தில், குளித்து நனைந்த கூந்தல் கழுத்திலே விழுந்து புரள, அந்தக் கூந்தலுக்கு நடுவே கிள்ளி வைத்த ஒற்றை ரோஜா, முதல் நாள் இரவுக்குப் பிறகு வெளிறிப் போன தன் இதழ்களை நினைவூட்ட, அந்தக் ‘கனவுக் கன்னி’ கொண்டு வந்திருந்தால் எப்படி இருக்கும்?’

     இப்படி ஓடிற்று அவன் கற்பனை; ஆனால்...

     ‘இவ்வளவு சூடான காபியை அந்தத் தளிர்க்கரம் ஏந்தலாமா? ஏந்தினால் அந்தக் கரம் தளிர்க்கரமாகத் தான் இருக்குமா? கூடாது; அவள் கரம் சூடான எதையுமே ஏந்தக் கூடாது!

     அம்மா இருக்கும் வரை அம்மா ஏந்தட்டும்; அவளுக்குப் பிறகு ஒரு சமையற்காரனைப் போட்டுவிட்டால் போகிறது...

     முதல் காபி அவனுடையதாயிருந்தாலும் அடுத்த காபியாவது தன்னுடையதாயிருக்காதா?

     இருக்கும்; என்ன இருந்தாலும் அவள் கரம் ஏந்தும் காபிக்கு ஈடாக இருக்குமா அவன் கரம் ஏந்தும் காபி?...’

     அவனுடைய கற்பனைக் குதிரை நிற்கவில்லை; அதற்குள், “என்னடா, நான் பாட்டுக்கு நிற்கிறேன்; நீ பாட்டுக்கு ஏதோ யோசித்துக் கொண்டு இருக்கிறாயே?” என்றாள் அவன் அம்மா, பொறுமையிழந்து. “ஒன்றுமில்லை அம்மா, ஒன்றுமில்லை!” என்று அவள் கையிலிருந்து காபியை வேண்டா வெறுப்பாக வாங்கிக் குடித்துவிட்டு ‘சேவிங் செட்’டும் கையுமாகக் கண்ணாடிக்கு முன்னால் போய் நின்றான், அவன்.

     அங்கேயும் அவனுடைய பிரதிபிம்பத்துக்குப் பதிலாக அவளுடைய பிரதிபிம்பமா தெரிய வேண்டும்?

     ஒரு வேளை...

     இல்லாதது எதுவும், இல்லாதவர்கள் யாரும் கனவில் வருவதில்லை என்கிறார்களே, அது உண்மையா யிருக்குமோ? அப்படி ஒருத்தி இருந்து, இப்போது அவள் எனக்குப் பின்னால் வந்து நிற்கிறாளோ?

     திரும்பிப் பார்த்தான்; யாரையும் காணோம்! ‘எல்லாரும் தூங்கிக் கொண்டே கனவு கண்டால் நான் விழித்துக் கொண்டே கனவு காண்கிறேனா, என்ன மோசம்? ரொம்ப மோசம்!’

     இப்படித் தன்னைத் தானே கடிந்து கொண்ட வண்ணம் அவன் முகத்தை வழித்துக் கொண்டு திரும்பிய போது, “ஏன் அண்ணா! இந்தச் சனியும் ஞாயிறும் வாரத்துக்கு ஒரு முறை தான் வருமா?” என்று கேட்டுக் கொண்டே வந்தாள் அருணா.

     “உனக்காவது வாரத்துக்கு ஒரு முறை வருகிறது; எனக்கு மாதத்துக்கு ஒரு முறை தானே வருகிறது?” என்றான் மோகன், வருத்தத்துடன்.

     எதிர்பாராத நிகழ்ச்சிகள் கதைகளில் நிகழும் என்பதில்லை; வாழ்க்கையிலும் சில சமயம் நிகழ்வதுண்டு. அன்று வரை அதை நம்பாத மோகன், அன்று நம்ப வேண்டியதாயிற்று. ஆம், அவன் வேலை செய்யும் அலுவலகத்திலே அவனுக்கு முன்னால் வந்து காத்திருந்தாள், அவன் கனவுக் கன்னி!

     அதே சாயல்; அதே அலங்காரம் - ஆனால் குதிரை வால் கொண்டைக்குப் பதில் பின்னல்; போலிப் பூக்களுக்குப் பதில் உண்மைப் பூ; அதே உடை; அதே நடை - ஆனால் கறுப்புக் கண்ணாடி கண்களில் இல்லை; கையிலே இருந்தது!

     அதனால் என்ன, அந்தக் கண்ணாடிக்குப் பின்னாலிருந்த அவள் விழிகள் உண்மையிலேயே கயல்விழிகள் தான் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் இப்போது தெரிந்து விட்டதே?

     ஆச்சரியம் ஒரு பக்கம், ஆனந்தம் இன்னொரு பக்கம் - இந்த இரண்டு உணர்ச்சிகளாலும் உந்தித் தள்ளப்பட்ட அவன் தன்னை மறந்து அவளை நெருங்கினான்; நெருங்கியதோடு நில்லாமல், “நீங்கள்...” என்று ஏதோ கேட்க ஆரம்பித்தவன், அதற்கு மேல் கேட்க முடியாமல் திணறினான்.

     “என்ன வேண்டும், உங்களுக்கு?” என்றாள் அவள், அவன் திணறினாலும் தான் திணறாமல் நின்று!

     “ஒன்றும் வேண்டாம்; உண்மையாகவே நீங்கள் பெண்ணா? இல்லை...”

     அவ்வளவு தான்: “எப்படித் தோன்றுகிறது, உங்களுக்கு? பெண்ணாகத் தோன்றுகிறதா? இல்லை, பேயாகத் தோன்றுகிறதா?” என்று இரைந்தாள், அவள்!

     “கோபித்துக் கொள்ளாதீர்கள்! நேற்றிரவு உங்களைப் போலவே ஒருத்தி...”

     “என்ன, மேலும் மேலும் உளறிக் கொண்டே இருக்கிறீர்கள்? ‘உங்களைப் போலவே’ என்பதற்கும், ‘ஒருத்தி’ என்பதற்கும் உள்ள வித்தியாசம் கூடவா தெரியவில்லை, உங்களுக்கு?”

     “மன்னிக்க வேண்டும். உங்களுக்கு மட்டும் மரியாதை கொடுத்தால் போதும் என்று நினைத்தேன் நான்; நீங்களோ உங்களைப் போலவே உள்ள இன்னொருத்திக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்கிறீர்கள்...!”

     அவன் முடிக்கவில்லை; அதற்குள், “வெறுமனே மன்னிக்க வேண்டும் என்று சொன்னால் போதுமாடா, கன்னத்திலும் போட்டுக் கொள்!” என்று அவனுக்குப் பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது. மோகன் திரும்பிப் பார்த்தான்; மணி வந்து கொண்டிருந்தான்.

     ‘இந்தச் சமயத்தில்தானா இவன் வந்துத் தொலைய வேண்டும்?’ என்று நினைத்த மோகன், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், “ஏண்டா, மணி! இவரைத் தெரியுமா, உனக்கு?” என்று சம்பந்தமில்லாமல் கேட்டு வைத்து, அப்போதைய நிலைமையை எப்படியாவது சமாளிக்கப் பார்த்தான்!

     அவனா அதற்கெல்லாம் விட்டுக் கொடுப்பவன்? - “எனக்கு அவரைத் தெரியவும் தெரியாது; தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் கிடையாது!” என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டுமாகச் சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டான்!

     ‘அவள் மூக்கை உடைத்தாள், இவன் இடுப்பை ஒடிக்கிறானே, பாவி!’ என்று உள்ளூறத் திட்டிக் கொண்டே அவன் மறுபடியும் அந்தக் கனவுக் கன்னியை நோக்கித் திரும்பிய போது, அவள் இருந்த இடத்தில் அவளைக் காணோம்! - அதற்குள் எங்கே போயிருப்பாள்? - முகத்தில் கேள்விக் குறியுடன் அவன் தன் அலுவலகத்தை மூன்று முறை சுற்றி வந்த போது, ‘பியூன் பிச்சையா’வுக்கு என்ன தோன்றிற்றோ என்னமோ, “ஏதாவது ஒரு கோயிலைச் சுற்றினாலும் போகிற வழிக்குப் புண்ணியமுண்டு; ஆபீசை ஏன் சார், அனாவசியமாகச் சுற்றுகிறீர்கள்?” என்றான்.

     அதுதான் சமயமென்று நினைத்த மோகன், “அதிருக்கட்டும்; கையில் கறுப்புக் கண்ணாடியுடன் இங்கே ஒருத்தி நின்று கொண்டு இருந்தாளே, அவளை நீ பார்த்தாயா?” என்று அவனையே விசாரித்தான், அதன் விளைவைப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று!

     “பாமா அம்மாவைச் சொல்கிறீர்களா? பரந்தாமன் ஐயா அறையிலே இருக்கிறார்கள்!” என்றான் அவன், தனக்கு எதிர்த்தாற் போலிருந்த ஓர் அதிகாரியின் அறையைச் சுட்டிக் காட்டி.

     “அவர்கள் ஏன் இங்கே வந்திருக்கிறார்கள் என்று தெரியுமா, உனக்கு?”

     “தெரியுமே, இனிமேல் அவர்கள் இங்கே தான் வேலை பார்க்கப் போகிறார்கள்!”

     “உண்மையாகவா?”

     “ஆமாம் சார், ஆமாம்.”

     அவ்வளவுதான்; ‘ஐயோடா!’ என்று கத்திக் கொண்டே ‘அரை டிக்கெட்டு’களைப் போல அவனைச் சுற்றிச் சுற்றி வந்து ‘கும்மாளம்’ அடிக்க வேண்டும் போல் தோன்றிற்று அவனுக்கு. இருந்தாலும் அதை ஒருவாறு அடக்கிக் கொண்டு, தன் இடத்துக்குப் போய் உட்கார்ந்தான்.

     சிறிது நேரத்துக்கெல்லாம் மல்லிகைப் பூ மணம் ‘கட்டியம்’ கூற, அந்தக் ‘கட்டியத்’தைத் தொடர்ந்து, “இங்கே வரும் பெண்களைப் பார்த்தால் வேலைக்கு வருபவர்களைப் போலவா தோன்றுகிறது, கல்யாணத்துக்கு வருபவர்களைப் போல் அல்லவா தோன்றுகிறது” என்று யாரோ ஒரு ‘கிழட்டுப் பயல்’ உரிய வதைக் கடந்துவிட்ட உளைச்சலால் முணுமுணுக்க, அவள் வந்தாள்! - நிமிர்ந்த நன்னடை, நேர்க் கொண்ட பார்வையோடு வந்த அவளை, ‘கிடக்கிறான் அவன்! உன்னுடைய மல்லிகைப் பூ மணம் அவனுக்குப் பிடிக்காவிட்டால் என்ன? எனக்குப் பிடிக்கிறது, நீ வா!’ என்று வரவேற்க வேண்டும் போல் தோன்றிற்று மோகனுக்கு. ஆனால் வரவேற்கவில்லை - எப்படி முடியும், ஏற்கெனவே கண்ட சூடே இன்னும் ஆறாமலிருக்கும் போது?

     இந்த நிலையில் ஆசை முன்னால் தள்ள, அச்சம் பின்னால் இழுக்க, அவன் தவியாய்த் தவித்துக் கொண்டு இருந்த போது, உதவி அதிகாரி வந்தார்; அவன் கொஞ்சமும் எதிர்பாராத விதமாக அவனுக்கு எதிர்த்தாற் போல் அவளை உட்கார வைத்து விட்டுச் சென்றார்!

     ‘பழம் நழுவிப் பாலில் விழுந்து விட்டது; இனி வாயில் விழ வேண்டியதுதான் பாக்கி!’ என்று நினைத்த அவன், கொஞ்சம் துணிந்து தன் பார்வையை அவள் மேல் செலுத்திப் பார்த்தான்; ஆனால் அவளோ, தன்னுடைய பார்வையை அவன் மேல் செலுத்தவேயில்லை!

     என்ன ஏமாற்றம், என்ன ஏமாற்றம்! - எப்படியும் அவளுடைய கவனத்தைக் கவர்ந்தே விடுவது என்ற உறுதி பூண்டு அவன் கனைத்துப் பார்த்தான்; இருமிப் பார்த்தான்; தும்மிப் பார்த்தான் - ஊஹும்!

     அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை, அவனால். “காது மந்தமாயிருக்குமோ?” என்றான், அவள் காதில் விழும்படி. “புத்தி மந்தமாயிருக்குமோ!” என்றாள் அவள், அவன் காதில் விழும்படி!

     இப்படி முதல் நாள் போயிற்று; இரண்டாம் நாள்...

     அவள் கவனத்தைக் கவர்வது எப்படி என்று அவன் யோசித்துக் கொண்டு இருந்த போது, அவளுக்குப் பின்னாலிருந்த ஒரு ஜன்னல் அவனுடைய பார்வையில் பட்டது. உடனே ஒரு காகிதத்தை எடுத்துப் பந்து போல் சுருட்டி, அதை ஜன்னல் வழியாக விட்டெறிவது போல் அவள் மேல் விட்டெறிந்து விட்டு, “மன்னிக்க வேண்டும்; குறி தவறி விட்டது!” என்றான் அவன், அசட்டுச் சிரிப்புடன்.

     “இல்லை, குறி தவறாமல் தான் விழுந்திருக்கிறது!” என்றாள் அவள், குனிந்த தலையுடன்!

     இதை அவள் எந்தத் ‘தொனி’யில் சொன்னாள் என்பதைப் புரிந்து கொள்ள அவன் முயன்று கொண்டிருந்த போது, கன்னத்தில் விழுந்தது ‘பளார்’ என்று ஓர் அறை! - கலங்கினானா, காதல் மன்னன்? இல்லை; இன்னொரு கன்னத்தையும் காட்டினான், ஏசுநாதரைப் பின்பற்றி! - ஆனால் அவளோ அவனை ஏசுநாதராக்கவில்லை; அதற்குப் பதிலாக, “சீ, நீயும் ஒரு மனிதனா!” என்று ‘புகழ் மாரி’ பொழிந்து விட்டுப் போய் விட்டாள்!

     இப்படி இரண்டாவது நாள் போயிற்று; மூன்றாவது நாள்...

     “உங்களுக்கு ஏதாவது தெரியவில்லை யென்றால் என்னைக் கேளுங்கள், சொல்கிறேன்!” என்றான் அவன், ‘முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்’ என்ற மூதுரையில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து.

     இரங்கினாளா, காதல்கன்னி, இல்லை; “எனக்கு ஏதாவது தெரியவில்லையென்றால், அது உங்களுக்கும் தெரியாமல் தான் இருக்கும்!” என்றாள் சுடச்சுட.

     அவ்வளவுதான்; அசைக்க முடியாத நம்பிக்கை சற்றே அசைய, “ஏது, ரொம்ப அதிகப் பிரசங்கியா யிருப்பாய் போலிருக்கிறதே?” என்றான் அவனும் சுடச்சுட.

     “யார் அதிகப் பிரசங்கி? என்னை விட உங்களுக்கு அதிகமாகத் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் அதிகப்பிரசங்கியா, நான் அதிகப்பிரசங்கியா?” என்றாள் அவள், தான் அமர்ந்திருந்த நாற்காலியை அப்பால் இழுத்து விட்டு விட்டு எழுந்து.

     ‘இதென்னடா வம்பாய்ப் போச்சு! இவள் எழுந்து நிற்கும் வேகத்தைப் பார்த்தால் அந்த நாற்காலியையே தூக்கித் தன் தலையிலே போட்டாலும் போட்டு விடுவாள் போலிருக்கிறதே?” என்று பயந்த மோகன், தானும் அவளைத் தொடர்ந்து எழுந்து, மெல்ல அங்கிருந்து நழுவப் பார்த்தான்.

     அப்போது, “போடுகிற சண்டையையெல்லாம் இப்போதே போட்டுவிடுங்கள்; கல்யாணத்துக்குப் பிறகு சண்டை வேண்டாம்!” என்று யாரோ சொல்வது அவர்கள் காதில் விழுந்தது. இருவரும் திரும்பிப் பார்த்தனர். பியூன் பிச்சையா சிரித்துக் கொண்டிருந்தான்!