உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
24. ஆசை அலைகள் மீனாட்சியம்மாளையும் சொக்கலிங்கனாரையும் முதல் தடவையாகப் பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த மோகனின் உள்ளத்தில் ஒரு புது நம்பிக்கை பிறந்தது. ஆம், அவனுடைய பழைய நம்பிக்கை சற்றே கலகலத்திருந்த சமயம் அது! அதாவது, என்று தன் கனவிலே வந்தக் கன்னி கேவலம் ஒரு சமையற்காரியின் தங்கை என்று அவனுக்குத் தெரிந்ததோ, அன்றே அவனுடைய நம்பிக்கை ஆட்டம் கண்டுவிட்டது. ஆனால், அதை அவன் பாமாவிடம் சொல்லவில்லை; சொல்லி, அவள் காதலையும் கனவாக்கிவிட அவன் விரும்பவில்லை. இந்த உலகத்தில் எல்லாவற்றையும் கடந்து நிற்கும் ஏதாவது ஒன்று உண்டு என்றால், அது காதல்தான் என்பதை அவன் அறிந்தே இருந்தான். ஆயினும், எதைக் கடந்து நின்றாலும் தன் அப்பாவைக் கடந்து நிற்க முடியுமா, தன்னால்? - அதுதான் சந்தேகமாயிருந்தது அவனுக்கு. இத்தனைக்கும் அன்றிருந்த கோழையல்ல அவன் இப்போது - வீரன்; பாமாவின் பண்பட்ட காதலால் நெஞ்சில் உரமும், நேர்மையில் திறனும் பெற்றுவிட்ட வீரன்! அந்த வீரத்தையும் மிஞ்சி நின்றது, கடமை என்ற ஒரு கட்டுப்பாடு. அந்தக் கடமைக்கும் கட்டுப்பாட்டுக்கும் தன் தாயார் உரியவள்தான் என்பதில் அவனுக்குச் சந்தேகமில்லை; ஆனால், தந்தை உரியவர்தானா? - அதுவும் சந்தேகமாய்த்தான் இருந்தது அவனுக்கு. காரணம், மேல் வர்க்கத்தாரைப் போல் வாழ நினைத்து மானத்தையும் மரியாதையையும் கூடப் பணயமாக வைத்து விடுவதில்லையா, மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த சிலர். அவர்களில் ஒருவராக அவரும் இருந்ததுதான்! அதனாலேயே பதவியில் இருந்தபோதுக் கூட அவர் நாணயமாக வாழவில்லை. நாணயமாக வாழவில்லையென்றால், அவருக்கு இருந்த ஆசைகள் அவரை நாணயமாக வாழ விடவில்லை! - இல்லாவிட்டால் அவர்கள் சொந்தப் பங்களாவில் வாசம் செய்கிறார்கள் என்பதற்காக இவரும் வாடகைப் பங்களாவில் வாசம் செய்து, நூறும் இருநூறுமாக வாடகை கொட்டிக் கொடுத்திருக்க மாட்டார்; அவர்கள் சொந்தக் காரில் போகிறார்கள் என்பதற்காக இவரும் வாடகைக் காரிலாவது சவாரி செய்ய வேண்டுமென்று நினைத்து, போக்குவரத்துச் செலவைக் கூட்டிக் கொண்டிருக்க மாட்டார்; அவர்கள் எடுத்ததற்கெல்லாம் வேலைக்காரர்கள் வைத்துக் கொள்கிறார்கள் என்பதற்காக, இவரும் எடுத்ததற்கெல்லாம் வேலைக்காரர்களை வைத்துக் கொண்டு, சம்பளத்தோடு சாப்பாடும் போட்டுக் கொண்டு இருந்திருக்க மாட்டார்; அவர்கள் அடிக்கடி உடை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதற்காக, இவரும் அடிக்கடி உடை மாற்றி அனாவசியமாகச் சலவைச் செலவை அதிகப்படுத்திக் கொண்டிருந்திருக்க மாட்டார்; அவர்கள் வைர மோதிரம் அணிகிறார்கள் என்பதற்காக இவரும் கடன் வாங்கியாவது வைர மோதிரம் அணிந்திருக்க மாட்டார்; அவர்கள் தங்களுடைய குழந்தைகளைக் ‘கான்வெண்ட்’டில் படிக்க வைக்கிறார்கள் என்பதற்காக, இவரும் தன் குழந்தைகளைக் ‘கான்வெண்ட்’டில் படிக்க வைத்து, அவர்களுக்கென்று மாதச் சம்பளத்தில் ஓர் ரிக்ஷாக்காரனையும் அமர்த்தியிருக்க மாட்டார்; அவர்கள் ‘அல்சேஷன்’ நாய் வளர்க்கிறார்கள் என்பதற்காக இவரும் ஓர் ‘அல்சேஷன்’ நாயை வளர்த்து, அதற்கென்று ஒரு குடும்பத்தையே உருவாக்கியிருக்க மாட்டார்! - இப்படியாக அவர் எல்லா வகையிலும் மேல் வர்க்கத்தாரைப் பின்பற்றப் போய், அதனால் வரவுக்கு மேல் செலவு செய்து, அந்தச் செலவைச் சரிகட்டுவதற்காக ஒரு கையால் லஞ்சம் வாங்கினால் போதாதென்று இரு கைகளாலும் லஞ்சம் வாங்கி, அந்த லஞ்சம் வாங்க முடியாத நிலைக்கு வந்ததும், முன்னாள் திருடர்களுக்கெல்லாம் முன்னோடியாயிருந்து உதவி, அந்த உதவியால் தான் பெற்ற பயனைக் கொண்டே தனக்கென்று ஒரு தனி வீடு வேண்டும் என்ற தன் முதல் லட்சியத்தை முதலில் அடைந்தவர் அவர்! அத்தகையவரைப் பற்றி அம்மாவுக்குத் தெரியாமல் இருக்க முடியுமா? - தெரியத்தான் தெரிந்தது. எனினும் அவரை அவளால் ஒன்றும் செய்யமுடியவில்லை, ‘கடவுளே, என் கணவருக்கு நல்ல புத்தியைக் கொடு!’ என்று அவ்வப்போதுக் கடவுளை வேண்டிக் கொள்வதைத் தவிர! அப்படியும் ஒரு முறை அவள் இதற்காக அவருடன் பிணங்கிப் பார்த்தாளாம்; அதற்கு அவர் இணங்கிப் போகாமல் அவள் சம்மதம் இல்லாமலேயே அவளை அவளுடைய பிறந்தகத்துக்கு அனுப்பி வைத்துவிட்டாராம். அதன் பலனை அக்கம் பக்கத்தாரால் வேண்டிய மட்டும் அனுபவித்த பிறகு, அவருடைய சம்மதம் இல்லாமலேயே அவள் திரும்பி வந்து அவருடன் சேர்ந்து கொண்டு விட்டாளாம்! இந்த அழகான வாழ்க்கையில் தன்னையும் தன் தங்கையையும் எப்படியோ பெற்று வளர்த்துவிட்ட அவளைத் தன் வழிக்குக் கொண்டு வருவதில் அவ்வளவு சிரமம் இருப்பதாகத் தோன்றவில்லை அவனுக்கு. மிஞ்சிப் போனால், ‘இதோ, நான் போய் தண்டவாளத்தின் மேல் தலை வைத்துப் படுத்துவிடுகிறேன்!’ என்று ஒரு மிரட்டு மிரட்டினால் போதும்; ‘ஐயோ, வேண்டாண்டா! நீ அந்தப் பாமாவையே கல்யாணம் செய்துக் கொள்!’ என்று அவள் சொல்லிவிடுவாள்! - ஆனால் அப்பா? - ‘இருட்டில் தண்டவாளம் தெரியாமல் போய்விடப் போகிறது, எதற்கும் டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு போ’ என்றல்லவா சொல்வார்? - அதை நினைக்கத்தான் என்னவோ போலிருந்தது அவனுக்கு. ஆனால், அதற்காகத் தன் தந்தையை ஒரேயடியாக எதிர்த்து நிற்கவும் அவன் தயாராயில்லை. ஏனெனில், அவருடைய தவறான நடத்தைக்குக் காரணம் அவர் மட்டுமல்ல; அவரைத் தன் அங்கமாகக் கொண்ட சமூக அமைப்பும் அதற்கு ஓரளவுக் காரணம் என்பதை அவன் அறிந்திருந்தான். அவரைப் பொறுத்தவரை அவர் பாமாவை விரும்பினாலும் விரும்புவாரேத் தவிர, அவளுடைய அக்காவை ஒருநாளும் விரும்ப மாட்டார். அப்படி ஒருத்தி இருக்கிறாள் என்று அவருக்குத் தெரிந்தாலே போதும், ‘போச்சு, போச்சு! என் மானம் போச்சு, மரியாதை போச்சு!’ என்று குதியாய்க் குதிக்க ஆரம்பித்து விடுவார். உண்மையான மானம், உண்மையான மரியாதை எங்கே இருக்கிறது, எதில் இருக்கிறது என்பதை அறியாமல்; அறிந்தும் அதைப் பொருட்படுத்தாமல்! வெளிச்சமென்றால் அது உள்ளேயும் இருக்க வேண்டும் வெளியேயும் இருக்க வேண்டும். அப்பாவைப் போன்றவர்கள் என்னடாவென்றால் உள்ளே இருள் படர்ந்தாலும் பரவாயில்லை, வெளியே வெளிச்சம் இருக்கட்டும் என்றல்லவா சொல்கிறார்கள்? அதற்கேற்றாற்போல், ‘ஆசையை அடக்கு, ஆசையை அடக்கு!’ என்று அல்லும் பகலும் அனுவரதமும் மக்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார்களே, அந்த மகான்களுக்குக் கூட ஆசை வேண்டியிருக்கிறது, வெளிச்சம் போட; பல்லக்கு வேண்டியிருக்கிறது, வெளிச்சம் போட; பரிவாரமும் வேண்டியிருக்கிறது, வெளிச்சம் போட! அவர்கள்தான் என்ன செய்வார்கள், பாவம்! - அத்தனை வெளிச்சத்தோடு வந்து சொன்னால்தான், அவர்கள் சொல்வதை மக்கள் கடைப் பிடிக்காவிட்டாலும், காது கொடுத்தாவது கேட்கிறோம் என்கிறார்கள்! இதிலிருந்து என்னத் தெரிகிறது? - ‘உள்ளே இருட்டாயிருந்தாலும் பரவாயில்லை; வெளியே வெளிச்சம் போடுங்கள்’ வெளிச்சம் போட்டு எங்களை மயக்குங்கள்; அதற்காகும் செலவை நாங்கள் கன்னத்தில் போட்டுக் கொண்டு வேண்டுமானாலும் கொடுக்கிறோம்!’ என்று மக்களே சொல்லாமல் சொல்கிறார்கள் என்றுத் தெரியவில்லையா? - அந்த வெளிச்சத்தைத்தான் அப்பாவும் விரும்புகிறார்; அந்த வெளிச்சத்தைக் கொண்டுதான், அவரும் தனக்கு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை மயக்குகிறார்! இந்த நிலையில் தன்னுடைய காதல் நிறைவேற வேண்டுமானால், பாமா தனக்காக ஒரு பொய், ஒரே ஒரு பொய் அவசியம் சொல்லத்தான் வேண்டும் - அதாவது, தனக்கு அக்கா என்று ஒருத்தி இல்லவே இல்லை என்று அவள் அடித்துச் சொல்லிவிட வேண்டும்; அத்துடன், மீனாட்சியம்மாளும், சொக்கலிங்கனாரும்தான் தன்னுடைய தாயும் தந்தையும் என்று அவள் சாதித்துவிட வேண்டும். நல்ல வேளையாக, அவர்களும் அதை ஒப்புக் கொள்ளக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள். அப்புறம் என்ன, அப்பா எதிர்பார்க்கும் பங்களா, கார், பட்டம், பதவி எல்லாம் மானம் மரியாதையை இழக்காமலே கிடைத்துவிடுகிறது அவருக்கு; பாமாவும் கிடைத்து விடுகிறாள் தனக்கு! ஆனால், அக்கா என்ற பாசத்தை விட்டு அந்தப் பொய்யை அவள் சொல்வாளா? அல்லது, அந்தப் பாசத்துக்காகக் காதல் என்ற நேசத்தையே அவள் கை கழுவி விடுவாளா? - அதுதான் புரியவில்லை அவனுக்கு. ஆயினும் ஒரு நம்பிக்கை. அவள் தனக்காக அந்தப் பொய்யை அவசியம் சொல்வாள் என்ற ஒரு புது நம்பிக்கையுடன் அன்றிரவு அவன் தன் வீட்டை அடைந்தபோது, மணி ஒன்பதுக்கு மேல் இருக்கும். “என்னதான் விடுமுறை விட்டாலும் இப்படியா? நேரத்தோடு வீட்டுக்கு வர வேண்டாமா?” என்றாள் வாசலில் நின்று கொண்டிருந்த அவன் தாயார். “மணி ஒன்பதுதானேம்மா, ஆகிறது?” என்றான் அவன், ஸ்கூட்டரைக் கொண்டு போய் உள்ளே நிறுத்தி. “வீட்டில் இருந்தால் ஏழு மணிக்கே பசிக்க ஆரம்பித்து விடும் உனக்கு; வெளியே போனால் ஒன்பது மணிக்குக் கூடப் பசிக்கவில்லை போலிருக்கிறது!” என்றாள் அவள், தெருக் கதவை சாத்தித் தாளிட்டுவிட்டு. “கொள்ளைப் பசி; கொண்டு வா, சோற்றை!” என்று சொல்லிக்கொண்டே அவன் குழாயடியை நோக்கி நடக்க, ‘அப்பாவும் மகளும் இன்னும் எப்போதுதான் வருவார்களோ?’ என்று தனக்குள் அலுத்துக் கொண்டே அடுக்களையை நோக்கி நடந்தாள் அவள். சாப்பிடும்போதே நித்திராதேவியின் வசப்பட்டு விட்ட மோகன், சாப்பிட்டு முடிந்ததும் தன் அறைக்குச் சென்றான், படுக்க. அப்போது அருணாவைப் பற்றிய நினைவு ஏனோ வந்தது அவனுக்கு. ‘அதற்குள் தூங்கிவிட்டானா, என்ன?’ என்று எண்ணிக்கொண்டே அவளுடைய அறையை எட்டிப் பார்த்தான்; காலியாயிருந்தது. “அருணா இன்னும் வரவில்லையா, அம்மா?” என்றான் அவன் போகிற போக்கில். “இல்லையேடா!” என்றாள் அவள். ‘இல்லையாவது, ஆறு மணிக்கே வீட்டுக்கு வருவதாகச் சொல்லிவிட்டு வந்தாளே?’ என்று சொல்வதற்காக வாய் எடுத்தான் அவன்; அதற்குள் அவளைத் தான் சினிமாவில் பார்த்தது அம்மாவுக்குத் தெரியக்கூடாது என்றுத் தோன்றவே, “பஸ் இன்னும் வந்து சேரவில்லைப் போலிருக்கிறது!” என்றான் அவன், தனக்குள் மட்டும் ‘இந்நேரத்தில் அவள் எங்கே போயிருப்பாள்?’ என்று யோசித்துக் கொண்டே. அப்போது தெருக்கதவை யாரோ தடதடவென்று தட்டும் சத்தம் கேட்கவே, “அதோ வந்துவிட்டாள் போல் இருக்கிறது!” என்றான் அவன், தன் தாயாரிடம். “அவளோ, அவள் அப்பாவோ?” என்று சொல்லிக் கொண்டே சென்று திறந்தாள், அவன் தாயார். காதலும் கல்யாணமும் : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
|