உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
25. “மழியாதை தெழியாத கழுதை!” வந்தது ஆபத்சகாயமல்ல; அருணாதான்! - வாசலில் முன்னும் பின்னும் பார்த்துக்கொண்டே பீதி நிறைந்த கண்களுடன் நின்ற அவளைக் கண்டதும், “என்னம்மா, என்ன?” என்று திடுக்கிட்டுக் கேட்டாள், அன்னபூரணி. “ஒன்றுமில்லை, அம்மா! என் உடம்பு என்னவோ போல் இருக்கிறது; நான் போய்ப் படுத்துக் கொள்கிறேன்!” என்று சொல்லிக்கொண்டே, அவள் தன் அறைக்குள் சென்று உடனே படுத்துக்கொண்டும் விட்டாள்! “ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு படுத்துக் கொள்ளேண்டி!” என்றாள் அவள் தாயார், அவளைத் தொடர்ந்து. “எனக்கு ஒன்றும் வேண்டாம்; பசிக்கவில்லை!” என்றாள் அவள். தன் பங்குக்குத் தானும் ஏதாவது சொல்லி வைக்க வேண்டுமே என்பதற்காக, “அவளை ஏன் அம்மா, அனாவசியமாகத் தொந்தரவு செய்கிறாய்? அவ்வளவு தூரம் வெய்யிலில் போய் அலைந்துவிட்டு வந்திருக்கிறாளே, உடம்பு எப்படி இருக்கிறதோ, என்னமோ!” என்றான் மோகன், தன் படுக்கையை விரித்துப் படுத்துக்கொண்டே. “அப்படி என்ன உல்லாசப் பிரயாணம் வேண்டியிருக்கிறதாம், இப்படி உடம்பைக் கெடுத்துக்கொண்டு!” என்று சொல்லிக்கொண்டே அன்னபூரணியம்மாள் வெளியே வந்தாள். அப்போது அருணா விம்மும் சத்தம் கேட்கவே, “என்னம்மா, ஏன் அழுகிறாய்?” என்று பதறிக்கொண்டே திரும்பினாள் அவள். அவ்வளவுதான்; அவளுடைய விம்மல் வெடித்து அழுகை பீறிட்டுக்கொண்டு வந்துவிட்டது. அதை அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டே, “ஏன் அழுகிறேன் என்றா கேட்கிறாய்? போயும் போயும் இந்த வீட்டில் வந்து நான் பெண்ணாய்ப் பிறந்தேனே, அதற்காகத்தான் அம்மா அழுகிறேன்!” என்றாள் அவள். “ஏன், என்ன நடந்தது?” “அதை நினைக்க மனம் கூசுகிறது; சொல்ல வாய் கூசுகிறது!” “பரவாயில்லை, சொல்? வேறு யாரிடம் சொல்லப் போகிறாய், உன் அம்மாவிடம்தானே சொல்லப் போகிறாய்?” “அதைச் சொல்வதற்கு முன்னால் உன்னை நான் ஒன்று கேட்கலாமா, அம்மா? கேட்டால் கோபித்துக் கொள்ள மாட்டாயே?” “நான் ஒன்றும் கோபித்துக் கொள்ள மாட்டேன்; சும்மாக் கேள்?” “அப்பாவை உனக்குப் பிடிக்கிறதா, அம்மா?” “இது என்ன கேள்வி, பிடிக்காமலா உன்னையும் உன் அண்ணனையும் பெற்று வளர்த்திருக்கிறேன்?” “போம்மா, இன்னும் நீ எனக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? பிள்ளைப் பெற்று வளர்ப்பதாலேயே ஒரு கணவன் தன் மனைவிக்குப் பிடித்தவனாகிவிட மாட்டான், அம்மா!” “நல்லப் பெண்தான், போ! நீங்கள் இருக்கும்போது அவர் எனக்குப் பிடித்தால் என்ன, பிடிக்காவிட்டால் என்ன?” “இதிலிருந்தே தெரிகிறதே, உன்னை நீயே ஏமாற்றிக் கொண்டுதான் இத்தனை நாட்களாக நீ இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்று!” “அதற்கு என்ன, இப்போது?” “ஒன்றுமில்லை; உனக்கு அப்பா எப்படியோ, அது எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை அவர் எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை!” “இப்படி ஒரு பெண் சொல்ல இன்றுதான் கேட்கிறேன், நான்!” “இப்படி ஒரு அப்பா இருக்க இன்றுதான் பார்க்கிறேன், நான்!” “நல்ல வேடிக்கைதான், போ! அவர் அப்படி என்ன செய்தார் உன்னை?” “அந்த வெட்கக்கேட்டை ஏன் கேட்கிறாய்? அவர் ஒரு கிழட்டுப் பயலை என்னுடன் விளையாட விட்டு வேடிக்கைப் பார்க்கிறார், அம்மா!” “அந்தக் கிழட்டுக் குரங்கு கொஞ்சம் பசையுள்ள குரங்காயிருந்திருக்கும்!” “ஆமாம் அம்மா, அது கொஞ்சம் பசையுள்ளக் குரங்குதான்!” “இப்போது அவர் அங்கேதான் இருக்கிறாரா?” “ஆமாம்; அந்தக் கிழட்டுக் குரங்குடன் அங்கிருக்கும் சினிமாத் தியேட்டரில் உட்கார்ந்து கொண்டு ‘ஞானஸ்நானம்’ செய்துக் கொண்டிருக்கிறார்!” அவ்வளவுதான்; “அடப் பாவி, மறுபடியும் ஆரம்பித்து விட்டாயா, அதை?” என்று தன்னை மறந்துக் கத்திவிட்டாள் அன்னபூரணி. “சரிதான், இதற்கு முன்னாலேயே அந்தப் பழக்கமும் உண்டா, அவருக்கு?” என்றாள் அருணா. அப்போது வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கவே, “அதோ, அவரும் வந்துவிட்டார்!” என்று சொல்லிக் கொண்டே, அன்னபூரணி வெளியே வந்தாள். ஆனால், வந்தது அவள் எதிர்பார்த்த வாடகைக் கார் அல்ல! சொந்தக் கார். அந்தக் காருக்கு உரியவர் போல் தோன்றிய ஒருவர் உள்ளே உட்கார்ந்தபடியே அதன் கதவைத் திறந்துவிட, ஆபத்சகாயம் தட்டுத் தடுமாறிக் கீழே இறங்கி, “குழ்ட் நைழ்ட்!” என்றுக் குழறினார்; பதிலுக்கு அவரும் குழறினார், “குழ்ட் நைழ்ட்!” என்று. “வரட்டுமா?” என்றார் இவர்; “வாருங்கள், நான் சொன்னதெல்லாம் ஞாபகமிருக்கட்டும்!” என்றார் அவர். “நீங்கள் ஒன்று; உங்களுடன் சம்பந்தம் செய்துக் கொள்ள நான் கொடுத்து வைத்திருக்க வேண்டாமா?” என்றார் இவர்; “நீர் கொடுத்து வைத்திருந்தால் போதுமா, ஐயா? உம்முடைய மகள் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே!” என்றார் அவர். “அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம்; நான் கவனித்துக் கொள்கிறேன், அவளை!” என்றார் இவர். “அது தெரியாதா, எனக்கு? அந்தக் காலத்தில் நீர் எத்தனை குற்றவாளிகளை நிரபராதிகளாக்கியிருக்கிறீர்; எத்தனை நிரபராதிகளைக் குற்றவாளிகளாக்கியிருக்கிறீர்! அப்படிப்பட்ட உமக்கு நான் சொல்ல என்ன இருக்கிறது?” என்றார் அவர். “ஏதோ உங்களைப் போன்ற பெரிய மனிதர்களுக்காக என்னால் முடிந்ததைச் செய்தேன்; அவ்வளவுதானே?” என்றார் இவர், தன்னடக்கத்துடன்; “உம்மைப் போன்றவர்கள் விருப்பம்போல் வாழமுடியாதே, இந்த உலகத்தில்!” என்றார் அவர், நன்றியுணர்ச்சியுடன். “ழைட்டோ!” என்றார் இவர், அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல்; அதைப் புரிந்து கொண்டு, “ழைட்டோ!” என்றார் அவரும், காரைக் கிளப்பிக் கொண்டே. அதற்குள் என்ன நினைத்தாரோ என்னமோ, “ஓய், ஓய்! எதை முக்கியமாகக் கேட்க வேண்டுமோ, அதை மறந்து விட்டேனே, நான்? உம்முடைய மகள் வீட்டுக்கு வந்து விட்டாளா என்றுக் கேளும்!” என்றார் அவர், கிளப்பியக் காரை நிறுத்தி. “வராமல் எங்கே போயிருக்கப் போகிறாள்? நீங்கள் போய் வாருங்கள்!” என்றார் இவர். “நீர் கேட்டுத்தான் பாருமே?” என்றார் அவர். “எழ்ன கவலை. எழ்ன கவலை! எனக்கில்லாத கவலையல்லவா உங்களுக்கு இழுக்கிறது?” என்று குழறி வழிந்து கொண்டே இவர் திரும்பி, “அழ்னபூழ்ணி, அழ்னபூழ்ணி!” என்றார், உள்ளே தலையை நீட்டி. “என்னவாம், அழ்னபூழ்ணிக்கு?” என்றாள் அவள் எரிச்சலுடன். “அழுணா வழ்ந்துட்டாளா?” “எழ்ல்லாம் வழ்ந்துட்டாள்!” “வழ்ந்துட்டாளா, கொழ்ஞ்சங்கூட மழியாதை தெழியாத கழுதை!” என்று சொல்லிக் கொண்டே, இவர் மறுபடியும் திரும்பி, “வழ்ந்துட்டாளாம், வழ்ந்துட்டாளாம்!” என்றார் ஒரு முறைக்கு இரு முறையாக. “ரொழ்ம்ப சழ்ந்தோழம்; டாழ்டா!” என்று அவரும் குழறி வழிந்து கொண்டே கையை ஆட்டிவிட்டுச் செல்ல, “டாழ்டா!” என்று இவரும் கையை ஆட்டிவிட்டு உள்ளே வந்தார். “யார் அந்த புண்ணியாத்மா? அவர் தான் உங்களுக்கு இந்த ‘ஞானஸ்நான’த்தைச் செய்துவைத்திருப்பவரா?” என்று கேட்டாள் அன்னபூரணி. “அவர்தாண்டி, சுகானந்தம்! இன்று மட்டுமா அவர் எனக்கு ‘ஞானஸ்நானம்’ செய்து வைத்திருக்கிறார்? இதற்கு முன்னால் எத்தனையோ தடவை செய்து வைத்திருக்கிறாரேடி! அப்போதெல்லாம் கேட்காத நீ...” “அப்போது உங்களையும் என்னையும் தவிர இந்த வீட்டில் வேறு யாரும் இல்லை; ‘கல்லென்றாலும் கணவன் புல்லென்றாலும் புருஷன்’ என்று பேசாமல் இருந்தேன். இப்போது வயதுக்கு வந்தப் பிள்ளையும் பெண்ணும் வீட்டில் இருக்கும்போது...” “இருந்தால் என்னடி? அவர்களைக் கட்டிக்கொண்டு நீ அழு; உன்னைக் கட்டிக்கொண்டு அவர்கள் அழட்டும்! எனக்கு வேண்டாம், இந்த வாழ்க்கை; எனக்கு வேண்டாம், இந்த வீடு! வாசலைத் தாண்டினால் வீதியில் நிற்க வைத்து வேடிக்கை பார்க்கும் - இது நம் வீடு! ஒரு நாளைப் போல எந்த விதமான மாறுதலும் இல்லாமல் பொழுது விடிந்தால் காபி; மத்தியானம் சாப்பாடு; சாயந்திரம் சிற்றுண்டி; இரவு சாப்பாடு; அப்புறம் தூக்கம் - இது நம் வாழ்க்கை! சீ, இதுவும் ஒரு வாழ்க்கையா? இதுவும் ஒரு வீடா? - போய்ப் பார்! சுகானந்தத்தின் வீட்டை! போய்ப்பார், சுகானந்தத்தின் வாழ்க்கையை! எவ்வளவு பெரிய இடம், என்ன ரம்மியமான வாழ்க்கை! பொழுது போனால் ஊரில் இருக்கிற பெரிய மனிதர்கள் அத்தனை பேரும் அங்கேதாண்டிக் கூடுகிறார்கள்! அவர்களுக்கெல்லாம் அங்கே என்ன உபசாரம் நடக்கிறது, என்ன உபசாரம் நடக்கிறது! அந்தப் பெரிய மனிதர்களோடு பெரிய மனிதர்களாக நாமும் கொஞ்ச நேரமாவது இருந்து விட்டு வருவோமே என்று நான் இவளை அழைத்துக் கொண்டு அங்கே போனால், இவள் சொல்லாமல் கொள்ளாமலா ஓடி வருவது? எங்கே அவள்?” என்று அருணாவின் அறையை நோக்கி அவர் பாய்ந்ததுதான் தாமதம், அவள் கதவுகள் இரண்டையும் ஏககாலத்தில் அடித்துச் சாத்தி, உள்ளே ‘டக்’கென்று தாளிட்டுக் கொண்டுவிட்டாள்! காதலும் கல்யாணமும் : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
|