26. ‘நாலும் தெரிந்த நாற்பத்தெட்டு!’

     “ஐயோ, என்ன காரியம் செய்துவிட்டாயடி?” - அலறினாள் அன்னபூரணி, மூடிய கதவின்மேல் மோதிக் கொண்டு விழுந்து, பேச்சுமில்லாமல் மூச்சுமில்லாமல் கிடந்த தன் கணவரைப் பார்த்து.

     “நான் என்னம்மா, செய்தேன்?” - ஒன்றும் புரியாமல் கதவைத் திறந்தாள் அருணா.

     இந்தக் கலவரத்தில் விழித்துக் கொண்ட மோகன் எழுந்து வெளியே வந்து, “என்னம்மா, அப்பாவுக்கு என்ன?” என்றான் பதட்டத்துடன்.

     “ஒன்றுமில்லை; பெரிய மனிதர்களோடு பெரிய மனிதராக இவரும் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வந்திருக்கிறார் அல்லவா? அதன் பலனைத்தான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார்!” என்றாள் அருணா, பேச்சு நின்றாலும் மூச்சு நிற்கவில்லை என்பதைத் தெரிந்துகொண்டு!

     அதற்குள் சீமைச் சாராயத்தின் நெடி மூக்கைத் துளைக்கவே, “இந்தப் பழக்கம் வேறு உண்டா, இவருக்கு/” என்று சொல்லிக்கொண்டே கைக்குட்டையைத் தேடினான் மோகன், அந்த நெடியிலிருந்து, ஓரளவாவது தப்ப!

     ‘எவ்வளவோ சொன்னேன், இதெல்லாம் உங்களோடு போகட்டும்; குழந்தைகளுக்குத் தெரியவேண்டாமென்று - கேட்டாரா? இப்போது பார், இவர் பெற்றக் குழந்தைகளே இவர் மேல் காரித் துப்புகின்றன!’ என்று தனக்குள் எண்ணிப் பொருமிய அன்னபூரணி, “இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லையே, எனக்கு!” என்று கையைப் பிசைந்தாள்.

     “யாருக்குத் தெரியும், அந்தச் சுகானந்தத்துக்குத்தான் தெரியும்!” என்றாள் அருணா, வீட்டின் முகட்டை நோக்கி.

     “வேடிக்கைக்கும் விளையாட்டுக்கும் இதுவா நேரம்? நீங்கள் இவரைத் தூக்கிக் கொண்டுப் போய்க் கட்டிலின் மேல் கிடத்துங்கள்; நான் போய் டாக்டரை அழைத்துக் கொண்டு வருகிறேன்!” என்று மோகன் திரும்பினான்.

     “படு புத்திசாலிதான், போ! டாக்டர் எதற்கு, போலீசுக்குப் போன் செய்வதற்கா?” என்றாள் அருணா.

     “அதுவும் கவனிக்க வேண்டிய விஷயந்தான்; தெரிந்த டாக்டர்கள் யாரையாவது...”

     அவன் முடிக்கவில்லை; அதற்குள், “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். அவரை அப்படியே தூங்க விடுங்கள்; பொழுது விடிந்ததும் எல்லாம் சரியாய்ப் போய்விடும்!” என்று யாரோ சொல்வது அவர்கள் காதில் விழுந்தது - எல்லோரும் ஏக காலத்தில் திரும்பிப் பார்த்தனர்; வாயிற்படியின் மேல் ஒரு காலும், சைக்கிள் பெடலின் மேல் இன்னொரு காலுமாக நின்றுக் கொண்டிருந்த மணி, “நான் வரட்டுமா?” என்றான், அதற்கு மேல் அங்கே நிற்க விரும்பாமல்.

     “எங்கே வந்தாய், எங்கே போகிறாய்?” என்றான் மோகன்.

     “நான் வருவதற்கும் போவதற்கும் ஏதாவது காரண காரியம் உண்டா என்ன? அப்படியே இருந்தாலும் நானே அவற்றைப் பற்றி இனிமேல்தான் யோசித்துத் தெரிந்துக் கொள்ள வேண்டும்; நான் வருகிறேன்!” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் மணி.

     அவன் தலை மறைந்ததும், “உலகத்தின் ஒன்பதாவது அதிசயம் இது!” என்றான் மோகன்.

     அந்த ‘அதிசயம்’ தன்னைப் பார்த்துவிட்டுப் போவதற்காகத்தான் இந்த நேரத்தில் இங்கே வந்திருக்க வேண்டும் என்பதை ஊகித்தறிந்துக் கொண்ட அருணா, “இருக்கட்டும் அண்ணா, அது இந்த உலகத்தின் ஒன்பதாவது அதிசயமாகவே இருக்கட்டும்!” என்றாள், எதையோ நினைத்துப் பெருமூச்சு விட்டபடி.

     “இவருடைய விஷயத்திலும் அந்த அதிசயம் சொல்வதுதான் சரியாயிருக்க வேண்டும். நீ இவருடைய காலைப் பிடி; தூக்கிக் கொண்டு போய்க் கட்டிலில் கிடத்திவிடுவோம்!” என்றான் மோகன், தன் அப்பாவின் தலைக்கு கீழே கையைக் கொடுத்தபடி.

     “அவனுக்கும் இந்தப் பழக்கம் உண்டா, என்ன?” என்றாள் அன்னபூரணி, வியப்புடன்.

     “இல்லை, இந்தப் பழக்கம் உள்ளவர்களில் பலரை அவன் தன் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறான்; அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் தன்னால் முடிந்தவரை அவன் செய்திருக்கிறான்!” என்றான் மோகன்.

     அதற்குள் அருணா குனிந்து ஆபத்சகாயத்தின் கால்களைப் பற்ற, குப்பென்று வீசிய சாராய நெடி அவளுக்குக் குமட்டலை உண்டாக்க, “உனக்கு வேண்டாம் அந்த வேலை, நீ இப்படி வா!” என்று அவள் தாயார் அவளை இழுத்து அப்பால் விட்டு விட்டுத் தானே அவருடைய காலைப் பிடிக்க, இருவருமாகத் தூக்கிக் கொண்டு போய் அவரைக் கட்டிலின் மேல் கிடத்தினார்கள்.

     மறுநாள் காலை மணி சொன்னது உண்மையாயிற்று; எப்பொழுதும் போல் ஆபத்சகாயம் எழுந்து உட்கார்ந்தார். தலையை லேசாக வழிப்பது போலிருந்தது; ‘இரவு குடித்ததன் எதிரொலி இது!’ என்பதை அனுபவப்பூர்வமாகப் புரிந்து கொண்ட அவர், ‘இப்பொழுது கொஞ்சம் விஸ்கி இருந்தால் இந்தத் தலைவலி இருந்த இடம் தெரியாமல் பறந்துவிடும்; இந்தக் காலை நேரமும் எப்பொழுதும்போல் அழுது வடியும் நேரமாயில்லாமல் இனிய நேரமாகிவிடும்! - எங்கே போவது விஸ்கிக்கு? பதவியில் இருந்தபோது வேண்டுமானால் எத்தனை புட்டி தேவையாயிருந்தாலும் ஓசியிலேயே கிடைக்கும்; இப்பொழுதுதான் எவனும் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேன் என்கிறானே! எப்பொழுதாவது தன்னைத் தேடிக்கொண்டு வரும் ஓரிரு திருட்டுப் பயல்கள் கூட விஸ்கியும் பிராந்தியுமா திருடிக்கொண்டு வருகிறார்கள்? அவற்றால் ஓரளவு பணம்தான் கிடைக்கிறது? இதற்காகச் சுகானந்தத்தைத் தேடிக் கொண்டு செல்வதென்பதும் இப்போது முடியாத காரியம்; அப்படியே தேடிக்கொண்டுச் சென்றாலும் அவர் கிடைக்கமாட்டார்; கிடைத்தாலும் நேற்று வாய்த்த அந்த ‘மாலை நேரம்’ இன்று வாய்த்து விடாது! - என்னக் கஷ்டம், என்னக் கஷ்டம்! இப்படியும் ஒரு பிறவி இருக்க வேண்டுமா, இந்த உலகத்தில்? பிறந்தால் சுகானந்தத்தைப் போல் பிறக்க வேண்டும்; வாழ்ந்தால் சுகானந்தத்தைப் போல் வாழ வேண்டும். இல்லாவிட்டால்...’

     இந்த இடத்தில் அவர் தன் ‘இதய வேட்கை’யைச் சற்றே நிறுத்தி, எண்ணத்திலாவது ஒரு முறை செத்து வைக்கலாமே என்று துணிந்த போது, காபியும் கையுமாக வந்து நின்றாள் அன்னபூரணி.

     “காபி, காபி, காபி! - வேறு என்ன கிடைக்கிறது இந்த வீட்டில், குடிப்பதற்கு?” என்றார் அவர் சலிப்புடன்.

     “டீ போட்டுக் கொண்டு வரட்டுமா?” என்றாள் அவள், அவருடைய வயிற்றெரிச்சலை மேலும் கொட்டிக் கொள்ளும் நோக்கத்துடன்.

     “உன்னுடைய காபியையும் டீயையும் கொண்டுபோய் உடைப்பிலே போடு! போ, எனக்கு எதிரில் நிற்காதே, போ!” என்று எரிந்து விழுந்தார் அவர்.

     “எங்கே போவதாம்!” என்று பரிந்து கேட்டாள் அவள்.

     “எங்கேயாவது தொலைந்து போ!”

     “போகாவிட்டால்?”

     “கொன்றுவிடுவேன், கொன்று!”

     “அந்த வார்த்தைதான் நானும் உங்களிடம் கேட்கவேண்டுமென்று இருந்தேன்; அதை நான் கேட்காமலே நீங்கள் கொடுக்க முன் வருவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி!” என்று சொல்லிக் கொண்டே கையிலிருந்த காபியை டீபாயின் மேல் வைத்துவிட்டுத் தன் கழுத்தை அவருக்கு முன்னால் நீட்டினாள் அவள்!

     அதற்கு மேல் தன்னுடையக் கோபத்தை எப்படிக் காட்டுவதென்று தெரியவில்லை அவருக்கு; “இதில் என்ன குறைச்சல், இந்த நாட்டுப் பெண்களுக்கு!” என்றுக் கருவிக் கொண்டே எழுந்து வெளியே வந்தார்.

     கூடத்தில் உட்கார்ந்து ஏதோ படித்துக் கொண்டிருந்த அருணா, அவரைக் கண்டதும் தன் கையிலிருந்தப் புத்தகத்தை மூடிக் கீழே வைத்துவிட்டு எழுந்து வாசலை நோக்கி நடந்தாள்!

     “எங்கேப் போகிறாய்?” - அதட்டினார் ஆபத்சகாயம்.

     அவள் அஞ்சவில்லை; “நான் எங்கே போகிறேன்?” என்றாள், அவரை நோக்கித் திரும்பாமலே.

     “எங்கேயும் போகாததற்கு அப்படித் திரும்பிக் கொண்டிருப்பானேன்?”

     “வெட்கப்படுகிறேன், உங்களைப் பார்க்க! வேதனைப்படுகிறேன், அதை உங்களிடம் சொல்ல!”

     “இருக்காதா, சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவந்தால்?”

     “அதற்காக நான் வெட்கப்படவில்லை...”

     “வேறு எதற்காக வெட்கப்படுகிறாயாம்?”

     “இப்படியும் ஓர் அப்பா வந்து வாய்த்திருக்கிறாரே என்பதற்காக!”

     இதைச் சொல்லி அவள் வாய் மூடவில்லை; “என்னச் சொன்னாய்!” என்று உறுமினார் அவர்.

     மோகன் குறுக்கிட்டு, “அவளுடன் உங்களுக்கு என்னப்பா, பேச்சு! நீங்கள் போய்க் காபியைக் குடியுங்கள்!” என்றான் அவரைச் சமாதானம் செய்யும் நோக்கத்துடன்.

     அவரோ, “இவளை இப்படியே விட்டுக்கொண்டு போகக் கூடாது, மோகன்! நேற்றுத்தான் அந்தப் பெரிய மனிதரிடம் இவள் மரியாதை தெரியாமல் நடந்து கொண்டாள் என்றால், இன்று என்னிடமுமல்லவா மரியாதை தெரியாமல் நடந்து கொள்கிறாள்?” என்றார் அப்பொழுதும் விடாமல்.

     அவளும் விட்டுக் கொடுக்கவில்லை; “முதலில் மரியாதை என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்; அதற்குப் பிறகு மரியாதையைப் பற்றிப் பேசுங்கள்!” என்றாள் சுடச் சுட.

     அவ்வளவுதான்; அவள் கன்னத்தில் ‘பளார்’ என்று ஓர் அறை விழுந்தது. அதைத் தொடர்ந்து, “அவ்வளவு தூரத்துக்கு வந்துவிட்டாயா, நீ? ஜாக்கிரதை! யாரிடம் என்ன பேசுகிறோம் என்று தெரிந்து பேசு; தெரியாமல் பேசாதே! பேசினால் இந்த வீட்டில் எனக்கு நீ மகளாகவும் இருக்க முடியாது; உனக்கு நான் அப்பாவாகவும் இருக்க முடியாது!” என்று ஒரு துள்ளுத் துள்ளி நின்றார் அவர்.

     “ரொம்ப அழகாய்த்தான் இருக்கிறது! அடித்து அடக்கக் கூடிய வயதா அவளுக்கு, இப்போது? வாருங்கள் இப்படி!” என்று அவருடையக் கையைப் பற்றி இழுத்தாள் அன்னபூரணி.

     “அடித்து அடக்காமல் சர்க்கஸ் வித்தை காட்டியா அடக்குவார்கள், அவளை? அதுதான் முடியாது, என்னால்! ஆடிக் கறக்கிற மாட்டை நான் ஆடித்தான் கறப்பேன்; பாடிக் கறக்கிற மாட்டை நான் பாடித்தான் கறப்பேன்!” என்றார் அவர்.

     மோகன் சும்மா இருக்கக் கூடாதா? - “என்ன செய்தால் என்ன, அப்பா? கறக்கிற மாடுதான் கறக்கும்; கறக்காத மாடு ஒரு நாளும் கறக்காது!” என்றான் மெல்ல.

     “என்னடா, நீ கூடப் பொடி வைத்துப் பேசுகிறாய்!” என்றார் அவர், அவன் பக்கம் திரும்பி.

     “நானா பேசுகிறேன், நீங்கள் அப்படிப் பேச வைக்கிறீர்கள், என்னை! பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காக நாம் சிரிக்க இடம் கொடுத்துவிடக் கூடாது, அப்பா!” என்றான் அவனும் பொறுமை இழந்து.

     “யார் இப்போது சிரிக்க இடம் கொடுக்கிறார்கள்?”

     “நீங்கள்தான்! ஏற்கெனவே ஓரிரு திருட்டுப் பயல்கள் இங்கே வந்து போவதே எனக்கு என்னவோ போலிருக்கிறது; அது போதாதென்று நேற்று யாரோ ஒரு கிழட்டுப் பயலை இவளுடன் விளையாட விட்டு நீங்கள் வேடிக்கை பார்த்தீர்களாமே, இதெல்லாம் நன்றாயிருக்கிறதா உங்களுக்கு?”

     “யார் சொன்னது, அவரைக் கிழட்டுப் பய்ல் என்று? நாலும் தெரிந்த நாற்பத்தெட்டு வயது வாலிபரடா, அவர். அவருக்குத்தான் இவளை நான் கல்யாணம் செய்து கொடுக்கப் போகிறேனாக்கும்?”

     அதுவரை தனது கன்னத்தைத் தேய்த்தபடி விசும்பிக் கொண்டிருந்த அருணா, “எத்தனையாவது மனைவியாக என்று கேள், அண்ணா!” என்றாள் அவன் பக்கம் திரும்பி.

     அவன் கேட்பதற்குள் அவரே குறுக்கிட்டு, “ஆயிரம் துணைவிகள் இருந்தாலும் அவருக்கு இருப்பது ஒரே ஒரு மனைவிதான்! அவளையும் இவளுக்காக அவர் விவாகரத்து செய்துவிடுவதாகச் சொல்லிவிட்டார்! அப்புறம் என்ன? நமக்கு வேண்டியது அவருடைய சம்பந்தம், அந்தச் சம்பந்தத்தின் மூலமாக இந்தத் தரித்திரம் பிடித்த வாழ்க்கையிலிருந்து நமக்கு விடுதலை! அவ்வளவுதானே?” என்றார், அலட்சியமாக.

     “குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு என்பார்கள்; உங்கள் பேச்சு பொழுது விடிந்தாலும் போகாது போலிருக்கிறது!” என்றாள் அன்னபூரணி, அடுத்த அறை தன் கன்னத்தில் விழுந்தாலும் விழட்டும் என்றுத் துணிந்து!

     “யாரைக் குடிகாரன் என்கிறாய்? நாலணாவுக்கு கள் வாங்கி நடுத்தெருவில் உட்கார்ந்து குடிக்கிறானே, அவனைப் போய்க் குடிகாரன் என்று சொல்! நாங்களெல்லாம் ஒரு ராஜகுடும்பம் எப்படிக் குடிக்குமோ, அப்படிக் குடிக்கிறோமாக்கும்? நேற்றிரவு மட்டும் அவர் தன் சிநேகிதர்களுக்காக எவ்வளவு செலவழித்திருப்பார், தெரியுமா? ரூபாய் ஆயிரத்துக்கு மேல் இருக்கும்டி, ரூபாய் ஆயிரத்துக்குமேல் இருக்கும்! - ஆஹா அவருடன் மட்டும் நாம் சம்பந்தம் செய்து கொண்டு விட்டால்? - கவர்னர் வந்து என்னுடைய கையைப் பிடித்துக் குலுக்குவார்; கவர்னரின் மனைவி வந்து உன்னுடைய கையைப் பிடித்துக் குலுக்குவாள் - அதற்குப் பிறகு கேட்க வேண்டுமா? குறைந்த பட்சம் ஒரு மந்திரியின் மகளையாவது பார்த்து இவனுக்கும் கல்யாணம் செய்து வைத்துவிடலாம்; அந்த மந்திரியின் தயவைக் கொண்டு எதற்காவது பெர்மிட், லைசென்ஸ், கோட்டா என்று வாங்கி, லட்சம் லட்சமாகப் பணத்தைக் குவிக்கலாம்...”

     அவர் முடிக்கவில்லை; அதற்குள், “அம்மா இல்லையா?” என்று யாரோ வந்து கேட்கவே, நடுவில் தன்னை மறந்து மூடிக்கொண்ட கண்களை அவர் திறந்தார் - அடுத்த வீட்டுக்காரி வந்து அவருக்கு எதிர்த்தாற்போல் அடக்கமே உருவாய் நின்று கொண்டிருந்தாள்!

     அப்போதுதான் அவளைத் தவிர அங்கே வேறு யாரும் இல்லை என்பதும், எல்லோரும் தன்னுடையப் போக்கில் தன்னைப் பேச விட்டுவிட்டு, அவரவர் வேலையை அவரவர் பார்க்கப் போய்விட்டார்கள் என்பதும் அவருக்குத் தெரிந்தது! - அதற்கு மேல் சும்மா இருக்க முடியுமா, அவரால்? “அன்னபூரணி, அன்னபூரணி!” என்றார் ஆத்திரத்துடன்.

     “கொஞ்சம் பொறுங்கள்; சோற்றை வடித்துவிட்டு வந்துவிடுகிறேன்!” என்றாள் அவள், அடுக்களையிலிருந்து.

     “அதோ இருக்கிறாள்; போய்ப்பார்” என்று அடுத்த வீட்டுக்காரியிடம் மட்டும் தன் ஆத்திரத்தைக் காட்டாமல் சொல்லிவிட்டு, “எங்கே, அந்த அருணா?” என்று உறுமினார் அவர்.

     அப்போதும் அடுக்களையை விட்டு வெளியே வராமல், “கல்லூரிக்கு நேரமாகவில்லையா, குளிக்கப் போயிருக்கிறாள்!” என்றாள் அன்னபூரணி.

     “மோகன்?”

     “அவனுக்கும் ஆபீசுக்கு நேரமாகிவிட்டதாம்; முடி வெட்டிக்கொண்டு வரப் போயிருக்கிறான்!”

     அவ்வளவுதான்; அதற்குமேல் அவளை ஒன்றும் கேட்க விரும்பாமல், “மரியாதைத் தெரியாத கழுதைகள், மரியாதைத் தெரியாத கழுதைகள்!” என்ற பல்லவியைத் தொடர்ந்து பாடிக் கொண்டே, ஆறிப்போன காபியை எடுத்துக் குடித்தார் அவர், ஓர் ஆறுதலுக்காக!