உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
35. ஜன்னலுக்கு வெளியே! ‘அவர் என்ன ஆகியிருப்பார்?’ இப்படி ஒரு கேள்வியைத் தனக்குத் தானே போட்டுக் கொண்டு அன்றிரவு முழுவதும் பாமா தன் வீட்டுக்குள்ளேயே நடந்து பார்த்தாள்; நின்று பார்த்தாள்; படுத்துப் பார்த்தாள்; எழுந்து உட்கார்ந்தும் பார்த்தாள் - அக்காவின் லேசான குறட்டை ஒலிதான் அதற்குப் பதிலாகக் கிடைத்ததே தவிர, வேறொரு பதிலும் கிடைக்கவில்லை! அவளுக்குத் தெரியும், அந்த மாதிரி வழிக்கெல்லாம் அவர் போகக் கூடியவர் அல்லவென்று - பிறருக்குத் தெரியுமா, அது? அதிலும், யாரோ ஒரு புண்ணியவான் செய்த சூழ்ச்சி அது என்று வேறு சொல்கிறார்கள் - உலகத்தில் எப்போதுமே முதல் வெற்றி சூழ்ச்சிக்குத்தானே கிடைக்கிறது? - அந்த வெற்றி அதற்கும் கிடைத்தால் தன்னுடைய கதி?... அவருடைய பிரிவால் தனக்குப் பால் கசக்காது; ஏனெனில் தான் பாலே சாப்பிடுவதில்லை. படுக்கையும் நோகாது; ஏனெனில் தனக்குப் படுக்கை என்று ஒன்று இல்லவேயில்லை. எப்போதும் உறுத்தும் கோரைப் பாய்தான் அப்போதும் உறுத்தும்! ஆனால்... ஆனால் என்ன? முதல் வெற்றி சூழ்ச்சிக்குக் கிடைத்தாலும், இரண்டாவது வெற்றி நிச்சயம் தர்மத்துக்குக் கிடைக்கும்; அந்த வெற்றியும் இன்றிரவே கிடைத்து விட்டால்? எனக்கு நிம்மதி! இல்லாவிட்டால்... ஐயாவுக்கும், அம்மாவுக்கும் அது தெரியலாம்; அவர்கள் அதை நம்பி, ‘போயும் போயும் அவனைக் கட்டிக் கொண்டா மாரடித்தாள், இவள்!’ என்று நினைக்கலாம். அதற்குப் பிறகு இருக்கவே இருக்கிறாள் அக்கா, ஒன்றும் இல்லாததற்கெல்லாம் ஒப்பாரி வைக்க! இந்தச் சங்கடங்களிலிருந்தெல்லாம் தான் தப்ப வேண்டுமானால் இன்றிரவு அவர் காதும் காதும் வைத்தாற்போல் விடுதலையாகி வீடு வந்து சேர்ந்துவிட வேண்டும் - சேர்ந்திருப்பாரா? சேர்ந்து விடுவாரா? யாருக்குத் தெரியும்? இங்கே வந்து இப்படித் தவித்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும் பேசாமல் மணி சாருடனேச் சென்றிருந்தால், விஷயத்தை உடனே தெரிந்து கொண்டு வீடு திரும்பியிருக்கலாம். அவர் என்னமோத் தன்னை அழைக்கத்தான் அழைத்தார்; தான்தான்... எங்கே அழைத்தார், அதற்குள்தான் யாரோ ஒருவன் அந்தச் சேதியை எடுத்துக் கொண்டு அவரைத் தேடி வந்து விட்டானே? அவன் வந்ததும், ‘நீங்கள் போங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொல்லி, அவர்தான் தன்னை அனுப்பிவிட்டாரே?... சட்டம் எல்லாருக்கும் பொது என்கிறார்கள்; அப்படியிருக்கும்போது முன்னாள் போலீஸ் அதிகாரியின் மகன் என்பதற்காக அது வளைந்து கொடுக்குமா? - அப்படியே வளைந்துக் கொடுத்தாலும் அவர் அதை விரும்பலாம்; மணி சார் விரும்புவாரா? - பணம் எல்லாருக்கும் பொதுவாயில்லாத வரை, சட்டம் எல்லாருக்கும் பொதுவாயிருக்க முடியாது என்று சொல்பவராயிற்றே, அவர்! அது என்னமோ உண்மைதான்; ஆனாலும் இவருக்கு வந்த ஆபத்து தவறிப்போய் அவருடைய தலையில் விழுந்திருக்கும் போது... எந்தக் குறிக்கோளும் கொஞ்சம் குறி தவறத்தானே செய்யும்? ஆகவே, ‘எப்படியாவது வெளியே வந்தால் போதும்!’ என்று தான் இவரும் நினைப்பார்; அவரும் நினைப்பார்! - எப்படியோ விஷயம் வில்லங்கமின்றி முடிந்தால் நல்லது! இவ்வாறு எண்ணிக்கொண்டே அவள் ஜன்னலோரமாக வந்து நின்றாள். வானத்தில் முளைத்த விடிவெள்ளி, ‘இன்னுமா நீ தூங்கவில்லை?’ என்பதுபோல் அவளை எட்டிப் பார்த்தது; சில்லென்றடித்த பனிக்காற்று, ‘எந்த விதமான செலவும் இல்லாமல் உன்னுடைய அறையை நான் ஏர்-கண்டிஷன் செய்து வைத்திருக்கும்போதுக் கூடவா உனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை’ என்பது போல் அவளை ஒரு தழுவுத் தழுவித் தன் கை வரிசையைக் காட்டிற்று. கண்ணைக் கிறங்க வைத்த அந்தக் காலை இளங்காற்றிலே, ‘கொஞ்சம் தூங்கித் தான் பார்ப்போமே?’ என்று அவள் திரும்பினாள். அப்போது ‘களுக்’கென்ற சிரிப்பொலி அவள் காதில் விழுந்தது. சுற்று முற்றும் பார்த்தாள்; யாரையும் காணவில்லை. அக்காதான் சிரித்துவிட்டு ஏதும் அறியாதவள் போல் இருக்கிறாளோ என்னமோ என்று எண்ணி, “அக்கா, அக்கா! உன்னைத்தான் அக்கா!” என்று ஒரு முறைக்கு இருமுறையாகக் குரல் கொடுத்துப் பார்த்தாள்; ‘கர்ர்ர், கர்ர்ர்’என்ற சத்தத்தைத் தவிர அவளிடமிருந்து வேறு எந்தச் சத்தமும் வரவில்லை. ‘வெறும் மனப் பிரமையோ, என்னமோ!’ என்று அவள் மறுபடியும் திரும்பி, மேலே ஓர் அடி எடுத்து வைத்தாள்; மீண்டும் ‘களுக்’கென்றச் சிரிப்பொலி அவள் காதில் விழுந்தது. அதைத் தொடர்ந்து, “என்னடி! உணவும் செல்லவில்லை, உறக்கமும் கொள்ளவில்லையா?” என்ற மீனாட்சியம்மாளின் குரலும் கேட்கவே, “நீங்கள்தானா! யாரோ, என்னமோ என்று நான் பயந்தே போனேன்!” என்று சொல்லிக் கொண்டே அவள் முன்னால் எடுத்து வைத்த காலைப் பின்னால் எடுத்து வைத்தாள். தன் அறையின் ஜன்னலுக்குப் பின்னால் நின்று அவளைக் கவனித்துக் கொண்டிருந்த மீனாட்சியம்மாள், “வானத்தில் நிலவைக்கூடக் காணோமேடி, உன்னுடைய முகம் ஏன் இப்படி வாட்டமுற்றிருக்கிறது?” என்றாள் மேலும் தொடர்ந்து. “போங்களம்மா, நீங்கள் ஒண்ணு!” என்று சிணுங்கிக் கொண்டே ஜன்னல் கதவைச் சாத்தினாள் பாமா. “திறடி, திற! ஆளில்லாமல் கதவைச் சாத்தி என்ன பிரயோசனம்? திறடி, திற!” என்றாள் மீனாட்சியம்மாள், அப்போதும் அவளை விடாமல். பாமா திறக்கவில்லை! மறுநாள் பொழுது விடிந்ததும் முதல் நாள் இரவு பாமா தூக்கமில்லாமல் தவித்ததைப் பற்றியே அந்த வீட்டில் எல்லோரும் பேசினார்கள். அவர்களுடைய பேச்சில் தான் மட்டும் கலந்து கொள்ளாமல் இருப்பானேன் என்று கலந்து கொண்ட சொக்கலிங்கனார், “கல்யாணம் ஆகும் வரை அப்படித்தான் இருக்கும்; இல்லையா, பாமா?” என்று பாமாவையே கேட்டு வைத்தார். “அப்படித்தான் இருக்கும், போங்களேன்!” என்று அவர் முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்டு, அதற்குமேல் அங்கே இருக்க விரும்பாமல் ஆபீசுக்குப் போய்விட்டாள்! அங்கே... அன்றும் காணவில்லை, மோகனை! - இப்போதுதான் அவளையும் அறியாமல் அவள் உள்ளத்தில் கவலை படர்ந்தது; அதன் அறிகுறியாக அவள் முகத்திலும் கருமை நிறைந்தது. என்ன ஆகியிருப்பார், அவர்? இந்த மணி சார் கூடத் தன்னைத் தேடி வந்து ஒன்றும் சொல்லக் காணோமே! நாமாவது அவரைத் தேடிச் சென்று விசாரித்துப் பார்ப்போமா? இந்த எண்ணத்துடன் அவள் மணியின் அறையை நோக்கிச் சென்ற போது, பரந்தாமனின் அறையிலிருந்து அவன் வெளியே வந்து கொண்டிருந்தான். “என்ன மோகன்தானே? இன்று வரமாட்டான், ஆபீசுக்கு; நான் வரட்டுமா?” என்றான் அவன், வெட்டு ஒன்று துண்டு இரண்டுமாக. இது என்னவோ போலிருந்தது அவளுக்கு - இன்று ஏன் இவரிடம் இந்த மாறுதல்? எதற்காக இவர் இன்று இவ்வளவு சீக்கிரம் என்னிடமிருந்து விடை பெற்றுக் கொள்ள நினைக்கிறார்? - ஒன்றும் புரியவில்லை அவளுக்கு; இருந்தாலும் அதை வெளியேக் காட்டிக் கொள்ளாமல், “ஏன் என்று தெரிந்துக் கொள்ளக் கூடாதா, நான்?” என்றாள் அவனைத் தொடர்ந்து. “அதை என்னிடமிருந்து தெரிந்து கொள்வதை விட அவனிடமிருந்தே தெரிந்து கொள்வது நல்லது!” “அப்படியானால்...?” அவள் தயங்கினாள்; “என்ன?” என்று அவன் தூண்டினான். அவள் தன் குரலைக் கொஞ்சம் தாழ்த்தி, “அவர் இன்னும் அங்கேயேதான் இருக்கிறாரா?” என்றாள், அவன் காதோடு காதாக. “ஓ, அதைக் கேட்கிறீர்களா நீங்கள்! அதெல்லாம் பழையக் கதையாகிவிட்டதே? அவன் நேற்றே அங்கிருந்து வந்துவிட்டான்!” “அப்பாடா! இப்போதுதான் போன உயிர் திரும்பி வந்தது போலிருக்கிறது, எனக்கு!” என்றாள் பாமா. “உங்களுக்கு மட்டுமென்ன? எனக்கும் நேற்று அப்படித்தான் இருந்தது. ஆனால் அவன் அப்பாவுக்கு அது ஒன்றும் அவ்வளவுப் பெரிய விஷயமாக இல்லை. அவர் நினைத்தால் குற்றவாளியை நிரபராதியாக்க முடியும் போலிருக்கிறது. நிரபராதியைக் குற்றவாளியாக்க முடியும் போலிருக்கிறது! நான் நினைக்கிறேன், கடவுள் கூட அவருக்கு அடுத்தபடியாகத்தான் இருக்கவேண்டுமென்று! - சரி, நான் வரட்டுமா?” “இன்னும் ஒரே ஒரு நிமிஷம்; என்றுமில்லாத அவசரம் இன்று மட்டும் ஏன் உங்களுக்கு?” “அதுவா? அதுதான் எனக்கும் தெரியவில்லை! - ஒருவேளை என்னைச் சுற்றியிருக்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் - ஏன், இந்த உலகத்திலிருந்துங்கூட நான் அவசர அவசரமாகப் போயிவிட நினைக்கிறேனோ, என்னமோ?” “நீங்கள் நினைப்பது உங்களுக்கே தெரியவில்லையா?” “தெரியவில்லை, இப்போது!” “அதற்குக் காரணம் விரக்தியாயிருக்கலாம்; அந்த விரக்திக்குக் காரணம்?” “எதைச் சொல்லுவேன், யாரைச் சொல்லுவேன்? நானாகவே இருக்கலாம்!” “அப்படித்தான் நானும் நினைக்கிறேன்! ஏனெனில், பல தொல்லைகளுக்கு உங்களை நீங்களே காரணமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்!” “அது நான் வந்த வழி! - சில சமயம் எதைக் கண்டும் ஓடக்கூடாது என்று தோன்றுகிறது; சில சமயம் ஓடிவிட்டால் தேவலை என்று தோன்றுகிறது எனக்கு! - இந்த இரண்டுங் கெட்டான் நிலையில்தான் நேற்றும் இருந்தேன்; இன்றும் இருக்கிறேன்!” “இல்லை; இன்று கொஞ்சம் வேறுபட்டிருக்கிறீர்கள்!” அவள் அப்படிச் சொன்னதும், அவன் தன்னைத் தானே ஒரு முறை ஏற இறங்கப் பார்த்துக் கொண்டான்; பார்த்துக் கொண்டே சொன்னான்: “ஆம், இன்று நான் கொஞ்சம் வேறுபட்டுத்தான் இருக்கிறேன்! இல்லாவிட்டால் இன்று மட்டும் தன்னுடன் இருக்கும்படி அவன் அத்தனைக் கெஞ்சுக் கெஞ்சியும் நான் வேலைக்கு வந்திருப்பேனா?” “எவன்?” “ஓ, நானே அகப்பட்டுக்கொண்டு விட்டேனா உங்களிடம்? அவன்தான், உங்கள் காதலன்...” “எதற்காகக் கெஞ்சினார், உங்களை?” “அதுதான் புதிய கதை; அந்தக் கதையைத்தான் என்னிடமிருந்து தெரிந்து கொள்வதை விட அவனிடமிருந்து தெரிந்து கொள்வது நல்லது என்றேன், நான்!” “ஏன், நீங்கள் சொல்லக்கூடாதா அதை?” “மன்னியுங்கள், அதை நான் சொல்வதற்குமில்லை; சொல்லவும் முடியாது!” “சரி, அவரை நான் பார்ப்பதற்காவது...” “ஏற்பாடுதானே, அவசியம் செய்கிறேன்!” “நன்றி; நான் வரட்டுமா?” என்றாள் அவள், இம்முறை அவனை முந்திக் கொண்டு! “அந்தப் பெருமை நமக்கு வேண்டாம்; ஔவை கொடுத்த தென்னை மரத்துக்கே இருக்கட்டும்!” என்றான் அவன். “எந்தப் பெருமை?” “நன்றி காட்டும் பெருமைதான்!” அவள் சிரித்தாள்; அவன் அதை வெறுத்தான்! காதலும் கல்யாணமும் : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
|