உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
38. சங்கமம் விடியுமா? அன்றைய இரவு மட்டுமல்ல, அருணாவின் வாழ்வும் விடியுமா என்ற கவலையோடு, அவளுக்கு அருகிலேயே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்து கொண்டிருந்தார் பரந்தாமன். அவருக்குக் கீழே மண்ணெண்ணெய் அடுப்பு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அதன் உதவியால் அவ்வப்போது கோதுமைத் தவிட்டை வறுப்பதும், வறுத்த தவிட்டை எடுத்து ஒத்தடம் கொடுப்பதுமாக அவருடைய நேரம் கழிந்து கொண்டிருந்தது. என்ன ஒத்தடம் கொடுத்து என்ன பயன்? அவளிடம் எந்தவிதமான மாறுதலும் இல்லை; நிலை குத்தி நின்ற கண்கள் நிலை குத்தி நின்றபடியேதான் இருந்தன. அதுதான் பெரிய சோதனையாயிருந்தது அவருக்கு. எப்படியாவது இவள் பிழைத்துவிட்டால் எல்லாருக்கும் நல்லது; பிழைக்காவிட்டால்?... அந்தப் பழி தன்மேல் விழுந்தாலும் விழுந்துவிடலாம் அல்லவா? அதற்காகத் தான் என்ன செய்ய முடியும், இப்போது? இவளுடைய விருப்பத்துக்கு விரோதமாக இவளைக் கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்துவிட முடியுமா? இல்லை, போலீசாரிடம்தான் ஒப்படைத்துவிட முடியுமா? அப்படியே ஒப்படைத்தால்தான் என்ன? எந்த வம்புக்கு அஞ்சுகிறேனோ, அந்த வம்பு தன்னை விட்டுவிடவா போகிறது? - ஊஹும்! ஒன்று வேண்டுமானால் செய்யலாம் - எந்தக் கடற்கரையில் இவள் ஒதுக்கப்பட்டுக் கிடந்தாளோ, அதே கடற்கரையில் இவளைக் கொண்டு போய்க் கிடத்திவிட்டு வேண்டுமானால் வந்துவிடலாம். ஒரு பொறுப்புள்ள மனிதன் செய்யக்கூடிய காரியமா, அது? சீச்சீ! இந்தச் சமயத்தில் அம்மாவாவது இங்கே இருந்திருக்கலாம்; அதுவும் இல்லை - இரண்டாவது முறையாகப் பெற்றுப் பிழைக்கப் போகும் தன் பெண்ணைப் பார்த்துவிட்டு அவர்கள் எப்போது வரப் போகிறார்களோ, என்னமோ? அதுவரை இவள் இங்கேயா இருந்து கொண்டிருப்பது? பார்ப்பவர்கள் என்ன சொல்வார்கள்? அவர்கள் சொல்வது தன்னைப் பாதிப்பதை விட, இவளையல்லவா அதிகமாகப் பாதிக்கும்? அதற்குத் தான் இடம் கொடுக்கலாமா? கூடாது; கூடவே கூடாது! இவளுடைய உடல்நிலை கொஞ்சம் தேறியதும் இவளைக் கொண்டு போய் இவள் வீட்டில் விட்டுவிட வேண்டும். அப்போதும் இவள் அதற்குச் சம்மதிக்காவிட்டால்?... சம்மதிக்காவிட்டால் என்ன செய்வது, ‘எக்கேடாவது கெட்டுப் போ!’ என்று கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிட வேண்டியதுதான்! இவளுடைய முகத்தைப் பார்த்தால் எந்தப் பாவிக்கும் அப்படிச் செய்ய மனம் வராது போலிருக்கிறதே? அப்படி இருக்கும்போது தனக்கு மட்டும் மனம் வரவா போகிறது? அதைப்பற்றி இப்போது யோசிப்பானேன்? முதல் அவள் உடம்பு தேறட்டும்! இந்தத் தீர்மானத்துடன் ஏதாவது மாறுதல் தோன்றியிருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அவள் முகத்தை ஆயிரத்தோராவது தடவையாக அவர் ஏறிட்டுப் பார்த்தபோது, “பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுப் பாருங்களேன், ஏதாவது பதில் வருகிறதா என்று பார்ப்போம்?” என்றாள் பக்கத்து வீட்டுப் பார்வதி, அவருக்குப் பின்னால் வந்து நின்று. இதைக் கேட்டதும், “இன்னுமா நீங்கள் வீட்டுக்குப் போகவில்லை?” என்று வியப்புடன் கேட்டுக் கொண்டே அவளை நோக்கித் திரும்பினார் பரந்தாமன். “போனேன்! அவர் தான் சொன்னா, ‘அம்மா கூட ஊரில் இல்லையே, நீயாவது இன்னும் கொஞ்ச நேரம் இருந்து பார்த்துவிட்டு வருவதுதானே?’ என்று; வந்தேன்!” என்றாள் அவள். “ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் என்னால் உங்களுக்கு வேறு தொல்லை! என்ன செய்யலாம், தன்னை மறந்து கிடக்கும் ஒரு பெண்ணுக்கு உடை மாற்றி விட வேண்டுமானால் இன்னொரு பெண்ணின் உதவியைத்தான் நாட வேண்டியிருக்கிறது!” என்றார் அவர். “இதில் என்ன தொல்லை, எனக்கு? அந்த மட்டும் ‘ஆபத்துக்குப் பாவமில்லை’ என்று நீங்களே அந்தக் காரியத்தில் இறங்கிவிடாமல் என்னை அழைத்தீர்களே, அதைச் சொல்லுங்கள்!” என்றாள் அவள், வெட்கத்தால் தன் தலையைச் சற்றே தாழ்த்தி. “எந்த நிலையிலும் எவருடைய மானத்துக்கும் பங்கம் வராமல் எவன் காக்கிறானோ, அவன் தானேம்மா மனிதன்!” என்றார் அவர். இந்த சமயத்தில், “எப்படி ஐயா, இருக்கிறது?” என்று கேட்டுக் கொண்டே பார்வதியின் கணவரும் அங்கே வர, “அப்படியேதான் இருக்கிறது!” என்றார் பரந்தாமன், அவருடைய வயதுக்குரிய மரியாதையைத் தரவேண்டுமென்பதற்காகத் தன் இருக்கையை விட்டு எழுந்து நின்று. “அப்படியே இருக்கிறதா! பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுப் பாருமே?” என்றார் அவரும். “அதுதானே தெரியவில்லை, எனக்கு!” “நல்ல ஆளய்யா, நீர்! பெயரைக் கூடத் தெரிந்து கொள்ளாமல் என்ன உதவி செய்ய வேண்டியிருக்கிறது, உதவி?” “உதவிக்கும் பெயருக்கும் என்ன சம்பந்தம்? அப்படி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லையே, எனக்கு!” “ஏன் இல்லை? ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறதோ, அந்தச் சம்பந்தம் அதிலும் இருக்கிறது இந்தக் காலத்தில்! இது கூடத் தெரியாமல் நீர் எதற்குத்தான் பிரம்மச்சாரியாயிருக்கிறீரோ, எனக்குத் தெரியவில்லை!” என்று சொல்லிக் கொண்டே அவர் அருணாவை நெருங்கி, “அம்மா, அம்மா! இங்கே பார், அம்மா?” என்றார் கனிவுடன். அப்போதுதான் சற்றே சலனமுற்ற தன் கண்களால் அவள் அவரை மிரண்டு நோக்கினாள்! “சபாஷ்! நன்றாகப் பார் என்னை, நான் தான் உன் அப்பா!” என்றார் அவர், அவளுக்கு ஆளை அடையாளம் தெரிகிறதா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக. அவ்வளவுதான்; “ஐயோ, அப்பாவா? வேண்டாம், வேண்டாம்!” என்று அலறினாள் அவள். அவர் சிரித்து, “நான் அப்பா இல்லை அம்மா, அண்ணா!” என்றார் மீண்டும். “அண்ணாவா! நீ எப்படி அண்ணா, இங்கே வந்தாய்?” என்றாள் அவள். “தேவலையே, ஆளைத் தெரியாவிட்டாலும் இடத்தைத் தெரிகிறதே? இனிப் பயமில்லை!” என்றார் அவர். அதற்குள் ஆறாய்ப் பெருகிய வியர்வையைத் தன் முந்தானையால் துடைத்துவிட்டு, “தூங்கம்மா, தூங்கு!” என்றாள் பார்வதி. அருணா சற்றே புரண்டு கண்ணை மூடினாள்! “நாங்கள் வருகிறோம்; இனி நீரும் கவலையின்றித் தூங்கலாம்!” என்று விடை பெற்றுக் கொண்டார் பக்கத்து வீட்டுக்காரர், தன் மனைவி பார்வதியுடன். அவர் சொல்லிவிட்டுச் சென்றபடி, பரந்தாமன் தூங்கவில்லை; தன் முயற்சித் தனக்களித்த வெற்றிக் களிப்பில் மீண்டும் அருணாவுக்கு ஒத்தடம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்! அவள் தன் மென்கரத்தால் அவருடைய வன்கரத்தைப் பற்றி, “உங்கள் பெயர்?” என்றாள் மெல்ல. “சொல்ல மாட்டேன்!” என்றார் அவர், புன்னகையுடன். “ஏன், என் மேல் கோபமா?” “இல்லை; உங்களுடைய பெயரை நீங்கள் சொன்னால் தான் என்னுடைய பெயரை நான் சொல்வேன்!” “உங்கள் என்ன வேண்டியிருக்கிறது, உங்கள்! அன்புக்கு உள்ள தடைகளில் அதுவும் ஒன்று என்று உங்களுக்குத் தெரியாதா? எங்கே, ‘உன்னுடைய பெயரை நீ சொன்னால் தான் என்னுடைய பெயரை நான் சொல்வேன்!’ என்று சொல்லுங்கள், பார்ப்போம்?” அவர் அப்படியே சொன்னார்; அவள் புன்னகையுடன், “என் பெயர் அருணா; உங்கள் பெயர்?” என்றாள். “பரந்தாமன்!” என்றார் அவர். “சாட்சாத் பரந்தாமனே வந்தாற் போல்தான் வந்திருக்கிறீர்கள்!” என்று சொல்லிவிட்டு, “உங்கள் பெயரை நான் சொல்வதில் உங்களுக்குக் கோபமில்லையே?” என்றாள் அவள். “இல்லை!” என்றார் அவர். “இந்த வீட்டில் உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை போலிருக்கிறதே, எங்கே சாப்பிடுகிறீர்கள்?” என்றாள் அவள், சுற்று முற்றும் பார்த்துக் கொண்டே. “இங்கேயே தான்; நான் சமைத்துச் சாப்பிடுகிறேன்!” என்றார் அவர். “இன்று சமைத்தீர்களா?” “இல்லை!” என்றார் அவர். “ஐயோ பாவம்! என்னால் பட்டினி வேறு இருக்கிறீர்களா, நீங்கள்?” “அது ஒன்றும் எனக்குப் புதிதல்ல; வாரத்துக்கு ஒரு நாள் பட்டினி இருப்பது என் வழக்கம், நீங்கள் வேண்டுமானால் கொஞ்சம் ‘ஆர்லிக்ஸ்’ சாப்பிடுகிறீர்களா?” “பார்த்தீர்களா, மறுபடியும் ‘நீங்கள்’ என்று ஆரம்பித்து விட்டீர்களே?” “இல்லையில்லை; நீ வேண்டுமானால் கொஞ்சம் ‘ஆர்லிக்ஸ்’ சாப்பிடுகிறாயா?” “கொடுங்கள்; உங்கள் கையால் விஷத்தைக் கொடுத்தாலும் அதை நான் இப்போது மகிழ்ச்சியுடன் சாப்பிடத் தயார்!” என்றாள் அவள். அவர் எழுந்தார்; “அதிசயமான மனிதர்; மணி அண்ணனைப் போல் இவரும் ஓர் அதிசயமான மனிதர்!” என்றாள் அவள். “என்ன, மணி அண்ணனா!” என்றார் அவர், வியப்புடன் திரும்பி. “ஆம்; ஒன்றுக்கு இரண்டு அண்ணன்மார் எனக்கு இருக்கிறார்கள். ஒருவர் பெயர் மோகன்; இன்னொருவர் பெயர் மணி!” என்றாள் அவள். “அடக் கடவுளே! எனக்கு நீ ரொம்பத் தூரத்திலிருப்பதாகவல்லவா நான் நினைத்தேன்? இவ்வளவு அருகில் இருக்கிறாயே?” என்றார் அவர். “ஏன், அவர்களைத் தெரியுமா உங்களுக்கு?” “தெரியும்; என்னுடன் தானே அவர்களும் வேலை பார்க்கிறார்கள்!” என்றார் அவர். “அடப் பாவமே! இப்படியா அகப்பட்டுக் கொள்வேன் நான் உங்களிடம்?” என்றாள் அவள். மறுநாள் காலை சொன்னதுசொன்னபடி டாக்டர் வந்தார்; அருணாவைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, “இனி பயமில்லை, எல்லா அபாயத்தையும் தாண்டி விட்டாள்!” என்று சொல்லிவிட்டுப் போனார். அவருடையத் தலை மறைந்ததும், “அவருக்குத் தெரியாது, இனிமேல்தான் அபாயமெல்லாம் இருக்கிறதென்று!” என்றார் பரந்தாமன், சிரித்துக் கொண்டே. “என்ன அபாயம்?” என்று கேட்டாள் அருணா. “என்னுடையத் தலை மறைந்ததும் நீ கடலை நோக்கி ஓடும் அபாயம்தான்!” என்றார் அவர், சிரித்துக் கொண்டே. “இனி ஓட மாட்டேன்!” என்றாள் அவள், தானும் சிரித்துக் கொண்டே. “ஏன்?” என்று கேட்டார் அவர். “இந்த உலகத்தில் சாகத் தூண்டுபவர்கள் மட்டும் இல்லை; வாழத் தூண்டுபவர்களும் இருக்கிறார்கள் என்ற உண்மை இப்போதுதான் தெரிந்தது, எனக்கு!” என்றாள் அவள்! காதலும் கல்யாணமும் : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
|