40. அடைக்கலம்

     “சாயந்திரம் நீ விரும்பினால் உன்னைக் கொண்டு போய் உன்னுடைய வீட்டில் விட்டு விடுகிறேன்!”

     காலையில் அவர் போகும் போது கடைசியாகச் சொல்லிவிட்டுப் போன இந்த வார்த்தை தன்னுடைய நினைவைச் சுற்றிச் சுற்றி வர, அன்றையப் பொழுது முழுவதையும் கட்டிலிலேயே கழித்துக் கொண்டிருந்தாள் அருணா.

     அவ்வப்போது பார்வதி வருவாள்; அவளுடைய தேவைகளைக் கவனிப்பாள். அத்துடன், அவளுடைய துயரத்தைப் பற்றியும் விசாரிப்பாள்; அந்தத் துயரத்துக்கு ஆறுதலாக ஏதாவது சொல்லிவிட்டும் போவாள்.

     அவள் போனபின், தன்னுடைய உள்ளத்தைப் போலவே வெறிச்சோடிக் கிடக்கும் அந்த வீட்டைப் பார்ப்பாள் அருணா. எவ்வளவுப் பெரிய வீடு! இந்த விசாலமான வீட்டைப் போலவே அவருடைய உள்ளமும் விசாலமாய்த்தான் இருக்கிறது. ஆனால்...

     ஆனால் என்ன? அவ்வளவு பெரிய உள்ளத்தில் தனக்கென்று ஒரு சிறிய இடத்தைக் கூட அவ்வளவு எளிதில் கொடுத்து விடுபவராயில்லையே, அவர்? முதல் நாள் மாலை தான் அவ்வளவு தூரம் மறுத்தும் மறுநாள் காலை ‘சாயந்திரம் நீ விரும்பினால் உன்னைக் கொண்டு போய் உன்னுடைய வீட்டில் விட்டுவிடுகிறேன்’ என்று தானே அவர் சொல்கிறார்!

     சரி, என்னுடைய வீட்டிற்கு நான் போக விரும்பாவிட்டால் அவர் என்ன செய்வார், என்னை? தன்னுடைய வீட்டிலேயே வைத்துக் கொண்டு விடுவாரா? அல்லது கழுத்தைப் பிடித்து தள்ளிவிடுவாரா?

     இதைத்தான் காலையிலேயே கேட்டுத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் நான்; கேட்கவில்லை. அதனாலென்ன, இப்பொழுது வந்ததும் கேட்டுவிட்டால் போகிறது!

     இந்த முடிவுடன் அவள் எழுந்து விளக்கைப் பொருத்தப் போன போது, வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. ‘அதோ அவரும் வந்துவிட்டார்!’ என்ற மகிழ்ச்சியுடன் அவள் பொருத்திய விளக்கைக் கைகூப்பி வணங்கிவிட்டு வெளியே வந்தாள்.

     “அருணா! இப்படிக்கூடச் செய்யலாமா நீ?” என்று கேட்டுக் கொண்டே அவளுக்கு எதிர்த்தாற் போல் வந்து நின்றான் மோகன்!

     அவ்வளவுதான்; அவளுடைய மகிழ்ச்சி இருந்த இடம் தெரியாமல் பறந்தது. ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், “அப்படி என்ன செய்துவிட்டேன் நான். அதற்கும் குறுக்கே தான் இவர் வந்து நின்று விட்டாரே? வா அண்ணா, வா பாமா!” என்று அவர்களை உள்ளே அழைத்துக் கொண்டு சென்றாள் அவள்.

     அதற்குள் காரைக் கொண்டு போய் அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு வந்த பரந்தாமன், “என்ன அருணா! எப்படி இருந்தது, என் சமையல்?” என்று கேட்டார்.

     “சமைத்தவர்களைத் தவிர வேறு யாரும் அதைச் சாப்பிட முடியாது போலிருந்தது” என்றாள் அவள்.

     “அப்படியானால் நீ அதைச் சாப்பிடவேயில்லையா?”

     “சாப்பிட்டேன், நீங்கள் எடுத்துக் கொண்ட சிரமத்துக்காக!”

     “நன்றி; அதேமாதிரி இப்பொழுது நான் சுடப்போகும் ரொட்டியையும் நீங்கள் அனைவரும் துணிந்து சாப்பிட்டு என்னைக் கௌரவிக்க வேண்டும்!” என்று சொல்லிக் கொண்டே சென்று, தன் ‘ஆபீஸ் வேட’த்தைக் களைந்து விட்டு, அடுக்களைக்குள் நுழைந்தார் அவர்.

     “ஏன், இவரைத் தவிர இந்த வீட்டில் வேறு யாரும் கிடையாதா?” என்று கேட்டாள் பாமா.

     “இல்லை; இருந்த ஓர் அம்மாவும் பெண்ணின் பிரசவத்துக்காக ஊருக்குப் போயிருக்கிறாராம்!” என்றாள் அருணா.

     “அடப் பாவமே, அதற்காக ஆபீசிலிருந்து வந்ததும் இவர் அடுக்களைக்கா போவது? சார், இங்கே வாருங்கள் சார்! நான் வேண்டுமானால் அந்த ரொட்டியைச் சுட்டுத் தருகிறேன்!” என்றாள் பாமா.

     “வேண்டாம்; இன்று ஒரு நாள் தானே உங்களால் சுட்டுக் கொடுக்க முடியும், நாளைக்கு?” என்றார் அவர்.

     “அதற்கு ஒரு சமையற்காரனையாவது வைத்துக் கொண்டிருக்கலாமே?” என்றாள் அவள்.

     “ஏற்கெனவே நமக்குள் இருக்கும் வகுப்புகள் போதாதென்று அப்படி ஒரு வகுப்பைச் சிலர் வளர்த்துக் கொண்டு வருகிறார்கள்; ‘அந்தத் தொண்’டில் நானும் ஈடுபட விரும்பவில்லை. ஏனெனில், அவரவர்களுடைய வேலையைக் கூடிய வரை அவரவர்களே செய்து கொள்ள வேண்டுமென்று விரும்புபவன் நான்!” என்றார் அவர்.

     இந்தச் சமயத்தில் மோகன் குறுக்கிட்டி, “அதற்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் இருந்து விடாதீர்கள்; அதனால் ஒரு பெண்ணின் வாழ்வு பாதிக்கப்படலாம்!” என்றான் சிரித்துக் கொண்டே.

     “முதலில் உங்கள் கல்யாணம் நடக்கட்டும்; அதற்குப் பிறகு என்னுடைய கல்யாணத்தைப் பற்றி நான் யோசிக்கிறேன்!” என்றார் அவர்.

     இதைக் கேட்டதும் தன்னை மனதில் வைத்துக் கொண்டுதான் அவர் அப்படிச் சொல்கிறாரோ என்று நினைத்தது அருணாவின் உள்ளம்; ஆனால் அவர் அப்படி நினைக்கவில்லை!

     சிறிது நேரத்துக்குப் பிறகு அவர்கள் நால்வரும் சேர்ந்தாற் போல் ரொட்டியுடன் போராடிக் கொண்டிருந்த போது, “ஆமாம், இவர்கள் மட்டும்தான் உங்களுக்குக் கிடைத்தார்களா இங்கே அழைத்துக் கொண்டு வர? அப்பாவும், அம்மாவும் கிடைக்கவில்லையா?” என்றாள் அருணா, பரந்தாமனை நோக்கி.

     அவளுடைய கேள்வியில் இருந்தக் குத்தலை ஒருவாறு புரிந்து கொண்ட பரந்தாமன், “இல்லை; நீதான் உன் வீட்டு முகவரியையே என்னிடம் சொல்ல விரும்பவில்லையே! அவர்களை எப்படி என்னால் இங்கே அழைத்துக் கொண்டு வர முடியும்?” என்றார் அமுத்தலாக.

     “ஏன், அண்ணாவைக் கேட்டிருந்தால் தெரிந்திருக்குமே?”

     “மறந்துவிட்டேன்!”

     “ஐயோ பாவம்! இப்பொழுது வேண்டுமானால் கேட்டுக் குறித்து வைத்துக் கொள்கிறீர்களா?”

     “வேண்டாம்; அவசியமானபோது அதை நானே தெரிந்து கொள்கிறேன்!”

     “ஏன், இப்பொழுது தெரிந்து கொள்ள விரும்பவில்லையா?”

     “இல்லை. ஏனெனில், இன்னும் கொஞ்ச நாட்கள் நீ இங்கேயே அஞ்ஞாத வாசம் செய்வதுதான் நல்லது என்று உன் எதிர்கால அண்ணி நினைக்கிறார்!”

     இதைக் கேட்டதும் அதுவரை புயல் வீசிக் கொண்டிருந்த தன் உள்ளத்தில் அமைதி தவழ, “உண்மையாகவா?” என்றாள் அருணா.

     “ஆமாம், அருணா! உன் ‘மரண சாஸன’த்தால் கூட அப்பாவின் மனத்தை மாற்ற முடியவில்லை; அப்படி இருக்கிறது அவருடைய பேச்சு, நடவடிக்கை எல்லாம். அதனால் தான் சொல்கிறேன், இன்னும் கொஞ்ச நாட்கள் நீ இங்கேயே இருப்பது நல்லதென்று!” என்றான் மோகன், என்றுமில்லாத பொறுப்புணர்ச்சியுடன்.

     “அதற்கென்ன அண்ணா, அப்படியே இருக்கிறேன்; அவரைப் பொறுத்தவரை இறந்தவள், இறந்தவளாகவே இருக்கக்கூட நான் தயார்!” என்றாள் அருணா.

     “அதுதான் சரி! அதற்குக் குறுக்கே நிற்க அந்தக் கடிதம் ஒன்றுதான் இருந்தது; அதுவும் தான் இப்போது உங்களிடமே வந்து சேர்ந்து விட்டதே?” என்றாள் பாமா.

     “ஆனால் எங்கே இருப்பது? அதுதான் இப்போதுள்ள பிரச்னை!” என்றான் மோகன்.

     “அதுதான் நீங்கள் என்னை இங்கேயே இருக்கச் சொன்னதாக இவர் சொல்கிறாரே, இருக்கிறேன்!”

     “இங்கே கொஞ்ச நாட்கள் வேண்டுமானால் இருக்கலாம்; அதற்குப் பிறகு?”

     “கல்யாணத்தைச் செய்து, அவள் கணவனுடன் அவளை அனுப்பி விடுங்கள்!”

     இதைச் சொல்லிவிட்டுப் பரந்தாமன் அருணாவை ஒரு தினுசாகப் பார்த்தார்; அவளும் அவரை ஒரு தினுசாகப் பார்த்து, “எங்கே விற்கிறான் அந்தக் கணவன், என்ன விலை?” என்று கேட்டாள் எரிச்சலுடன்.

     “விசாரித்துச் சொல்கிறேன்!” என்றார் அவர், அப்போதும் அமைதியாக.

     அதற்குள் பாமா குறுக்கிட்டு, “ஏன், எங்கள் வீட்டுக்கு வேண்டுமானால் வந்து இருக்கட்டுமே?” என்றாள் மோகனிடம்.

     “இருக்கலாம். ஆனால் அவள் இருக்கும் இடம் அப்பாவுக்குத் தெரிந்து அவர் ஒருவேளை வந்தாலும் சமாளிக்கக் கூடிய இடமாயிருக்க வேண்டும்; உங்களால் முடியுமா, அவரைச் சமாளிக்க?” என்று மோகன் கேட்டான்.

     “அது கொஞ்சம் சந்தேகம்தான்!” என்றாள் பாமா.

     இந்தச் சமயத்தில் பரந்தாமனின் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டே, “இவரால் மட்டும் அப்பாவைச் சமாளிக்க முடியும் என்று நினைக்கிறாயா, அருணா? எனக்குத் தோன்றவில்லை. இவர் அவரைக் கண்டதும் ஓடியே விடுவார்!” என்றான் அவருடைய வீரத்தைச் சற்றே சோதிக்க எண்ணி.

     “வந்து பார்க்கட்டும். அதற்குப் பிறகு நான் ஓடுகிறேனா, இல்லையா என்பதை நீயே தெரிந்து கொள்வாய்!” என்றார் அவர், அடக்கமாயிருந்தாலும் தாமும் ஓர் ‘ஆண் பிள்ளை’ என்ற உணர்வுடன்.

     “சரி, அதைப் பற்றிப் பின்னால் யோசிப்போம்; இப்போது நான் வருகிறேன்!” என்று மோகன் எழுந்தான்.

     “அதற்குள் என்ன அவசரம், உட்கார் அண்ணா!” என்றாள் அருணா.

     “ரொம்ப அழகுதான்! இங்கே உன்னைப் பார்த்ததும் நான் சாப்பிட்டு விட்டேன்; அங்கே அம்மா சாப்பிட வேண்டாமா? உன்னுடைய கடிதத்தைப் பார்த்ததிலிருந்து அவர்கள் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக இருக்கிறார்களே?”

     “அப்படியானால் இங்கே நான் இருப்பதை நீ அவர்களிடம் சொல்லிவிடப் போகிறாயா, என்ன?”

     “சொல்லாமல் எப்படி இருக்க முடியும், அப்பாவிடம் சொல்லாவிட்டாலும் அம்மாவிடம் சொல்லித்தானே ஆக வேண்டும்?”

     “அந்த அசட்டு அம்மா அவரிடம் சொல்லாமல் இருக்குமா?”

     “சொல்ல வேண்டாம் என்றால் சொல்ல மாட்டார்கள். அவர்களுக்கும் அவரிடமுள்ள குறைபாடுகள் தெரியத் தானே தெரிகின்றன? இருந்தாலும் கடமை என்று ஒன்று இருக்கிறது பார். அது சிலருடைய விஷயத்தில் மடமைக்கும் ஆதாரமாயிருப்பது போல, அவர்களுடைய விஷயத்திலும் ஆதாரமாயிருந்திருக்கிறது! இல்லாவிட்டால் எல்லாம் தெரிந்திருந்தும் அவரைத் தட்டிக் கேட்காமல் அவர்கள் இருந்திருப்பார்களா?”

     “என்னமோ அண்ணா, எனக்கென்னமோ பயமாய்த்தான் இருக்கிறது!”

     “இன்னொரு விஷயத்தை நான் இதுவரை உன்னிடம் சொல்லவில்லை; அதைச் சொன்னால் நீ இப்படிப் பயப்பட மாட்டாய்!”

     “அது என்ன விஷயம்?”

     “உன்னுடைய கடிதத்தைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார், தெரியுமா? அவரை ஏமாற்றுவதற்காக நீ அப்படி ஒரு கடிதம் எழுதி கடற்கரையில் வைத்துவிட்டு யாரோ ஒருவனுடன் ஓடிப் போய் விட்டாய் என்று நினைக்கிறார்! போதுமா? நீ தைரியமாயிருக்க இன்னும் ஏதாவது வேண்டுமா?” என்றான் அவன் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு.

     அவ்வளவுதான்; “வேண்டாம், அண்ணா! போதும், அதுவே போதும்!” என்று தலையைப் பிடித்துக் கொண்டாள் அவள்.