உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
8. அபூர்வ சகோதரிகள் அன்றிரவு பாமா படுக்கும் போது, “ஏண்டி திருடி, ‘எதுவாயிருந்தாலும் என்னிடம் சொல்லு, என்னிடம் சொல்லு’ என்று தானே உன்னிடம் சொல்லியிருந்தேன்? சொன்னாயா, என்னிடம்?” என்றாள் ராதா, வழக்கம் போல அவளுக்குப் பக்கத்தில் தன்னுடைய படுக்கையையும் விரித்துக் கொண்டே. எதிர்பாராத இந்தக் கேள்வி பாமாவைத் தூக்கி வாரிப் போட்டது - எதற்காகத் தன்னைத் ‘திருடி!’ என்று அழைத்து இப்படிக் கேட்கிறாள், தன் அக்கா? ஒரு வேளை இவளுக்கும் ‘அது’ தெரிந்து விட்டிருக்குமோ? எப்படித் தெரிந்திருக்க முடியும்? இவளுக்காகத்தானே அன்றிரவு அந்தப் புண்ணியவானுடன் ‘ஸ்கூட்ட’ரில் வந்த போது கூட நான் அந்தத் தெரு முனையிலேயே இறங்கி, அங்கிருந்து நடந்தே வீடு வந்து சேர்ந்தேன். இங்கே இருந்த அக்கா, அங்கே இறங்கிய என்னை எப்படிப் பார்த்திருக்க முடியும்? - ஒன்றும் புரியவில்லை அவளுக்கு. எனவே, “எதைப் பற்றிக் கேட்கிறாய், அக்கா?” என்று அவளையே மெல்ல விசாரித்தாள். “போடி, போ! உனக்கென்று ஒருவனை நீ தேடிப் பிடித்திருக்கிறாயாமே, அதை நீ ஏன் என்னிடம் சொல்லவில்லை?” என்றாள் அவள். அவ்வளவுதான்; விஷயம் புரிந்து விட்டது பாமாவுக்கு. ‘இனி மறைப்பதில் பயனில்லை’ என்று நினைத்த அவள், “அதை நான் உன்னிடம் சொல்லலாமா, அக்கா?” என்றாள் ராதாவின் தோள்கள் இரண்டையும் தன் கைகளால் பற்றித் தொங்கிக் கொண்டே. “என்னைத் தவிர உனக்கு வேறு யார் இருக்கிறார்கள் சொல்ல? நான் தானே உனக்கு அப்ப, அம்மா எல்லாம்?” என்றாள் ராதா. இதைச் சொல்லும்போது, குளமான தன் கண்களை மறைப்பதற்காக அவள் கீழே குனிந்தாள். அப்போது அவளுடைய கண்களிலிருந்து உருண்டு திரண்டு வந்த இரண்டு கண்ணீர்த் துளிகள் பாமாவின் கைகளின் மேல் பட்டுச் சிதறின! “ஐயோ, அக்கா! அதற்காக நீ அழுகிறாயா, என்ன? - அழாதே அக்கா! சொன்னால் மரியாதைக் குறைவாக இருக்குமே என்று தான் சொல்லவில்லை. என்ன இருந்தாலும் உன்னை விடச் சிறியவள் இல்லையா, நான்?” என்றாள் பாமா, பதறிப்போய். “போடி பைத்தியமே! சிறியவளாவது, பெரியவளாவது? ‘என் மனம் போல் நீ; உன் மனம் போல் நான்!’ என்று இருந்தால் போதாதா, நாம்? நமக்குள்ளே மரியாதை என்னத்துக்கு, மண்ணாங்கட்டி என்னத்துக்கு?” என்றாள் ராதா. எல்லாவற்றையும் கடந்துவிட்ட அவள் அன்பு பாமாவை என்ன செய்ததோ என்னமோ, ராதாவை அப்படியே சேர்த்துக் கட்டிக் கொண்டு, “என்னுடைய தவறு இப்போதுதான் எனக்குத் தெரிகிறது, அக்கா! நீ எனக்கு அப்பாவும் அம்மாவும் மட்டுமல்ல; தெய்வம்!” என்றாள் நெஞ்சு நெக்குருக. ராதா அவள் கன்னத்தைத் தன் கன்னத்தோடு ஒட்ட வைத்துக் கொண்டு, “ஏண்டி, பாமா! அந்தப் பிள்ளையாண்டானை ஒரு நாள் இங்கே அழைத்து வர முடியாதா, உன்னால்?” என்றாள் மெல்ல. “அவர் என்னமோ, ‘வருகிறேன், வருகிறேன்!’ என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்; நான் தான் அவரை இங்கே வரவேண்டாமென்று தடுத்துக் கொண்டிருக்கிறேன்!” “அதுதான் தப்பு என்கிறார்கள் வாத்தியாரம்மா!” “அவர்களுக்கும் தெரியுமா, அது?” “நல்ல கேள்வி கேட்டாய், போ! அவர்கள் தான் அன்றிரவு உன்னையும் அந்தப் பிள்ளையாண்டானையும் சேர்ந்தாற் போல் பாத்துவிட்டு வந்து என்னிடம் சொன்னார்கள்!” “உண்மையாகவா, அக்கா?” “ஆமாண்டி, ஆமாம்! இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு அவர்கள் ஐயாவுடன் சென்று கொஞ்ச நேரம் கடற்கரையில் உலாவிவிட்டு வருவதில்லையா? அப்போதுதான் உங்களைப் பார்த்தார்களாம். நீ வானொலி நிலையத்துக்கு எதிர்த்தாற் போலேயே வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கி, அவரைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்து விட்டாயாம்!” “அடக் கடவுளே, என்னை யாரும் பார்க்கவில்லை என்றல்லவா இன்று வரை நினைத்துக் கொண்டிருக்கிறேன், நான்?” “அதனாலென்னடி, அவர்கள் உங்களைப் பார்த்ததும் ஒரு விதத்தில் நல்லதாய்ப் போயிற்று, நமக்கு!” “ஏனாம்?” “அவர்கள் என்ன சொல்கிறார்கள், தெரியுமா? - ‘நீ அவளை அப்படியே விட்டுவிடாதே! அவள் பயந்து பயந்து அவனுடன் பழகுவது அவளுக்கும் நல்லதல்ல, அவனுக்கும் நல்லதல்ல; இருவரும் உனக்குத் தெரிந்தே பழகட்டும் - அதுதான் உனக்கும் நல்லது; அவர்களுக்கும் நல்லது’ என்று சொல்கிறார்கள்!” “போ அக்கா, நீ புளுகுகிறாய்!” “வேண்டுமானால் நீயே கேட்டுப் பாரேன்?” “ஊஹும்; நான் கேட்க மாட்டேன்!” “கேட்காவிட்டால் அவர்கள் உன்னை விட்டுவிடப் போகிறார்களா, என்ன? அவர்களே ஒரு நாள் ‘எங்கே அவன்?’ என்று உன்னைக் கேட்டு விடுவார்கள்!” “அவ்வளவுதான்; ஓடியே போய் விடுவேனாக்கும், நான்!” “அப்படி ஓடிக் கீடி வைக்கப் போகிறாய் என்று தான் அவர்கள் எனக்குத் தெரிந்து உங்களைப் பழகச் சொல்கிறார்கள்!” “அவர்கள் சொல்வது சரி; ஆனால் உலகம் ஒப்புக் கொள்ள வேண்டுமே, அதை!” “நமக்கு அவர்கள் தானேடி, உலகம்? - உண்ணும் சோறு அவர்களுடையது; உடுத்தும் உடை அவர்களுடையது; உறங்கும் இடம் அவர்களுடையது - இரண்டு வேளை சமைத்துப் போடுவதற்காக இத்தனையையும் இதவி வரும் ‘அந்த உலக’த்தை விட்டால் நமக்கு ‘வேறு உலகம்’ ஏது?” இந்தச் சமயத்தில் “ராதா, ராதா!” என்று ‘அந்த உலக’மே அங்கு வந்து குரல் கொடுக்கவே, “இதோ வந்து விட்டேன், அம்மா!” என்று பதிலுக்குக் குரல் கொடுத்துக் கொண்டே எழுந்து வெளியே வந்தாள் ராதா. “பாமா வந்துவிட்டாளா?” “வந்து விட்டாள்!” “அவளையும் அழைத்துக் கொண்டு வந்து நீ எங்கள் வீட்டில் வந்து படுத்துக் கொள்!” “ஏம்மா, அவர் இன்னும் வரவில்லையா?” “வந்து விட்டார்! விமானத்தில் வெளியூர் செல்லும் நண்பர் ஒருவரை வழியனுப்பி வைப்பதற்காக அவர் இப்போது மீனம்பாக்கம் போக வேண்டும் என்கிறார். மேலே படித்துக் கொண்டிருந்த பாலுவோ அங்கேயே படுத்துத் தூங்கிவிட்டான். அவனைத் தனியாக விட்டுவிட்டு நான் எப்படிப் போவேன், அவருடன்?” “அவனுக்காக நீங்கள் நிற்பானேன்? போய்விட்டு வாருங்கள் அம்மா, நாங்கள் போய் அவனுக்குத் துணையாகப் படுத்துக் கொள்கிறோம்!” ‘கடவுள்’ மறைந்தார்; ‘பக்தை’ ராதா, தங்கை பாமாவை அழைத்துக் கொண்டு, தான் இருந்த வீட்டுக் கதவையும் இழுத்துப் பூட்டிக் கொண்டு, தம்பி பாலு தூங்கிக் கொண்டிருந்த தன் ‘இறைவனின் உறைவிட’த்திற்குச் சென்றாள். அந்த ‘இறைவனின் உறைவிடம்’ வேறு எங்கும் இல்லை; அவள் இருந்த வீட்டுக்கு முன்னாலேயே இருந்தது. அந்த உறைவிடத்தில் இருந்த ‘ஐயன் சொக்கலிங்கனார்’ சென்னை அரசாங்கக் காரியதரிசிகளில் ஒருவராக பணியாற்றி வந்தார்; ‘அம்மை மீனாட்சி’யோ ராணி மேரி கல்லூரியின் பேராசிரியைகளில் ஒருத்தியாகப் பணியாற்றி வந்தாள். ‘புத்திர பாக்கியம்’ எதுவும் இல்லாத அவர்களுக்குப் ‘பொங்கிப் போடும் பாக்கிய’த்தைப் பெற்றிருந்தாள் ராதா. அந்த ஒரு பாக்கியத்துக்காக ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் எஜமானி - வேலைக்காரி என்று அவர்களுக்கு இடையே ஏற்பட்டிருந்த தொடர்புதான் இன்று இந்த நிலைக்கு அவர்களைக் கொண்டு வந்திருந்தது - அபூர்வ சகோதரிகளுக்கு ஏற்ற அபூர்வ எஜமானிதான் இல்லையா? காதலும் கல்யாணமும் : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
|